பாலில் பகல் கொள்ளை.. ஒரு லிட்டர் ரூ.150.. ஆதாயம் தேடுவதை அரசு வேடிக்கை பார்ப்பதா? சசிகலா சாடல்
சென்னை: மழை வெள்ளத்தால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் ஒரு லிட்டர் பால் 150 ரூபாய்க்கு விற்பனை செய்து பகல் கொள்ளை அடிப்பதாக சசிகலா குற்றம் சாட்டியுள்ளார். திமுக அரசு வேடிக்கை பார்ப்பது மிகவும் கண்டனத்திற்குரியது என்றும் சசிகலா தெரிவித்துள்ளார்.
சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், "வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்கள் பாதிப்படைந்துள்ளன. இதன் காரணமாக தமிழக மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி மிகவும் துன்பப்படுகின்றனர்.

பாதிக்கப்பட்ட மக்களை காக்க தவறிய திமுக தலைமையிலான அரசு எந்தவித நிவாரண பணிகளையும் மேற்கொள்ளாமல் வேடிக்கை பார்ப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. தமிழகத்தில் கடந்த மூன்று தினங்களாக அடிப்படை தேவையான குடி தண்ணீர், உணவு, ஆவின் பால் கூட கிடைக்காமல் மக்கள் பரிதவிக்கிறார்கள்.
சென்னையில் உள்ள மக்கள் புயல் மழையால் ஏற்கனவே பல்வேறு இன்னல்களை அனுபவித்து வரும் நிலையில் அத்தியாவசிய பொருளான பால் கிடைக்காமல் ஒரு லிட்டர் ஆவின் பால் 150 ரூபாய்க்கு வாங்குகிற அவல நிலை நிலவுகிறது. இத்தகைய பகல் கொள்ளை நடப்பதை திமுக தலைமையிலான அரசு தடுக்காமல் வேடிக்கை பார்ப்பது ஏன்? என்று தெரியவில்லை.
திமுகவினருக்கு இதில் மிகப்பெரிய பங்கு இருப்பதாகத்தான் பொதுமக்கள் கருதுகின்றனர். இதுபோன்று தமிழக மக்களின் அவல நிலையை பயன்படுத்தி திமுகவினர் ஆதாயம் தேடுவது மிகவும் கொடுமையானது. புயல் மழையால் மக்களை காப்பாற்றவேண்டிய நேரத்தில் அவர்களிடமிருந்தே பகல் கொள்ளை நடப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.


Click it and Unblock the Notifications
