நாளை மாலை 6 மணி வரை வரிசையில் நிற்கும் அனைவரும் வாக்களிக்கலாம்! சத்யபிரதா சாகு தகவல்
சென்னை: தமிழகத்தில் நாளை 6 மணிக்கு வரிசையில் நிற்போர் அனைவரும் வாக்களிக்கலாம் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழத தலைமைச் செயலகத்தில் சத்யபிரத சாகு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நாளை காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்குகிறது. நாளை மாலை 6 மணிக்கு வரிசையில் நிற்கும் அனைவரும் வாக்களிக்கலாம்.

வரிசையில் நிற்போருக்கு டோக்கன் வழங்கப்படும். அவர்கள் அனைவருமே வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் 68,321 வாக்குச் சாவடிகள் உள்ளன. இவற்றில் பதற்றமான வாக்குச் சாவடிகளாக 8050, மிகவும் பதற்றமான வாக்குச் சாவடிகளாக 183 கண்டறியப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 39 தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். அவர்களில் 874 பேர் ஆண்கள், 76 பெண்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்து வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் டிரைவிங் லைசன்ஸ் , ஆதார் கார்டு உள்ளிட்ட 13 ஆவணங்களை கொண்டு வாக்களிக்கலாம்.
தமிழகத்தில் மொத்தம் வாக்காளர்கள் 6.23 கோடி பேர் உள்ளனர். முதல் முறை வாக்காளர்கள் 10.92 லட்சம் பேர் உள்ளனர். அது போல் சிவிஜில் செயல் மூலம் 4,861 புகார்கள் வந்தன. அவற்றில் 22 புகார்கள் மட்டுமே நிலுவையில் உள்ளன. மற்றவை தீர்வு காணப்பட்டன. தமிழகத்தில் நாளை நடைபெறும் மக்களவை தேர்தல் வாக்குப் பதிவு பாதுகாப்பு பணியில் 1.3 லட்சம் காவலர்கள் ஈடுபடுத்தப்படுவர்.
1,58,568 வாக்கு பதிவு இயந்திரங்களும் 81,157 கன்ட்ரோல் யூனிட்களும், 86,858 விவிபேட்டும் பயன்படுத்தப்படவுள்ளன. 44,800 வாக்குச் சாவடிகள் வெப் கேஸ்டிங் நுட்ப முறையில் வாக்குப் பதிவு நேரடியாக கண்காணிக்கப்படும். 65 சதவீத வாக்குச் சாவடிகள் ஆன்லைன் மூலம் கண்காணிக்கப்படும். வாகன தணிக்கை , ரெய்டு மூலம் 173.8 கோடி பறிமுதல் செய்யப்பட்டன.
85 வயதுக்கு மேற்பட்டோரின் வீடுகளுக்கே சென்று 67,175 வாக்குகள் பெறப்பட்டன. அது போல் 41,628 மாற்றுத்திறனாளிகளிடம் வாக்குகள் பெறப்பட்டன. ஆக மொத்தம் வீடுகளுக்கே சென்று 1,08,803 பேரிடம் வாக்குகள் பெறப்பட்டன. எனினும் மாற்றுத் திறனாளிகள், 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களை வாக்குச் சாவடிக்கு அழைத்து வர இலவச வாகனங்கள் இயக்கப்படும். இதற்கு 1950 என்ற எண்ணில் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு சத்யபிரத சாகு தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில் பூத் ஸ்லிப் இல்லாவிட்டாலும் வாக்குப் பதிவு மையத்திற்கு சென்றால் எந்த வாக்குச் சாவடி என அடையாளம் காட்ட அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்றார்.
வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்து வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் இருப்பவர்கள் 12 ஆவணங்களை கொண்டு வாக்களிக்கலாம்.
அவை
1. ஆதார் கார்டு
2. 100 நாள் வேலை திட்டத்தின் அடையாள அட்டை
3. வங்கி அல்லது தபால் நிலையங்களில் புகைப்படத்துடன் கூடிய பாஸ்புக்
4. தொழிலாளர் நலத் துறை அமைச்சகத்தின் காப்பீடு அட்டை
5. டிரைவிங் லைசன்ஸ்
6. பான் கார்டு
7. பாஸ்போர்ட்
8. புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணங்கள்
9. மத்திய மாநில அரசுகள், பொதுத் துறை நிறுவனங்களின் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை
10. எம்பிக்கள், எம்எல்ஏக்கள், எம்எல்சிகளுக்கு கொடுக்கப்பட்ட அடையாள அட்டை
11. மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை (UDID)
12. தேசிய மக்கள்தொகை பதிவின் கீழ் கொடுக்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு
ஆகிய 12 ஆவணங்களை கொண்டு வாக்களிக்கலாம் என சத்யபிரதா சாகு தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications