நீ கவர்மென்ட் நடத்துறியா? கந்துவட்டி நடத்துறியா? என்ன சேட்டையா? மத்திய அரசு மீது சீமான் பாய்ச்சல்!
சென்னை: நிர்மலா சீதாராமன் நிதியை யாரிடம் எப்போது கொடுத்தார் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை என்பது தமிழ்நாடு அரசு வைக்கும் முக்கியமான குற்றச்சாட்டாக உள்ளது. ஜிஎஸ்டி மூலமாக நம்மிடம் அதிகளவில் வரியை பெறும் மத்திய அரசு குறைவான நிதியை திருப்பி அளிப்பதாகவும் தொடர்ந்து குற்றம்சாட்டப்படுகிறது. 1 ரூபாயை தமிழ்நாட்டில் இருந்து வரியாகப் பெற்றுக்கொண்டு 29 பைசா மட்டுமே திருப்பி அளிக்கிறது மத்திய அரசு, அதே நேரம், பாஜக ஆளும் மாநிலங்களுக்கு, வரியை விட அதிகமாக நிதி ஒதுக்கப்படுகிறது என திமுக அரசு குற்றம்சாட்டி வருகிறது. புயல் வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு வழங்காமல் இருந்து வரும் நிலையில் இந்த விவகாரம் மீண்டும் வெடித்துள்ளது.

இந்நிலையில் நேற்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ்நாட்டில் இருந்து பெற்ற வரியை விட மத்திய அரசு கூடுதல் நிதியை கொடுத்துள்ளது என்றார். 2014 - 2023 வரை தமிழகத்தில் இருந்து மத்திய அரசு பெற்ற வரி ரூ.6.23 லட்சம் கோடி. அதேநேரம் தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்கிய நிதி ரூ.6.96 லட்சம் கோடி. தமிழகத்தில் இருந்து பெற்ற வரியைவிட கூடுதலாகவே நிதி கொடுத்துள்ளோம் என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “நீ கவர்மெண்ட் நடத்துறியா? இல்லை கந்துவட்டி நடத்துறியா? என் வரியை எடுத்துக்கொண்டு மாதா மாதம் உனக்கு தருகிறேன் என்றால் உனக்கு வேலை என்ன? வேறு ஒரு வேலையும் மத்திய அரசுக்கு இல்லையா? எதற்கு வரியை வாங்கி பிரித்து தர வேண்டும்? அந்த வரியை வைத்து நிர்வாகம் செய்ய சொல்லலாமே?
என் வரியை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டு, அதை வாங்குவதற்கு நாங்கள் கெஞ்ச வேண்டுமா? அது என்ன உங்க காசா? மாநிலங்களின் வருவாய் தானே மத்திய அரசுக்கு வருகிறது. மத்திய அரசு எதை வைத்து வருவாயைப் பெருக்குகிறது? சேட்டை தானே இதெல்லாம். எங்கள் பணத்தை வாங்கிக்கொண்டு பேரிடர் காலத்தில் நாங்கள் பிச்சை எடுக்க வேண்டுமா?
மாநில அரசின் நிதியில்தான் மத்திய அரசு இயங்குகிறது. மத்திய அரசுக்கென்று தனி வருவாய் கிடையாது. வரியாகப் பெற்றதை விட கூடுதலாக நிதி கொடுத்திருப்பதாகக் கூறும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதியை யாரிடம் எப்போது கொடுத்தார்?
இந்தி பேசும் மக்கள் மட்டும்தான் இந்தியாயா? அப்புறம் எதற்கு எங்களை வைத்திருக்கிறீர்கள்? வரிக்காக, எங்கள் நிலத்தின் வளத்திற்காக. வளம் எல்லாவற்றையும் சுரண்டி, நாட்டை சுடுகாடாக்கி விடுவார்கள். மத்திய அரசில் இருந்து வரும் அமைச்சர்கள், சாலை ஓரத்தில் தட்டியை நட்டு, அதில் பாதிக்கப்பட்ட புகைப்படங்கள் ஒட்டியிருப்பதை பார்வையிட்டுவிட்டுச் செல்கிறார்கள். அதற்கு, அங்கேயே இருந்துகொண்டு வாட்ஸ் அப்பில் அனுப்பச் சொல்லலாமே?
திருச்சி விமான நிலைய புதிய முனையத்தை திறந்துவைக்க வர முடிந்த பிரதமர் மோடியால், வெள்ளத்தில் மிதந்து செய்த தூத்துக்குடிக்கு வர முடியவில்லை. விமான நிலைய விரிவாக்கம் யாருக்கானது? மக்கள் செத்துப்போன பிறகு அதை யார் பயன்படுத்துவது?” எனக் காட்டமாகப் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications