அதிகாலையிலேயே டார்ச்சர்.. காவல்துறை மக்களுக்கானதா? ஆளுங்கட்சிக்கானதா? நாதக சீமான் சீற்றம்!
சென்னை: பேராசிரியர் தம்பி கலையரசனை அதிகாலையில் அழைத்துச் சென்று அச்சுறுத்துவதா? எனக் கேள்வி எழுப்பியுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், காவல்துறை மக்களுக்கானதா? ஆளுங்கட்சிக்கானதா? எனவும் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் (MIDS) இணைப் பேராசிரியரும், பொருளாதார ஆய்வாளருமான அன்புத்தம்பி கலையரசனை, ஓர் போலி இன்ஸ்டாகிராம் பதிவைக் காரணமாகக் கூறி அதிகாலையில் வீட்டிலிருந்து காவல்துறையினர் அழைத்துச் சென்றதாக அவர் அளித்துள்ள புகார் பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

எல்லாநிலையிலும் இந்திய ஒன்றிய பாஜக அரசை கனகச்சிதமாகப் பின்பற்றும் தவெக அரசின் ஆணவப்போக்கை கண்டிக்கிறேன். மேலும் புகாரின் அடிப்படையைக்கூட விளக்காமல், தனது தரப்பை எடுத்துரைக்க வாய்ப்பளிக்காமல் அவரை குற்றவாளிபோல் நடத்திய காவல்துறையின் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
பேராசியர் கலையரசன்
காவல்துறைத் தலைமை இயக்குநருக்குத் தம்பி கலையரசன் எழுதியுள்ள கடிதத்தில், அக்டோபர் 28 அதிகாலை ஐந்து மணியளவில் சாதாரண உடையில் வந்த மூன்று காவலர்கள், தனது கைப்பேசியைப் பறித்துக்கொண்டு, புகார் நகலையோ முதல் தகவல் அறிக்கையையோ காட்டாமல் வாடகைக் காரில் அழைத்துச் சென்றதாகவும், குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கக்கூட உடனடியாக வாய்ப்பளிக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். ஒரு பேராசிரியரை இவ்வாறு பயங்கரவாதி போல நடத்த வேண்டிய அவசரமும் அவசியமும் என்ன?
பொய் வழக்கு
பல்லாவரம் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் குறித்த இழிவான பதிவு இடம்பெற்றதாகக் கூறப்படும் இன்ஸ்டாகிராம் கணக்கிற்கும் தனக்கும் தொடர்பில்லை என்றும், தனக்கு இன்ஸ்டாகிராம் கணக்கே இல்லை என்றும் தம்பி கலையரசன் தெளிவுபடுத்தியுள்ளார். அவரது புகைப்படத்தைப் பயன்படுத்திய வேறொரு பெயரிலான கணக்கின் பதிவுக்காக அவரையே அழைத்துச் சென்றிருக்கிறார்கள் என்பதிலிருந்தே அவரின் அண்மை நேர்காணலுக்காகப் போடப்பட்டதுதான் இந்தப் பொய்யாக புனையப்பட்ட வழக்கு என்பது உறுதியாகிறது.
பாஜக அரசு
அவரின் உலக பொருளாதார அறிவும், இந்திய பொருளாதாரக் கொள்கை பற்றிய புரிதலும் நாம் யாவரும் அறிந்ததே. இந்நிலையில் தமிழ்நாட்டின் விலைவாசி உயர்வு தொடர்பான அவரது தர்க்கரீதியான கருத்தை சகித்துக்கொள்ளாமல், அவரை காவல்துறை கொண்டு முடக்க நினைப்பது பச்சை அயோக்கியத்தனமாகும். இதையேதான் இந்திய ஒன்றிய பாஜக அரசும், அண்மையில் ஜன்தர்மந்தர் போராட்டத்தில் அறிவுசார் ஆய்வாளர்களையும் மாணவர்களையும் மிரட்டி ஒடுக்க பொய்வழக்குகளைப் புனைந்து ஒடுக்குமுறையை ஏவியது.
காவல்துறை
பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் குறித்த ஓர் இன்ஸ்டாகிராம் பதிவுக்காக அதிகாலையிலேயே இவ்வளவு வேகமாகச் செயல்படும் காவல்துறை, என் மீதும் நாம் தமிழர் கட்சியினர் மீதும் தொடர்ச்சியாகப் பரப்பப்படும் அவதூறுகளில் இதே வேகத்தைக் காட்டாதது ஏன்? என் மீதான அவதூறுகள் தொடர்பாக நீதிமன்றம் தலையிட்டு வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டிய நிலை ஏற்பட்டதே ஏன்? அதன் பிறகு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? விசாரணை எந்த நிலையில் உள்ளது? தொடர்புடையவர்கள் மீது என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது? காவல்துறை வெளிப்படையாக விளக்குமா?
தவெக
எங்களையும் எங்கள் கட்சியினரையும் தவெகவினர் மிகக் கீழ்த்தரமாகவும் ஆபாசமாகவும் சமூக வலைத்தளங்களில் எழுதுவதை எல்லாம் எதில் சேர்ப்பது? அவற்றின் மீது அளிக்கப்படும் புகார்களுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? ஆளுங்கட்சியினரைப் பற்றிய பதிவென்றால் உடனடி நடவடிக்கை; ஆளுங்கட்சியினர் பிறரை இழிவுபடுத்தினால் அமைதியா? சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது நடைமுறையில் இருக்கிறதா?
போலி கணக்கு
அவதூறையும் ஆபாசத்தையும் யார் பரப்பினாலும் அதனை ஆதாரங்களின் அடிப்படையில் விசாரிக்க வேண்டும். அதேவேளை, அரசியல் விமர்சனத்தையும் மாற்றுக்கருத்தையும் குற்றமாகக் கருதி, ஒரு குற்ற வழக்கை உருவாக்க, போலி கணக்கு மூலம் ஒருவரை அதிகாலை அழைத்துச் சென்று மிரட்ட முற்படுவது, சனநாயகதிற்கு விடுக்கப்படும் சவாலாகும். ஆளுங்கட்சியின் விருப்பத்தை நிறைவேற்றுவது காவல்துறையின் கடமையல்ல; சட்டப்படி மக்களின் உரிமைகளைக் காப்பதே அதன் கடமை!
ஜோசப் விஜய்
ஒன்றிய பாஜக அரசு போல் காவல்துறையை ஏவல் துறையாகப் பயன்படுத்துவதுதான் தவெகவின் நல்லாட்சியா? தம்பி ஜோசப் விஜயின் தூய ஆட்சியா? இவ்விவகாரத்தில் முந்தைய அரசுகள் குப்பை என்றால், இந்த அரசு அழுகிய குப்பையாக இருக்கிறது. ஆட்சிக்கு வந்த ஆறே மாதத்தில், ஒன்றிய பாசக அரசைபோல் அடக்குமுறையை ஏவிவிட்டு, ஜனநாயக விரோதப்போக்கை கையிலெடுப்பது வெட்ககேடானது!
விசாரணை
தம்பி கலையரசன் அளித்துள்ள புகார் மீது நடுநிலைமையுடன் விசாரணை நடத்தப்பட வேண்டும். அவரது புகைப்படத்தைத் தவறாகப் பயன்படுத்திய கணக்கை இயக்கியவர் யார் என்பதைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை அழைத்துச் சென்ற நடவடிக்கைக்கு யார் உத்தரவிட்டார்கள், என்ன ஆதாரத்தின் அடிப்படையில் செயல்பட்டார்கள் என்பதையும் விசாரித்து, தவறிழைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
விரோதப் போக்கு
அறிவுத்தளத்தில் இயங்குவோரையும் பொதுவெளியில் கருத்துரைப்போரையும் அச்சுறுத்தும் இத்தகைய அணுகுமுறையைத் தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். புகார் அளிப்பவரின் கட்சியைப் பார்த்து நடவடிக்கை எடுக்கும் காவல்துறையின் மக்களாட்சி விரோதப் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைத்து, அனைவருக்கும் சமமான சட்டப் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்." என கூறியுள்ளார்.





Click it and Unblock the Notifications
