சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சொந்தமா விமானமே இல்லை.. 54 ஏர்போர்ட் எதற்கு? தனியாருக்கு தாரைவார்க்கவா? பட்ஜெட் பற்றி சீமான் தாக்கு!

வருமான வரி வரம்பு உயர்வு என்பது புதிய வரிமுறைக்குள் மாத சம்பளதாரர்களை தள்ளும் சூழ்ச்சியே என சீமான் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை : இந்த பட்ஜெட் ஏழை மக்களுக்கானதல்ல, முழுக்க முழுக்க பெருமுதலாளிகளுக்கானது, கடந்த 9 ஆண்டுகால மோடி ஆட்சியில் வெளியிடப்பட்ட நிதிநிலை அறிக்கைகளைப்போலவே இந்த நிதிநிலை அறிக்கையும் மக்களை ஏமாற்றும் அறிக்கையாகவே உள்ளது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்த நிலையில், பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் தொடர்பாக அரசியல் கட்சியினரும், பொருளாதார அறிஞர்களும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றன.

இந்த பட்ஜெட்டை பொறுத்தவரை தமிழ்நாட்டுக்கு ஏமாற்றம் தான் என பெரும்பாலான கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் இந்த பட்ஜெட் வழக்கம்போல ஏழை மக்களை வஞ்சிக்கக்கூடிய, நாட்டின் முன்னற்றத்திற்கு துளியும் உதவாத வெற்று அறிக்கை என விமர்சித்துள்ளார்.

பேனா சின்னத்தை உடைப்பீர்களா? பாஜக பி டீம் சீமான் திமிரை அடக்கனும்.. -சுபவீ கொதிப்பு பேனா சின்னத்தை உடைப்பீர்களா? பாஜக பி டீம் சீமான் திமிரை அடக்கனும்.. -சுபவீ கொதிப்பு

நிதி அமைச்சர் பெருமிதம்

நிதி அமைச்சர் பெருமிதம்

2023-24 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். பட்ஜெட் உரையாற்றி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், இது அமிர்த காலத்தின் முதல் பட்ஜெட். விவசாயிகள், பெண்கள் உட்பட அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்திய பொருளாதாரம் சிறப்பாக இருப்பதாக உலகமே அங்கீகரித்துள்ளது. உலகமே பாராட்டுவதால் தலைநிமிர்ந்து பட்ஜெட் தாக்கல் செய்கிறேன் எனத் தெரிவித்தார்.

சீமான்

சீமான்

இந்நிலையில் மத்திய பட்ஜெட் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாஜக அரசின் 2023ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் நாட்டின் வளர்ச்சியை முன்னிறுத்தும் எவ்வித திட்டங்களும் இல்லாதது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. கடந்த 9 ஆண்டுகால மோடி ஆட்சியில் வெளியிடப்பட்ட நிதிநிலை அறிக்கைகளைப்போலவே இந்த நிதிநிலை அறிக்கையும் மக்களை ஏமாற்றும் அறிக்கையாகவே உள்ளது. இந்திய நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள நடப்பு ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் தனி நபர்களுக்கான வருமான வரி வரம்பை உயர்த்தியது வரவேற்கக் கூடியது என்றாலும், புதிய வரி முறைக்கு மட்டுமே அது பொருந்தும் என்று அறிவித்திருப்பது, நடுத்தர மக்களை வஞ்சிக்கும் செயலேயாகும்.

சூழ்ச்சி

சூழ்ச்சி

புதிய வரிமுறை என்பது ஏழை, நடுத்தர மக்களுக்கு எவ்வித சலுகைகளும் இல்லாத வரிமுறையாகும். எனவே, வருமான வரி வரம்பு உயர்வு என்பது புதிய வரிமுறைக்குள் மாத சம்பளதாரர்களை தள்ளும் சூழ்ச்சியேயாகும். அதுமட்டுமின்றி, இப்புதிய வரிமுறை திணிப்பால் பணத்தை சேமிக்க வேண்டும் என்ற மக்களின் மனப்பான்மை குறைவதோடு, LIC போன்ற நம்பகமான அரசு நிதி நிறுவனங்களில் மக்கள் முதலீடு செய்வதும் வெகுவாக குறையும். இதனால் நாட்டின் கட்டமைப்பு சார்ந்த முதலீடுகளில் பெரும் பின்னடைவு ஏற்படும். மேலும், இந்த நிதிநிலை அறிக்கையின்படி தனிநபர் வருமானவரி 9 லட்சம் கோடிகள் என்றும், பெருநிறுவன வருமான வரி வருவாய் 9.23 லட்சம் கோடிகள் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

ஒரே தராசில்

ஒரே தராசில்

இது, மாதத்திற்கு சில ஆயிரங்கள் வருமானம் ஈட்டும் கோடிக்கணக்கான ஏழை, எளிய மக்களையும், பல லட்சம் கோடிகள் லாபமீட்டும் ஒரு சில பன்னாட்டு கூட்டிணைவு பெருநிறுவனங்களையும் ஒரே தராசில் வைப்பதற்கு சமமான செயலாகும். இதுவே, இப்புதிய வரிவிதிப்பு முறையானது மிக மோசமான வரிவிதிப்பு முறை என்பதற்கான சான்றாகும். அதுமட்டுமின்றி, தங்கம் என்பது பாமர மக்களால் சிறுக சிறுக சேர்க்கப்படும் முதலீடாகும். தற்போதைய நிதிநிலை அறிக்கையில் தங்கத்தின் மீதான சுங்க வரியை உயர்த்தியுள்ளது, ஏற்கனவே உச்சத்தில் இருக்கும் தங்கத்தின் விலையை மேலும் பன்மடங்கு அதிகரிக்கச் செய்யும் என்பதால், இனி தங்கம் வாங்குவது ஏழை மக்களுக்கு பகற்கனவாகவே மாறிவிடும். அத்தோடு, கள்ளச்சந்தையில் பெருமளவில் தங்க கடத்தலுக்கும் வழிவகுக்கும்.

முரணான அறிவிப்புகள்

முரணான அறிவிப்புகள்

கைபேசி மற்றும் மின்னணு இயந்திரங்களுக்கான சுங்கவரியை குறைத்துவிட்டு, எரிபொருள்களுக்கான வரிகளை குறைக்காமல் தவிர்த்திருப்பது, இந்த நிதிநிலை அறிக்கை ஏழை மக்களுக்கானதல்ல, முழுக்க முழுக்க பெருமுதலாளிகளுக்கானது என்பதற்கான மற்றுமொரு சான்றாகும். ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் பொது விநியோக கடைகளில் இலவசம் தொடரும் என்று சொல்லிவிட்டு உணவு மானியத்தை 31% விழுக்காடு குறைப்பது கோடிக்கணக்கான ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் கொடுஞ்செயலாகும். விவசாயிகளுக்கு பல லட்சம் கோடிகள் கடன் கொடுப்போம் என்று வாக்குறுதியளிக்கும் இந்நிதிநிலை அறிக்கை, அவர்களுக்கான உரமானியத்தை 22% குறைத்து விவசாயிகளை கடனாளியாக்கவும் வழி செய்கிறது .இத்தகைய ஒன்றுக்கொன்று முரணான அறிவிப்புகள் நிதிநிலை அறிக்கை மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்குகிறது.

நேரடியாக தனியாரிடமே ஒப்படைக்கலாமே

நேரடியாக தனியாரிடமே ஒப்படைக்கலாமே

மேலும், எரிபொருள் மீதான மானியத்தை 75% குறைத்துவிட்டதும், எரிகாற்று உருளை விலையை குறைக்காமல் விட்டுள்ளதும், உணவு பற்றாக்குறையை ஏற்படுத்தி, கடுமையான பஞ்சத்திற்கு வழிவகுக்கும். இந்திய ஒன்றிய அரசுக்கு, சொந்தமாக ஒரே ஒரு விமானம் கூட இல்லாத நிலையில் புதிதாக 54 விமான நிலையங்கள் கட்டப்படும் என்ற அறிவிப்பு வேடிக்கையானதாகும். புதிய விமான நிலையம் கட்டி, அதனை தனியாருக்கு தாரை வார்ப்பதற்கு, எதற்காக அரசே விமான நிலையங்களை கட்ட வேண்டும்? அதனையும் தனியார் நிறுவனங்களிடமே ஒப்படைக்கலாமே? தனியார் நிறுவனங்கள் கேட்டால் ஏழை மக்கள் தங்கள் நிலங்களை தரமாட்டார்கள் என்பதால், அவர்களை ஏமாற்ற இத்தகைய அறிவிப்புகளா? என்ற கேள்வியும் எழுகிறது.

 வெற்று அறிக்கை

வெற்று அறிக்கை

மாநிலங்களுக்கான கடன் திட்டத்தை 50 ஆண்டுகள் நீட்டித்திருப்பது, வருவாய் பற்றாக்குறை அதிகமுள்ள வட மாநிலங்களுக்கு ஆதரவான நடவடிக்கையேயாகும். மேலும், வங்கிகள் முறைப்பாடு சட்டம் (Banking Regulation Act) மற்றும் செபி (SEBI) அமைப்பை வலுப்படுத்துவோம் என்றெல்லாம் கூறிவிட்டு, பல லட்சம் கோடிகள் பங்கு வர்த்தக மோசடிகளில் ஈடுபட்ட அதானி நிறுவனங்கள் மீது ஹிண்டன்பெர்க் நிறுவனம் வைத்த குற்றச்சாட்டுகளை புறம் தள்ளியது, மோடி அரசு உண்மையில் யாருக்காக செயல்படுகிறது என்பதை தெளிவாக்குகிறது. இது வரும் காலங்களில் நாடு சந்திக்கவிருக்கும் மிகப்பெரிய ஊழலை மூடி மறைக்கின்ற செயலேயாகும். ஆகவே, இந்தியாவை ஆளும் பாஜக அரசால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2023 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை என்பது வழக்கம்போல ஏழை மக்களை வஞ்சிக்கக்கூடிய, நாட்டின் முன்னற்றத்திற்கு துளியும் உதவாத வெற்று அறிக்கையேயாகும்" என்று தெரிவித்துள்ளார்.

English summary
This budget is not for the poor people, it is entirely for the big capitalists, like the budgets during the last 9 years of Modi's regime, this financial statement is also a statement that deceives the people, said Naam Tamilar Katchi coordinator Seeman.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X