உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி விளையாட சீமான் போட்ட "ஒரு கண்டிஷன்.." தீயாக பரவும் வீடியோ
சென்னை: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி விளையாட வேண்டும் எனில் தமிழ்நாடு அணியை வெல்ல வேண்டும் என நாம் தமிழர் ஆட்சியில் சவால் விடுவேன் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய பழைய வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்றது. இந்தப் போட்டிகளில் தொடர் வெற்றியைப் பெற்ற இந்திய அணி இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் மோதியது. குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று இந்தியா- ஆஸ்திரேலியா இறுதிப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி ஜெயிக்க வேண்டும் என்பதற்காக ஆலயங்கள், தேவாலயங்கள், மசூதிகள் என அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் பூஜைகளும் வழிபாடுகளும் நடத்தப்பட்டன. ஆனால் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி தோல்வியை தழுவியது. இதனால் இந்திய அணி ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகிற பழைய வீடியோ ஒன்றும் பகிரப்பட்டு வருகிறது. அதில் சீமான் பேசியிருப்பதாவது: நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைக்கும் போது தமிழ்நாடு அணி உருவாக்கப்படும். இந்திய அணியில் தமிழரை சேர்க்கமாட்டேன் என்கிறார்கள். அப்போதுதான் தமிழ்நாடு கிரிக்கெட் அணி எடுப்பேன். இந்திய அணியோடு தமிழ்நாட்டு அணியை மோத விடுவேன். அறிவிப்பு செய்வேன்.. இந்திய அணி உலகக் கோப்பையில் விளையாடப் போகும் முன்பு என்னுடைய தமிழ்நாட்டு அணியை வென்றுவிட்டுதான் போக வேண்டும் என சவால் விடுவேன்.
கிரிக்கெட் அணிக்கு ஆட்களை எங்க இருந்தெல்லாம் எடுப்பேன் பார்த்துக்க. உழைக்கிற கூட்டத்துல இருந்து எடுப்பேன். எந்த பந்து போட்டாலும் சிக்சரா அடிக்கிறவனை தேர்ந்தெடுப்பேன்..ஹ்ஹஹா.. நல்லா சாப்பாடு போடுவேன். மாட்டுக்கறி கொடுப்பேன். ஆட்டுக் கறி கொடுப்பேன்.. சும்மா பேசிகிட்டு இருக்கக் கூடாது. இவ்வாறு அந்த வீடியோவில் சீமான் பேசியிருப்பது பதிவாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications