Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மகளிர் தினத்தில் விவாதமாகிய சீமானின் "பாலியல் வன்கொடுமைகள் அதிகம்-பெண்களை போற்றுவோம்" வாழ்த்து!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சர்வதேச மகளிர் தினத்தை (மார்ச் 8) முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டிருந்த வாழ்த்துச் செய்தி சமுக வலைதளங்களில் விவாதப் பொருளாகி இருந்தது. சீமான் தமது வாழ்த்துச் செய்தியில், தமிழ்நாட்டில் பாலியல் வன்கொடுமைகள் அதிகம் நிகழ்வதாகவும் பெண்களைப் போற்ற வேண்டும் என கூறியிருந்தார்.

சீமானின் மகளிர் தின வாழ்த்துச் செய்தி: 'மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்! பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்' என்று பெண்களின் பேராண்மையைப் போற்றித் தொழுகிறார் பெரும்பாவலன் பாட்டன் பாரதி.

Womens day 2025 seeman 2025

'பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டில் மண்ணடிமை தீர்ந்துவருதல் முயற்கொம்பே!' என்று பெண்ணிய விடுதலைக்கு பெருமுழக்கம் எழுப்புகிறார் தாத்தா புரட்சிப்பாவலர் பாரதிதாசன்.

'மங்கையராகப் பிறப்பதற்கே மாதவம் புரிந்திட வேண்டுமம்மா!' என்று பெண்களைப் போற்றிக் கொண்டாடுகிறார் தாத்தா கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை.

'பெண்ணினுள் ஆணும் ஆணினுள் பெண்ணும் அண்ணுற வகுத்த அருட்பெருஞ்சோதி!' எனும் பாக்களின் வழியே பாலினச் சமத்துவத்தைப்
போதிக்கிறார் நம்முடைய மூதாதை திருவருட்பிரகாச வள்ளலார் பெருமானார்.

'பெண் விடுதலை இல்லையேல், மண் விடுதலை இல்லை!' எனக்கூறி பெண்ணியத்தின் பெருந்தேவையைப் பேரறிவிப்பு செய்கிறார் தமிழ்த்தேசியத் தலைவர் என்னுயிர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன்.

பெண்களைப் போற்றிக் கொண்டாடுவதே தமிழர்களின் அறம் வகுத்துத் தந்த உயர்நெறியென அதனை அடியொற்றினார்கள் தமிழின முன்னவர்கள்.

தாய்வழிச்சமூகமான தமிழ்ச்சமூகத்தில் ஆதிகாலந்தொட்டே பெண்களுக்கு முன்னுரிமையும், முதன்மைத்துவமும் வழங்கப்பட்டு வந்திருக்கிறது; தமிழ்ச்சமூகத்திற்கு பெண்களே தலைமை வகித்திருக்கிறார்கள்.

Womens day 2025 seeman 2025

இடைக்காலத்தில் தமிழ்நாட்டில் நிகழ்ந்த அந்நியப் பண்பாட்டுப் படையெடுப்புகளால்தான் பெண்களுக்குரிய தலைமை திட்டமிட்டுப் பறிக்கப்பட்டு பெண்ணடிமைத்தனம் வேரூன்றியிருக்கிறது. அத்தகைய அடிமைத்தனத்திற்கும், உரிமைப் பறிப்புக்கும் எதிராகப் போராடி மெல்ல மெல்ல மேலெழுந்து வரும் பெண்களை அடக்கி ஒடுக்கும் விதமாகப் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அண்மைக்காலத்தில் பல்கிப்பெருகி வருவது பெண்களின் சுதந்திரத்தைப் பறிப்பதாகவும், அவர்களின் பாதுகாப்பான வாழ்க்கை முறையினைக் கேள்விக்குறியாக்குவதாகவும் உள்ளது.

தமிழ்நாட்டில் அண்மைக்காலமாகத் தொடர்ச்சியாக பள்ளிச்சிறுமிகள் முதல் கல்லூரி செல்லும் இளம்பெண்கள் வரை பாலியல் வன்கொடுமை செய்யப்படும் சமூகப்பேரவலம் அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் ஐந்திற்கும் மேற்பட்ட பள்ளிக் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டத் துயரமும், கடந்த ஒரு மாதத்தில் 26 பள்ளிக்குழந்தைகளுக்குப் பாலியல் வன்கொடுந்துயரங்கள் நிகழ்ந்தன எனும் இதயத்தை அறுக்கும் செய்தியும், மனச்சான்று உள்ள எவரும் ஏற்கவே முடியாத பெருங்கொடுமையாகும்.

தமிழ்நாட்டில் பெண்கள் மீதான வன்கொடுமைகளைத் தடுக்க மாநில சமூக நலத்துறை, மாநில மகளிர் ஆணையம், மாவட்ட சமூக பாதுகாப்பு அலுவலகம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான குற்றத் தடுப்பு பிரிவு, அனைத்து மகளிர் காவல்நிலையம் என பல்வேறு அமைப்புகள் இருந்தபோதிலும், குழந்தைகள் மீதான வன்கொடுமைகளைத் தடுக்க, குழந்தைகள் நலம் மற்றும் மாநில குழந்தைகள் நல ஆணையம், மாவட்ட குழந்தைகள் நலக்குழுமம், சிறப்பு போக்சோ நீதிமன்றங்கள், மாநில சட்ட குழுமம், பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவி மையங்கள் என கணக்கிலடங்கா அரசு சார்ந்த, அரசு சாரா தன்னதிகார அமைப்புகள் மற்றும் சிறப்பு சட்டங்கள், சிறப்பு நீதிமன்றங்கள் இருந்தும் இன்றுவரை பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான வன்கொடுமைகள் குறைந்தபாடில்லை.

இக்கொடுமைகளுக்கு அடிப்படை காரணமாக அமைவது அரசு விற்கும் மதுவும், கட்டுங்கடங்கா கஞ்சா விற்பனையும்தான். திராவிட ஆட்சியில் நிலவும் கட்டற்ற போதைப்புழக்கத்தால் நாம் வாழும் சமூகமே குற்றச்சமூகமாக மாறி நிற்பதால்தான் பெண்கள் மீதான வன்கொடுமைகள் பன்மடங்கு பெருகியுள்ளது. அண்மையில் சென்னை படூரில் இரண்டாம் ஆண்டு்படிக்கும் சக மாணவிகளுடன் மது அருந்திய கல்லூரி மாணவி உயிரிழந்த கொடுந்துயரம், மதுவினால் தமிழ்ச்சமூகம் எந்த அளவிற்கு முற்றுமுழுதாய் அழிந்துகொண்டிருக்கிறது என்பதற்கு தக்கச்சான்றாகும். தமிழ் இளம் தலைமுறையைச் சீரழிக்கும் மது போதையினை ஒழிப்பதன் மூலம் மட்டுமே பெண்களின் பாதுகாப்பான நல்வாழ்வினை உறுதிசெய்ய முடியும்!

பெண்களுக்கு எதிரான கொடுமைகளை முற்று முழுதாக களைந்திட, பெண்களை அரசியல் அதிகாரப்படுத்துவதே முதன்மை வாய்ப்பென்பதை உணர்ந்து, பாலினச்சமத்துவத்தை நிலைநாட்டவும், பெண்களுக்குரிய உரிமைகளைப் பெற்றுத்தரவும் நாம் தமிழர் கட்சி சமரசமின்றி சமர் செய்யும் என உறுதியளிக்கிறேன்.

இந்த ஒரு நாள் மட்டும் மகளிர் நாள் அல்ல ஒவ்வொரு நாளும் மகளிர் நாள் தான் என மனதில் கொள்வோம். உலக மகளிர் அனைவருக்கும் மகளிர் நாள் நல்வாழ்த்துகள்! பெண்களைப் போற்றுவோம்! பெருமைமிக்க நாடாக மாற்றுவோம்! இவ்வாறு சீமான் தெரிவித்திருந்தார்.

விவாதமான வாழ்த்துச் செய்தி

சீமானின் இந்த மகளிர் தின வாழ்த்துச் செய்தி சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளானது. இதற்கு காரணம் சீமான் மீது நடிகை முன்வைத்து வரும் பாலியல் பலாத்கார விவகாரமும் இதற்கு சீமான் தந்த விளக்கங்களும்தான்.

நடிகையின் புகார் என்ன?

2008-ம் ஆண்டு சீமான் தம்மை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி உறவு வைத்துக் கொண்டதாகவும் இதனால் 7 முறை கருக்கலைப்பு செய்ய நேரிட்டதாகவும் நடிகை புகார் தெரிவித்திருந்தார். 2011 முதல் இந்த புகாரை நடிகை தெரிவிப்பதும் பின்னர் திரும்பப் பெறுவதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த வழக்கை சீமான் ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்; ஆனால் சென்னை உயர்நீதிமன்றமோ, சீமான் மீதான வழக்கை விசாரிக்க உத்தரவிட்டது.

உச்சநீதிமன்றத்தில் நடந்தது என்ன?

சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக சீமான் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அங்கு, பாதிக்கப்பட்ட நடிகைக்கு நஷ்ட ஈடு வழங்குவது தொடர்பாக அதிகாரப்பூர்வமற்ற முறையில் பேச்சுவார்ததை நடத்துவதாக சீமான் தரப்பில் கூறப்பட்டதை நீதிமன்றம் ஏற்றது.

சீமானின் சர்ச்சை கருத்துகள்

இதனிடையே நடிகை பலாத்காரம் தொடர்பாக ஒரே நாளில் பல முறை செய்தியாளர்களை சந்தித்த சீமான், வயதுக்கு வந்து குச்சி கட்டி வைத்திருந்த பெண்ணை தூக்கிக் கொண்டு போய் சோளக்காட்டில் வைத்து பலாத்காரம் செய்யவில்லையே; என்னிடம் விரும்பி வந்து உறவு வைத்துக் கொண்டார் நடிகை என கூறினார். அதேபோல், நடிகை ஒரு பாலியல் தொழிலாளி என்றார். அத்துடன் பணத்துக்காக என்னுடையன் படுத்தவ அந்த நடிகை என்றும் சீமான் கடுமையாக பேசியிருந்தார். சீமானின் இந்த பேச்சுக்கு பல்வேறு தலைவர்கள் கடும் கண்டனமும் தெரிவித்திருந்தார். இந்த பின்னணியில்தான் சீமானின் மகளிர் தின வாழ்த்துச் செய்தியும் விவாதப் பொருளாகி இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+