பச்சைக்கிளி என்ற வார்த்தையே இல்லையே.. ராகுல் பேசியதை தப்பு தப்பாக மொழிபெயர்த்த செல்வப்பெருந்தகை
சென்னை: "ஏன்டா... அந்தப் பேப்பர்ல பச்சைக்கிளிங்கிற வார்த்தையே இல்லையேடா, அப்புறம் எப்படிடா நீ அத வாசிச்ச என்று சரத்குமாருக்கு வடிவேலு கடிதம் வாசித்ததை ஒருவர் கேட்பார்.. கிண்டலுக்காக மொழிபெயர்ப்பு தவறுகளுக்கு இந்த மீம்ஸ் தான் டிரேட் மார்க் ஆக இருக்கிறது.அதுதான் ராகுல் காந்தியின் நேற்றைய மொழி பெயர்ப்பிலும் நடந்தது.. ராகுல் காந்தி ஆங்கிலத்தில் பேசும் போது, , நேற்று மோடி முகத்தை பார்த்தால் நம்பிக்கையை இழந்துவிட்டதாக கூறுவார். ஆனால் செல்வப்பெருந்தகையோ, மோடி முழுமையாக நம்பிக்கையோடு இருந்தார் என்று கூறினார். இப்படி பல இடங்களில் தப்பு தப்பாக செல்வப்பெருந்தகை மொழிபெயர்த்த காரணத்தால் கிண்டலுக்கு உள்ளாகி வருகிறது.
ராகுல் காந்தி ஒவ்வொரு முறை வரும் போது ஆங்கிலத்தில் தான் பேசுவார்.. அப்படி பேசும் போது, அவரது பேச்சை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் லைவ் ஆக தலைவர்கள் மொழி பெயர்ப்பார்கள்.. ஆனால் அந்த மொழி பெயர்ப்பு தவறாகவே முடிந்துள்ளது. இதற்கு முன்னால் தங்கபாலு இருந்த போது ராகுல் காந்தியின் மொழி பெயர்ப்பு தவறாக இருந்தது. அதேபோல் செல்வப்பெருந்தகையும் மொழி பெயர்ப்பில் நேற்று தவறு செய்தார். அந்த மொழி பெயர்ப்பு தற்போது கிண்டலுக்கு உள்ளாகி வருகிறது.

ராகுல் காந்தி பேச்சு
அதில் சில சாம்பிள்களை மட்டும் இப்போது பார்ப்போம்.. ராகுல் காந்தி ஆங்கிலத்தில் பேசும் போது, நேற்று பிரதமர் மோடியின் முகத்தை பார்த்திருப்பீர்கள்.. அவருக்கு இருந்த தன்னம்பிக்கை மொத்தமாக போய்விட்டது. எதிர்க்கட்சி எம்பிக்களின் நேருக்கு நேராக அவரால் முகத்தை கூட பார்க்க முடியவில்லை.. அதற்கு காரணம் என்ன தெரியுமா சகோதர சகோதரிகளே... அவர்கள் அமெரிக்காவால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளனர்.
டிரம்ப் குதிக்க சொன்னால் மோடி குதிப்பார்
அவர்கள் இந்தியாவை விற்க ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள். அவர்(மோடி) நம்முடைய எரிசக்தி பாதுகாப்பை (மற்றவர்களிடம்) தாரைவார்த்து கொடுத்துவிட்டார், நம்முடைய டேட்டாக்களை அவர்களுக்கு கொடுத்துவிட்டார்கள், நமது விவசாயிகளை விற்றுவிட்டார்கள். அவர்கள் சிறுகுறு தொழில் நிறுவனங்களையும் விற்றுவிட்டார்கள்.. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், குதியுங்கள் என்று சொன்னால் மோடி அப்படியே குதிப்பார்.
டிரம்ப்பின் கட்டுப்பாட்டில் மோடி
டொனால்ட் டிரம்ப் பொய் பேச சொன்னால் அப்படியே மோடி பொய் பேசுவார்.. ஏனெனில் மோடியை முழுமையாக டிரம்ப் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். மோடியை எப்படி டிரம்ப் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார் என்றால்.. எப்ஸ்டின் பைல் மூலமாக கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். டிரம்ப்புக்கு பிரதமர் நரேந்திர மோடியை பற்றி எல்லலாமே தெரியும். அதனால் தான் அவர் மோடியின் பைனான்சியல் சிஸ்டத்தையே கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.. மோடிக்கு அதானிக்கும் உள்ள தொடர்பு டிரம்புக்கு நன்றாகவே தெரியும்.
ஸ்டாலினை கட்டுப்படுத்த முடியாது
நரேந்திர மோடி டிரம்பால் எப்படி கட்டுப்படுத்தப்பட்டுள்ளாரோ அதேபோல் தான் நரேந்திர மோடி தமிழக முதல்வர் ஸ்டாலினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளார். அதனை முறியடிக்கவே அதிமுகவின் கையில் அதிகாரத்தை கொடுக்க பிரதமர் மோடி விரும்புகிறார். ஏனெனில் ஸ்டாலினை யாராலும் கட்டுப்படுத்த முடியாது என்று மோடிக்கு தெரியும் " என்று ராகுல் காந்தி கூறினார்.
தவறு 1
ஆனால் செல்வப்பெருந்தகை மொழி பெயர்க்கும் போது, " நேற்று பிரதமர் மோடியின் முகத்தை நீங்க எல்லாம் பார்த்திருப்பீர்கள்.. பிரதமர் மோடி முழுமையாக நம்பிக்கையோடு இருந்தார்கள்.. அவர்களால் எதிர்க்கட்சியை எதிர்த்து கூட பார்க்க முடியவில்லை.. காரணம் நாமெல்லாம் ஒருங்கிணைந்த இந்தியாவாக பார்க்கிறோம்.அவர்கள் நினைக்கிறார்கள் இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று.. நாம் வலிமையாக இருக்கிறோம்..அவர்களிடம் திட்டங்கள் இருக்கின்றன.. எல்லாவற்றையும் விற்றுவிட்டார்கள். இருப்பதை எல்லாம் விற்றுவிட்டார்கள். மோடி விவசாயிகளின் பொருளாதாரம் உள்பட அனைத்தையும் விற்றுவிட்டார். '
தவறு 2
மோடி அவர்கள் கீழே விழுந்திருக்கிறார். கீழே விழுந்து விழுந்து அவர் இந்தியாவிற்கு எதிரான வேலையை பார்க்கிறார்.. எதற்காக அவர் மக்களுக்கு எதிராக செயல்படுகிறார்.. அவர்கள் யாரை கட்டுப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.. நரேந்திர மோடிக்கு தெரியும்.. அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார்.. இந்த தேசத்தை விற்றுக் கொண்டிருக்கிறார்... ஆனால் அவரை எதிர்த்து நான் தொடர்ந்து குரல் கொடுப்பேன். நரேந்திர மோடி என்ன நினைக்கிறார்..
தவறு 3
எல்லாவற்றையும் கட்டுப்படுத்த முடியும் .. தமிழ்நாட்டில் கட்டுப்படுத்த முடியும்.. ஆட்சியை கொண்டுவர வேண்டும் என்று துடிக்கிறார்.. அதுதான் உண்மையான அதிகாரம்.. நரேந்திர மோடி இன்றைக்கு யாரையும் கட்டுப்படுத்தலாம். ஆனால் முதல்வர் ஸ்டாலினை கட்டுப்படுத்த முடியாது " இவ்வாறு தப்பு தப்பாக செல்வப்பெருந்தகை நேற்று மொழி பெயர்த்தார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் கடுமையாக ட்ரோல் செய்யப்படுகிறது
Dear Rahul ji,
— Monkey (@Animalofficiall) April 18, 2026
We always love you so much, regardless of party or alliance.
You really need a proper translator, sir… 😭😭😭😭😭😭😭😭😭😭😭 pic.twitter.com/49qOZJesfr
அமித்ஷாவுக்கும் நடந்துள்ளது
ராகுல் காந்திக்கு மட்டுமல்ல.. அமித்ஷா வரும் போதும் இப்படியான மொழி பெயர்ப்பு தவறுகள் நடந்துள்ளது. அமித்ஷா ஓரளவு தமிழை புரிந்த காரணத்தால் நான் என்ன சொல்கிறேன்.. நீ என்ன சொல்கிறாய் என்று மேடையிலேயே தவறை சுட்டிக்காட்டி திருத்திய சம்பவங்கள் அண்மையில் நடந்தது. ஆனால் ராகுல் காந்திக்கு தமிழ் தெரியாத காரணத்தால் தவறான மொழி பெயர்ப்பு அவருக்கு தெரியாமல் போனது.
பச்சைகிளி என்னாச்சு
அதேநேரம் மேடையில் உள்ள பலருக்கும் அது தவறான மொழி பெயர்ப்பு என்று தெரிந்தும் ஏன் தடுக்கவில்லை அல்லது திருத்தவில்லை என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகிறார்கள். பச்சைகிளி " அந்தப் பேப்பர்ல பச்சைக்கிளிங்கிற வார்த்தையே இல்லையே , அப்புறம் எப்படி நீ அத வாசிச்ச என்று சரத்குமாருக்கு வடிவேலு கடிதம் வாசித்ததை கேட்பது போல் ஒருவர் கூட ராகுல் காந்தி மொழி பெயர்ப்பை கேட்காதது ஆச்சரியமானது என்கிறார்கள் நெட்டிசன்கள். நெட்டிசன் ஒருவர் கூறும் போது, அன்பிற்குரிய ராகுல் ஜி, கட்சி அல்லது கூட்டணி எதுவாக இருந்தாலும், நாங்கள் எப்போதும் உங்களை மிகவும் நேசிக்கிறோம். ஆனால் உங்களுக்கு உண்மையில் ஒரு தகுந்த மொழிபெயர்ப்பாளர் தேவை..." என்று கூறியுள்ளார்














Click it and Unblock the Notifications