ஆதீனங்களை கவுரவப்படுத்துவதால் பாஜகவுக்கு ம்ஹூம்..பிரயோஜனமே இல்லை.. என்.ராம் கடும் தாக்கு
சென்னை: ஆதீனங்களை கவுரவப்படுத்திவிட்டதால் தமிழ்நாட்டில் பெரிதாக பாஜகவுக்கு எந்த ஒரு ஆதாயமும் கிடைக்கப்போவது இல்லை என மூத்த பத்திரிகையாளர் இந்து என்.ராம் விமர்சித்துள்ளார்.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் லோக்சபா சபாநாயகர் இருக்கை அருகே தமிழ்நாட்டில் 1947-ல் தயாரிக்கப்பட்ட செங்கோல் வைக்கப்பட்டது. பிரதமர் மோடி இதனை நிறுவினார். இந்த செங்கோல் 1947-ம் ஆண்டு மவுண்ட்பேட்டன் பிரபுவிடம் இருந்து நேருவிடம் அதிகார மாற்றத்துக்காக அதிகாரப்பூர்வமாக தரப்பட்டது என்பது பாஜகவினர் பரப்பி வரும் கருத்து. ஆனால் இது அப்பட்டமான கட்டுக்கதை என தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் என்.ராம் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாது: அதிகார மாற்றத்துக்காக பதவி ஏற்புக்காக நேருவிடம் விழா எடுக்க வேண்டுமா? என மவுண்ட்பேட்டன் கேட்டதாக சொல்லப்படுவதற்கு எந்த ஒரு ஆதாரம் இல்லை.
1947-ம் ஆண்டு அதிகார மாற்றத்தின் குறியீடாக செங்கோல் வழங்கப்பட்டது என்பதற்கும் ஆதாரம் இல்லை . ஆட்சி அதிகார மாற்றத்துக்காக செங்கோல் கொடுக்கப்பட்டது என கூறப்படுவது கட்டுக்கதை. அதற்கு ஆதாரங்களே இல்லை. திருவாவடுதுறை ஆதீனம், தனிப்பட்ட முறையில் நேருவுக்கு செங்கோல் கொடுத்தார். அவ்வளவுதான்.
நேருவிடம் செங்கோல் வழங்கியது போன்று வெளியான வீடியோ நடிகர்களை வைத்து எடுக்கப்பட்டது. சட்ட ரீதியான, ஆட்சி மாற்றம் தொடர்பான எந்த அம்சமும் செங்கோல் வழங்கியதாகக் கூறப்படுவதில் இல்லை.

தமிழ்நாட்டு ஆதீனங்களை அழைத்து கவுரவப்படுத்தியதால் தமிழ்நாட்டில் பாஜகவுக்கு எந்த அரசியல் ஆதாயமும் கிடைக்கப் போவது இல்லை. செங்கோல் விவகாரத்தால் தமிழ்நாட்டில் எந்த ஒரு அரசியல் ஆதாயத்தையும் பாஜக பெற முடியாது. பாஜக ஆட்சியாளர்களே செங்கோல் தொடர்பான கட்டுக்கதைகளை பரப்பி வருகின்றனர்.
பிரதமராக பதவி ஏற்பு என்பது முக்கிய நிகழ்வு. அவரிடம் கொடுக்கப்பட்ட பல பரிசுகளில் செங்கோல் என்பதும் ஒன்று. அருங்காட்சியகத்தில் தங்க கோல் என்றுதான் எழுதி வைக்கப்பட்டிருந்தது. இவ்வாறு என்.ராம் கூறினார்.
முன்னதாக நேருவிடம் மவுண்ட்பேட்டன் செங்கோல் கொடுத்தது தொடர்பாக தி இந்துவில் செய்தி வெளியானதாக ஒரு தகவலை பாஜகவினர் பரப்பிவிட்டனர். ஆனால் இந்து நாளிதழில் திருவாவடுதுறை ஆதீனம், விளம்பரம் கொடுத்து செங்கோல் செய்தியை வெளியிட்டார் என்பதை இந்து குழும இயக்குநர் மாலினி பார்த்தசாரதி அம்பலப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications