தமிழக அரசியலில் திடீர் சலசலப்பு.. திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு குண்டு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி உள்ளது. இந்நிலையில் தான் திடீரென்று இருகட்சிகளுக்கு இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. திமுக - காங்கிரஸ் கூட்டணி உடைந்து விடும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சொன்ன நேரத்தில் கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி நேரடியாக செந்தில் பாலாஜியை குறிவைத்து திமுகவை விமர்சனம் செய்துள்ளார். இது கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ளதோடு விஜயின் தவெக வருகையில் காங்கிரஸ் தெம்பாக திமுகவை எதிர்ப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் திமுகவும், காங்கிரஸ் கட்சியும் கூட்டணியில் உள்ளது. இந்த கூட்டணி 2026 சட்டசபை தேர்தலிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே தான் தற்போது திமுக - காங்கிரஸ் தலைவர்கள் இடையே புகைச்சல் அதிகரித்துள்ளது.

senthil-balaji-vs-jothimani-is-there-a-rift-in-the-dmk-congress-alliance-rahul-joined-the-rahul

குறிப்பாக காங்கிரஸ் கட்சி ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெறுவதை நோக்கமாக கொண்டு செயல்படுவதாகவும், வரும் சட்டசபை தேர்தலில் திமுகவிடம் கூடுதல் சீட்டுகளை பெறவும் முயற்சி செய்வதாக கூறப்படுகிறது. இதனை திமுக விரும்பவில்லை.

ஜோதிமணி - செந்தில் பாலாஜி சண்டை

இதற்கிடையே தான் கரூர் நகர காங்கிரஸ் மகளிர் அணி தலைவர் கவிதா திமுகவில் இணைந்து விட்டதாகவும், தமிழகம் தலைநிமிர முதல்வர் ஸ்டாலினின் தலைமையே தேவை என்று உணர்ந்து அவர் திமுகவில் இணைந்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டு இருந்தார். பிறகு அந்த பதிவு நீக்கப்பட்டது. கரூர் எம்பியாக காங்கிரஸின் ஜோதிமணி உள்ள நிலையில் தனது கட்சியை சேர்ந்தவரை செந்தில் பாலாஜி திமுகவுக்கு இழுத்ததை அவர் விரும்பவில்லை.

இதனால் ஜோதிமணி கோபமானார். மேலும் வெளிப்படையாக செந்தில் பாலாஜியை விமர்சனம் செய்தார். இதுபற்றி ஜோதிமணி, ‛‛கூட்டணி தர்மம் என்பது இரண்டு பக்கமும் இருக்க வேண்டும். திமுகவின் மாவட்ட செயலாளர், ஒரு முன்னாள் அமைச்சர், காங்கிரஸ் கட்சியை இப்படி பொதுவெளியில் அவமதிப்பதை நாங்கள் எப்படிப் புரிந்துகொள்வது? கூட்டணியின் பெயரால் இதுபோன்ற அவமரியாதையை ஒருபோதும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

ஸ்டாலின் கவனம்

இப்படி நடப்பது இது முதல் முறையல்ல. கூட்டணி என்பது ஒரு கொள்கை அடிப்படையில், பரஸ்பர புரிதல், ஒத்துழைப்பு, நம்பிக்கை மற்றும் மரியாதையின் அடிப்படையில் உருவாக்கப்படுவது. எந்தச் சூழலிலும் இதில் எதனோடும் சமரசம் செய்துகொள்ள முடியாது. கரூர் பார்லிமென்ட் தொகுதியில், காங்கிரஸ் கட்சியின் எம்பி என்ற வகையில் இதற்கு எதிர்வினையாற்ற வேண்டிய, காங்கிரஸ் கட்சியின் சுயமரியாதையைக் காப்பாற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் எனக்கு இருக்கிறது.

இம்மாதிரியான அவமரியாதயை எளிதில் கடந்து போய்விட முடியாது கூட்டணிக்குள் இதுபோன்ற கசப்பான சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப் பெருந்தகை, திமுக தலைவர் ஸ்டாலினின் கவனத்திற்கு எடுத்துச் செல்வார் என்று நம்புகிறேன்'' என்று கூறியிருந்தார்.

தனித்து போட்டியிட தயாராம்

இது சர்ச்சையாகி உள்ளது. அதேபோல் பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆர்விஜே சுரேஷ் அளித்த பேட்டியில், ‛‛தமிழ்நாட்டில் காங்கிரஸ் வளர்ச்சியை காட்டுவதற்காகவும், வாக்கு வங்கியை நிரூபிப்பதற்காகவும் 234 தொகுதகிளிலும் தனித்து போட்டியிட தயாராக உள்ளோம்'' என்று கூறியுள்ளார். இது திமுக கூட்டணியில் குழப்பம் நிலவுவதை எடுத்து காட்டும் வகையில் உள்ளது.

ஏற்கனவே காங்கிரஸ் தலைவர்கள் காமராஜர் தொடர்பான திருச்சி சிவாவின் கருத்துக்கு எதிர்வினையாற்றி இருந்தனர். இந்த சர்ச்சைக்கு முடிவு கட்டப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் காங்கிரஸ் - திமுக இடையேயான கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர்கள் நேரடியாக திமுகவை விமர்சிப்பதோடு, தனித்து போட்டியிடவும் தயார் என்று கூறி வருகின்றனர்.

எடப்பாடி சொன்ன ‛டைமிங்’

மேலும் இதில் கவனிக்கத்தக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் திமுக கூட்டணியில் காங்கிரஸ் பாதிக்கு பாதி அதாவது 234 தொகுதிகளில் 117 தொகுதிகளை கேட்கிறது. இதனால் அந்த கூட்டணி உடையும் என்று எடப்பாடி பழனிச்சாமி ஆரூடம் தெரிவித்த 2 நாளில் மோதல் தொடங்கி உள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் 23ம் தேதி எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணம் செய்தார்.

அப்போது எடப்பாடி பழனிச்சாமி ‛‛திமுக கூட்டணியில் திமுக - காங்கிரஸ் இடையே சண்டை மூண்டுவிட்டது. நெல்லையில் காங்கிரஸ் கூட்டம் நடந்தது... அதில் காங்கிரஸ் தமிழ்நாட்டின் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் சொல்கிறார், வரும் சட்டசபை தேர்தலில் பாதிக்குப் பாதி அதாவது 117 சீட் வேண்டும்" என்று தெளிவாக பேசுகிறார். ஆட்சியில் பங்கு வேண்டும் என்றும் பேசுகிறார்.

அதேபோல் காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவர் ராஜேஷ்குமார், 'தேர்தலில் திமுக வெற்றி பெறாது, அப்படி வெற்றி பெற்றால் எங்களுக்கு ஆட்சியில் பங்கு வேண்டும்' என்று சொல்கிறார். ஆக கூட்டணிக்குள் விரிசல் ஏற்பட்டுவிட்டது... ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற கோஷம் எழுப்பப்பட்டுவிட்டது... திமுக கூடாரம் காலியாகப்போகிறது'' என்றார்.

திமுக தரப்பு சொல்வது என்ன?

தற்போதைய திமுக - காங்கிரஸ் மோதல் எடப்பாடி பழனிச்சாமியின் கணிப்பை சரியாக்குமோ? என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. அதேவேளையில் இதுபற்றி திமுக தலைவர்களிடம் கேட்டபோது, ‛‛கூட்டணி என்றால் பிரச்சனை இருக்கத்தான் செய்யும்.

இத்தகைய பிரச்சனைகள் இயற்கையானவை தான். இந்த பிரச்சனைகள் தேர்தலுக்கு முன்பு தீர்க்கப்படும்'' என்கின்றனர். திமுக கூட்டணியில் பல கட்சிகள் உள்ளன. இந்த கட்சிகள் அதிருப்தியடையும் போதெல்லாம் திமுக மேலிடம் சரிசெய்து விடும். அந்த வகையில் காங்கிரஸ் பிரச்சனையும் திமுக சரிசெய்துவிடும் என்று உடன்பிறப்புகள் நம்புகின்றனர்.

காட்டமாக எதிர்க்கும் காங்கிரஸ்

ஆனால் உண்மையில் கடந்த தேர்தல் காலத்தை விட இப்போது காங்கிரஸ்கட்சியினர் வெளிப்படையாக திமுகவை சீண்ட தொடங்கி உள்ளனர். காங்கிரஸ் இல்லாமல் திமுகவை வெல்ல முடியாது. தேர்தலில் திமுக வென்றால் கூட்டணி ஆட்சி தான் அமைக்க வேண்டும்.

காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் தொகுதிகளை திமுகவிடம் கேட்போம் என்று ராகுல் காந்தியின் ஆதரவாளர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர். இதற்கு பின்னணியிலும் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் உள்ளதாக கூறப்படுகிறது.

விஜயால் வந்த தெம்பு

அதாவது திமுகவிடம் உரிய அங்கீகாரம், மரியாதை, சீட் கிடைக்காவிட்டால் காங்கிரஸ் கட்சி விஜயின் தவெகவுடன் கூட்டணி அமைக்கலாம் என்று கூறப்படுகிறது. அதிமுக கூட்டணியில் பாஜக உள்ளது. இதனால் திமுக உரிய மரியாதை, சீட் கொடுக்காவிட்டாலும் விஜயின் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணியில் இணையலாம் என்று கூறப்படுகிறது.

இதனை டிவி விவாதங்களில் பல காங்கிரஸ் தலைவர்கள் இலைமறை காயாகவும், வெளிப்படையாகவும் கூறிவிட்டனர். இதனால் தமிழகத்தில் நடிகர் விஜயின் அரசியல் வருகை காங்கிரஸ் கட்சியினருக்கு புதிய தெம்பை கொடுத்துள்ளது. மொத்தத்தில், விஜயின் தமிழக வெற்றி கழகத்தை வைத்து திமுகவிடம், காங்கிரஸ் கட்சி பேரம் பேசலாம் என்று வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+