அவர்தான் அண்ணா... ட்விட்டரில் புகழஞ்சலி செலுத்தும் தமிழர்கள் #ANNA_IS_TAMILNADU
கத்தியை தீட்டாதே, புத்தியைத் தீட்டு என்று சொன்ன மாபெரும் தலைவர் அறிஞர் அண்ணாவின் நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. ட்விட்டரில் #ANNA_IS_TAMILNADU என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
சென்னை: அண்ணாவின் 53வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. ட்விட்டரில் பலரும் அண்ணாவின் பொன்மொழிகளைப் பதிவிட்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். #ANNA_IS_TAMILNADU என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
எளிய குடும்பத்தில் பிறந்து, நல்ல மாணவராக, ஆற்றல் மிக்க பேச்சாளராக, சிறந்த பத்திரிகை ஆசிரியராக, நல்ல நூலாசிரியராக , நாடக ஆசிரியராக, திராவிட முன்னேற்றக்கழகம் என்ற பேரியக்கத்தின் தலைவராக, பண்பட்ட அரசியல்வாதியாக, நாடு போற்றிய முதலமைச்சராக புகழ் பெற்றவர் பேரறிஞர் அண்ணா. அவர் மறைந்து 53 ஆண்டுகள் ஆன பின்னரும் அவரது கொள்கைள் கருத்துக்கள் பலராலும் பின்பற்றப்படுகிறது.

1967ஆம் ஆண்டு முதல் 1969 வரை தமிழ்நாட்டின் முதலமைச்சராக அண்ணா இருந்த காலத்தில் சென்னை மாநிலத்தை தமிழ்நாடு என்று அழைக்க, அரசியல் சட்டத்தில் உரிய திருத்தம் செய்ய வகை செய்தவர். சீரும் சிறப்புமாக இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டை சென்னையில் நடத்திக் காட்டியவர்.
தாய்மொழி தமிழ், உலக மொழி ஆங்கிலம் ஆகிய இருமொழித் தீர்மானத்தை சட்டப் பேரவையில் நிறைவேற்றச் செய்தவர். கலப்புத் திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் அளித்தவர். மேடைப் பேச்சுக்கு இலக்கணம் வகுத்தவர். அரசியல் நாகரிகத்தைக் கடைபிடித்தவர். தமிழ், தமிழர், தமிழ்நாடு உயரவும், இளைஞர்கள் எழுச்சி பெறவும், தூங்கிக் கிடந்த தமிழர்களைத் தட்டியெழுப்பி விழிப்புணர்ச்சி ஊட்டவும், காலமெல்லாம் தம் எழுத்துக்களைப் பயன்படுத்தியவர்.

மிக எளிய மனிதர் அண்ணா. குள்ளமாக இருப்பார். அவர்தான் மிகப்பெரும் கட்சியின் தலைவராக உயர்ந்தார். அந்த பிராண்ட் பெயர் அண்ணா என்று ஒருவர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தமிழினம் தலைநிமிர்ந்திட,தன் உயர்ந்த எண்ணங்களால் அயராத உழைப்பால் எளியோருக்கான இயக்கத்தை எளியோரை கொண்டே கட்டமைத்து,இன்றைய நவீன தமிழ்நாட்டை உருவாக்கிட தன் கொள்கை-கழகம்-தம்பிகளை கொண்டு விதையிட்ட பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினமான இன்று அவரை நெஞ்சில் ஏந்தி அயராது உழைக்க உறுதியேற்போம் என்று உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பகுத்தறிவை பயன்படுத்துவதில்லை என்று முடிவு செய்த பிறகு மனிதனிடம் வாதிடுவது என்பது செத்துப்போன மனிதனுக்கு மருந்து ஊட்டுவதற்கு நிகராகும் என்று அண்ணாவின் பொன் மொழியைப் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications