கவர்ச்சியின் உச்சம்.. காத்து கிடந்த தயாரிப்பாளர்கள்.. சின்ன தவறால் அனைத்தையும் இழந்த சில்க் ஸ்மிதா

Subscribe to Oneindia Tamil

சென்னை: 1980கள் மற்றும் 1990களின் தொடக்கத்தில் தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத பெயராக இருந்தவர் சில்க் ஸ்மிதா. ஒரு படத்திற்கு தனி ஆளாக வெற்றியை வாங்கி தரும் அளவுக்கு அவரது புகழ் இருந்தது. அவரது நடன காட்சிகளுக்காகவே ரசிகர்கள் தியேட்டர் சென்ற காலம் அது. தயாரிப்பாளர்களும் அவரது கால்ஷீட்டுக்காக காத்திருந்தனர். ஆனால், இந்த நிலையை அடைய அவர் எதிர்கொண்ட போராட்டங்கள் அதிகம். இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்!

சில்க் ஸ்மிதா ஆந்திர பிரதேசத்தின் கோவ்வலி கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். அவரது இயற்பெயர் வட்லபதி விஜயலட்சுமி, சிறு வயதிலேயே பள்ளி படிப்பை நிறுத்தி குடும்பத்துக்கு உதவ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். சில்க் ஸ்மிதா 4-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தார். குடும்பத்தின் பொருளாதார நிலை மோசமாக இருந்ததால், தனது 10 வயதிலேயே பள்ளியை விட்டு வெளியேறி தாயாருக்கு வீட்டு வேலைகளில் உதவ தொடங்கினார்.

Silk Smitha

சில்க் ஸ்மிதா

அவருக்கு மிக இளம் வயதிலேயே திருமணமும் நடந்தது. 14 வயதில் அவரது பெற்றோர், அவரிடம் தெரிவிக்காமலேயே வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரால் அவர் துன்புறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அந்த கணவரிடம் இருந்து பிரிந்த அவர், தனக்கென ஒரு வாழ்க்கையை உருவாக்க முயன்றார்.

முதலில் வீட்டு வேலைக்கு சென்ற அவர், பின்னர் திரைப்பட ஷூட்டிங்கில் டச்-அப் கலைஞராக பணியாற்றினார். அந்த வேலைதான் அவரை திரைத்துறைக்கு நெருக்கமாக கொண்டு வந்தது. சென்னையில் திரைப்பட ஸ்டுடியோக்களை சுற்றி வேலை செய்து கொண்டிருந்தபோது, ஏவிஎம் ஸ்டுடியோ அருகே உள்ள மாவு ஆலையில் இயக்குநர் வினு சக்ரவர்த்தியின் கவனத்தை சில்க் ஸ்மிதா ஈர்த்ததாக கூறப்படுகிறது. அவருடன் அவரது மனைவி கர்ணா பூவும் இருந்தார்.

திரை வாழ்க்கை

சில்க் ஸ்மிதாவுக்கு அபார திறமை இருப்பதை உணர்ந்த வினு சக்ரவர்த்தி, அவரை சினிமாவுக்குள் அழைத்து வர உதவினார். நடிப்பு, நடனம் என அனைத்திலும் பயிற்சி பெற்றார். மலையாள இயக்குநர் ஆன்டனி ஈஸ்ட்மேனின் படத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த படம் வெளியாவதற்கு முன்பே வேறு சில மலையாள படங்களிலும் அவர் நடித்திருந்தார்.

1980ல் வெளியான தமிழ் திரைப்படமான வண்டிச்சக்கரம் தான் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையில் மிக பெரிய திருப்புமுனையாக அமைந்தது. சிவகுமார், சரிதா நடித்த அந்தப் படத்தில் 'சில்க்' என்ற கவர்ச்சியான கதாபாத்திரத்தில் அவர் நடித்தார். அந்த கதாபாத்திரம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதுடன், அந்த பெயரே அவருடன் நிரந்தரமாக இணைந்தது.

கவர்ச்சி

அவரை பிரபலமாக்கிய அதே கதாபாத்திரம் அவரது சினிமா வாழ்க்கையின் அடையாளமாகவும் மாறியது. உண்மையில் குணச்சித்திர நடிகையாக வேண்டும் என விரும்பிய சில்க் ஸ்மிதாவுக்கு அந்த படத்திற்கு பிறகு கவர்ச்சியான கேரக்டர்கள் மட்டுமே வர தொடங்கியது. இது தொடர்பாக அவர் முன்பு அளித்திருந்த பேட்டியில், "சாவித்திரி, சுஜாதா, சரிதா போன்ற குணச்சித்திர நடிகையாக வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். ஆனால் வண்டிச்சக்கரம் படத்தில் கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடித்தேன். அந்த கதாபாத்திரம் மிகவும் நன்றாக இருந்தது. அதன்பிறகு தொடர்ந்து கவர்ச்சியான கதாபாத்திரங்கள் மட்டுமே வந்தன. தயாரிப்பாளர்கள், இயக்குநர்களை ஏமாற்ற விரும்பாததால் அவற்றை ஏற்றுக்கொண்டேன்" என்றார்.

சில்க் ஸ்மிதா வெறும் கவர்ச்சி நடிகை என்ற நிலையைக் கடந்து, தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். குறிப்பாக அவரது நடன காட்சிகள் மிகவும் பிரபலமானவை. ஒரு திரைப்படத்தில் அவர் நடிக்கிறார் என்றாலே அந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துவிடும். படம் பிஸ்னஸ் ஆகிவிடும். அந்தளவுக்கு ரசிகர்களை கொண்டவராக இருந்தார்.

450+ படங்கள்

தனது சினிமா வாழ்க்கையில் 450+ படங்களில் அவர் நடித்தார். சில திரைப்படங்களில் சில்க் ஸ்மிதாவின் நடன காட்சிகள் இடம்பெறுவது உறுதியான பிறகே அவற்றை விநியோகஸ்தர்கள் வாங்க முன்வந்ததாக கூறப்படுகிறது. அவரது கால்ஷீட் கிடைக்காததால் சில படங்கள் ரிலீஸ் தேதியே கூட தள்ளி போய் இருக்கிறது. அப்போதே ஒரு பாட்டிற்கு சுமார் ரூ.50,000 வரை சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. சில நாட்களில் இரண்டு அல்லது மூன்று நடனக் காட்சிகளிலும் கூட அவர் நடித்ததாகவும் தகவல்கள் உள்ளன.

குறுகிய காலத்தில் தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக உருவானது சிலருக்கு பொறாமையை ஏற்படுத்தியதாக அவர் கூறுகிறார். இது தொடர்பாக அவர் மேலும், "நான் சினிமாவுக்கு வந்து, சுமார் 4 ஆண்டுகளில் 200+ படங்களில் நடித்துள்ளேன். இயல்பாகவே எனது வெற்றியை கண்டு பலர் பொறாமைப்பட்டனர் அவர்கள்தான் என்னை பற்றி தவறான தகவல்களைப் பரப்பினர்" என்று அவர் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

ஏமாற்றம் நஷ்டம்

1990களின் இறுதியில் சில்க் ஸ்மிதாவின் சினிமா வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டது. இளம் நடிகைகள் சினிமாவுக்குள் வரவே அவருக்கான வாய்ப்புகள் மெல்ல குறைய ஆரம்பித்தது. இதனுடன் அவரது தனிப்பட்ட வாழ்க்கையிலும் பிரச்சனைகள் ஏற்பட்ட. நிதி சிக்கலும் அதிகரித்தன. அப்போது அவரது பார்ட்னராக இருந்த டாக்டர் ஒருவர் சொன்னதை கேட்டு சினிமா தயாரிப்பில் சில்க் முதலீடு செய்திருக்கிறார். அவர் 3 படங்களில் முதலீடு செய்த நிலையில், அந்த படங்கள் தோல்வி அடைந்ததால் ரூ.4 கோடிக்கும் அதிகமான தொகையை அவர் இழந்துள்ளார்.

மரணம்

இந்த சூழலில் தான் 1996 செப்டம்பர் 23ம் தேதி சில்க் ஸ்மிதா தனது வீட்டில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அப்போது அவருக்கு வயது வெறும் 35 மட்டுமே. அவரது மரணம் தற்கொலையாக பதிவு செய்யப்பட்டாலும், அதை சுற்றியுள்ள சில கேள்விகள் காலம் கடந்தும் தொடர்கின்றன.

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, சிறுவயதிலேயே பள்ளிப் படிப்பை நிறுத்தி, இளம் வயதில் திருமணத்தை எதிர்கொண்டு, பின்னர் தென்னிந்திய சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவராக உயர்ந்த சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை இறுதியில் சோகத்திலேயே முடிந்தது. அவரது மறைவுக்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகும், அவரது வாழ்க்கை குறித்த ஆர்வம் குறையவில்லை. அவரது வாழ்க்கையைத் தழுவி உருவாக்கப்பட்ட தி டர்டி பிச்சர் படம் மிக பெரிய ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+