சிவகங்கை திருப்புவனம் அஜித்குமார் மரண வழக்கு.. சிபிசிஐடிக்கு மாற்றம்! தமிழக அரசு உத்தரவு
சென்னை: சிவகங்கை திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கினை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் காவலர்கள் என்பதால் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட காவலர்கள் 5 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் மரண வழக்கு தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட காவலாளி அஜித்குமார் என்ற இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்தார். போலீசார் தாக்கியதால் தான் உயிரிழந்ததாக உறவினர்கள் போராட்டம் செய்தனர். தொடர்ந்து நேற்று பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானதன் அடிப்படையில் 5 போலீசார் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சிபிசிஐடிக்கு மாற்றம்
ஏற்கனவே இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில் நேற்று போலீசார் 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்கள் 5 பேருக்கும் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து தற்போது காவலர்கள் 5 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: -சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் மரணம் வழக்கு கு.எண்:303/2025 கொலை வழக்காக மாற்றப்பட்டு கொலை குற்றச்சாட்டில் தொடர்புடைய 5 குற்றவாளிகளை கைது செய்து 15.07.2025 வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். வழக்கு மேலும் விசாரணைக்காக CBCID மாற்றப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
என்ன நடந்தது?
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் அருகே உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக பணியாளராக அஜித் குமார் (28) என்பவர் வேலை செய்து வந்தார். வெள்ளிக்கிழமை எப்போதும் இந்த கோவிலில் கூட்டம் இருக்கும் நிலையில், மதுரையில் இருந்து நிக்தா என்பவர் தனது தாயார் சிவகாமியுடன் இந்த கோவிலுக்கு காரில் வந்துள்ளார்.
அப்போது நிகிதா, தனது காரை ஓரமாக பார்க் செய்யுங்கள் என்று கூறி அஜித் குமாரிடம் சாவியை கொடுத்த்தாக சொல்லப்படுகிறது. தனக்கு கார் ஓட்ட தெரியாது என்று கூறிய அவர் ஒரு ஒருவரை காரை இயக்க சொல்லி ஓரமாக பார்க் செய்ய வைத்ததாக கூறப்படுகிறது. சாமி தரிசனம் செய்துவிட்டு வந்து பார்த்த போது காரில் இருந்த 10 சவரன் நகையை காணவில்லை. இது குறித்து அங்கு பணியில் இருந்த தற்காலிக ஊழியர் அஜித்குமாரிடம் நிக்தா கேட்டுள்ளார்.
5 போலீசார் கைது
அப்போது தனக்கு இதுபற்றி எதுவும் தெரியாது என்று அஜித்குமார் கூறியுள்ளார். இதையடுத்து காரில் இருந்த நகையை காணவில்லை என்று நிகிதா போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் மானாமதுரை குற்றப்பிரிவு தனிப்படை போலீசார், அஜித் குமாரை விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். அப்போது தான் அவரை போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தனிப்படை காவலர்கள் 6 பேரை பணியிடை நீக்கம் செய்து சிவகங்கை மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். தொடர்ந்து பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகு 5 போலீசார் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications