புன்முறுவலுடன் வந்த முதல்வர் விஜய்.. பார்வையை திருப்பிய உதயநிதி? பேரவையை அதிர வைத்த 2 சம்பவங்கள்
சென்னை: சட்டமன்றக் கூட்டத்தொடரில், முதலமைச்சர் விஜய் அவைக்குள் வந்தபோது மற்ற உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்துகிறார்கள், ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மட்டும் தன் இருக்கையிலேயே உட்கார்ந்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதற்கு சட்டமன்றத்தில் நடந்த 2 முக்கிய நிகழ்வுகள்தான் காரணம் என்றும் சொல்லப்படுகிறது.
தமிழகச் சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய்க்கும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கும் இடையே நிலவும் கசப்பான சூழல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வழக்கமாக தலைவர்கள் அவைக்குள் வரும்போது எழுந்து நின்று வணக்கம் செலுத்துவது சட்டமன்ற மரபு. ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் முதலமைச்சர்களாக இருந்தபோதும், தவெக ஆட்சியின் தொடக்கத்திலும்கூட இந்த வழக்கமே பின்பற்றப்பட்டது. ஆனால், தற்போதைய பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்தச் சூழல் முற்றிலும் தலைகீழாக மாறியுள்ளது.
முகத்தை திருப்பி கொண்ட உதயநிதி ஸ்டாலின்
கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட சம்பவம் திமுக தரப்பில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதன் தாக்கம் சட்டமன்றத்திலும் நேரடியாக எதிரொலித்தது. முதலமைச்சர் விஜய் அவைக்குள் வந்தபோது, கே.என்.நேருவைத் தவிர வேறு எந்த திமுக உறுப்பினரும் அப்போது எழுந்து நின்று வணக்கம் தெரிவிக்கவில்லை.
முதலமைச்சர் புன்முறுவலுடன் அவையின் மையப்பகுதி வரை சென்று வணங்கியபோதும், உதயநிதி ஸ்டாலின் தனது பார்வையைத் தவிர்த்து வேறு பக்கம் திரும்பிக் கொண்டார்.
முதலமைச்சர் பதவி
இப்படி உதயநிதியின் இந்த தவிர்ப்பு, அவையின் விவாதங்களிலும் தொடர்ந்தது. சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் "அப்பாவைக் காணோம்" என்று பேசியதும், வேளாண் பட்ஜெட் விவாதத்தின்போது உதயநிதியின் கேள்விகளுக்கு "ஆவணங்களையும் செய்தித்தாள்களையும் சரியாகப் படித்துப் பார்க்க வேண்டும்" எனப் பதிலடி கொடுத்ததும் என இந்த 2 நிகழ்வுகளும், 2 தரப்பிற்கும் இடையிலான மோதலை மேலும் தீவிரமாக்கியுள்ளது.
முதலமைச்சர் பதவி - அடிப்படை மரியாதை
"அரசியல் களத்தில் கொள்கை ரீதியான முரண்பாடுகளும் கடுமையான விமர்சனங்களும் இருப்பது இயல்பானதுதான். ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்திற்குள் தனிப்பட்ட வெறுப்பையும் காழ்ப்புணர்ச்சியையும் வெளிப்படுத்துவது நாகரிகமான அரசியலுக்கு அழகல்ல.
முதலமைச்சர் பதவி என்பது ஒரு தனிநபருக்கோ அல்லது குறிப்பிட்ட கட்சிக்கோ சொந்தமானது கிடையாது.. அது தமிழக மக்களின் ஜனநாயகத் தீர்ப்பினால் உருவான அரசியலமைப்பு பொறுப்பாகும்.. அந்த பதவிக்கு தர வேண்டிய அடிப்படை மரியாதையை தராமல் தவிர்ப்பது சட்டமன்ற மரபுகளைப் பலவீனப்படுத்தும்" என்று சோஷியல் மீடியாவில் கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன.
அதுமட்டுமல்ல, அரசியல் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டிய இடம் அவையின் விவாதங்களே தவிர, அடிப்படை மரியாதையை தவிர்க்கும் செயல்பாடுகள் கிடையாது.. அதுமட்டுமல்ல, மக்கள் பிரதிநிதிகள் ஒவ்வொருவரும் சபையில் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதை பொதுமக்களும் உற்று கவனித்து கொண்டுதான் இருக்கிறார்கள்..
அதனால் அவையின் கண்ணியத்தைக் காப்பதே முதிர்ச்சியான அரசியலுக்கு சான்றாகும் என்றும் மூத்த அரசியல் விமர்சகர்களும் கருத்து கூறி வருகிறார்கள். .!!


Click it and Unblock the Notifications
