தாம்பரம் டூ தஞ்சாவூர்..இன்று இரவு சொந்த ஊருக்கு செல்ல சூப்பர் வாய்ப்பு.. தெற்கு ரயில்வே சர்ப்ரைஸ்
சென்னை: ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை பண்டிகை நாளை தமிழ்நாட்டில் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையை ஒட்டி வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிறு என தொடர்ந்து விடுமுறை வருகிறது. இந்த விடுமுறை சொந்த ஊரில் கொண்டாட பலரும் விரும்புவார்கள். அவர்களின் வசதிக்காக இந்த முறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. அதன்படி தாம்பரம் தஞ்சாவூர் இடையே இன்று நள்ளிரவு முன்பதிவு இல்லா சிறப்பு ரயில் புறப்படுகிறது.
ஆயுத பூஜையை ஒட்டி நாளை முதல் 3 நாட்கள் தொடர் விடுமுறை விடப்படுகிறது. இதையொட்டி பலரும் சென்னையில் இருந்து இன்று இரவு சொந்த ஊருக்கு செல்ல தயாராகி வருகிறார்கள். ஒரே நேரத்தில் பல லட்சம் பேர் சொந்த ஊருக்கு செல்ல ஆர்வம் காட்டுவதால் ஆம்னி பஸ்களில் வழக்கம் போல் டிக்கெட் கட்டணம் மிகமிக அதிகமாக உள்ளது. 1500 முதல் 2000 என டிக்கெட் கட்டணம் மிக அதிகமாக இருக்கிறது.

இந்நிலையில் பலரும் பேருந்து மற்றும் ரயில் மூலம் சொந்த ஊர் செல்ல ஆர்வம் காட்டுகிறார்கள். அவர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளும், சிறப்பு ரயில்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறப்பு ரயில்களை பொறுத்தவரை, சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு ஒரு ரயில் செல்கிறது. இதேபோல் சென்னை தாம்பரத்தில் இருந்து தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி வழியாககோவைக்கு இன்று ரயில் புறப்பட்டு செல்கிறது. இதேபோல் கேரளாவிற்கும் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தாம்பரத்தில் இருந்து தஞ்சாவூருக்கு இன்று நள்ளிரவு முன்பதிவு இல்லா சிறப்பு ரயில் புறப்பட்டு செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதாவது வெள்ளிக்கிழமை அதிகாலை 12.15க்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் முன்பதிவு இல்லா ரயில், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், பண்ருட்டி, கடலூர் போர்ட், பரங்கிப்பேட்டை, சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, பேரளம், திருவாரூர், நீட்டாமங்கலம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று தஞ்சாவூர் ரயில் நிலையத்தை அதிகாலை 6.50க்கு அடையும்.
அதேபோல் மறுமார்க்கமாக தஞ்சாவூரில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு 11.55க்கு புறப்படும் முன்பதிவு இல்லா ரயில், நீட்டாமங்கலம், திருவாரூர்,.பேரளம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், பரங்கிப்பேட்டை, கடலூர் போர்ட், பண்ருட்டி, விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று, தாம்பரத்திற்கு சனிக்கிழமை காலை 7.15க்கு வந்தடையும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மொத்தம் 12 பெட்டிகள் கொண்ட இந்த முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்களில் பயணித்த பயனடையுமாறு தெற்கு ரயில்வே வேண்டுகோள் விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications