லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை.. இ.பி.எஸ்.சுடன், எஸ்.பி.வேலுமணி சந்திப்பு.. பரபரப்பு ஆலோசனை!
சென்னை: அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தியதே தமிழ்நாட்டின் இன்றைய தலைப்பு செய்தியாக இருக்கிறது.
Recommended Video
கோவையில் 42 இடங்கள், சென்னையில் 16 இடங்கள், காஞ்சிபுரம், திண்டுக்கலில் தலா ஒரு இடம் என மொத்தம் 60 இடங்களில் காலை 6 மணி முதல் அதிரடி சோதனை நடந்தது.

அதிரடி சோதனை
எஸ்.பி. வேலுமணிக்கு சொந்தமான பண்ணை வீடு, வீடுகள், அலுவலகங்கள் மற்றும் சகோதரர் அன்பரசன் வீடு, அதிமுக பிரமுகர் சந்திரசேகரன் அலுவலகங்கள் உள்ளிட்ட பல இடங்களில் சோதனை நடந்தது. மேலும், எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் வைத்து எஸ்.பி வேலுமணியிடம் லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் அதிகாரிகள் சுமார் 10 மணி நேரத்துக்கு மேலாக அதிரடி விசாரணை நடத்தினார்கள்.

ரூ.13 லட்சம் பறிமுதல்
13 லட்சத்து 8 ஆயிரத்து 500 ரொக்கம், நிலப்பதிவு தொடர்பான ஆவணங்கள், தனியார் நிறுவனங்களுடனான பரிவர்த்தனை ஆவணங்கள், இரண்டு கோடி ரூபாய் அளவுக்கு வைப்புத்தொகை, மாநகராட்சி தொடர்புடைய அலுவல்பூர்வ ஆவணங்கள், ஹார்டு டிஸ்குகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

லாக்கர் சாவி
எஸ்.பி.வேலுமணி வீட்டில் இருந்து முக்கியமான லாக்கர் சாவி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வேறு சில ஆவணங்களும் சிக்கியதாக தெரிகிறது. எஸ்.பி வேலுமணி வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் நடந்த சோதனைக்கு அ.தி.மு.க கடும் எதிர்ப்பு தெரிவித்தது. முன்னாள் அமைச்சர்களை திமுக அரசு பழிவாங்குவதற்காக இவ்வாறு செய்கிறது என்று ஓ.பி.எஸ், இ.பி.எஸ் குற்றம் சாட்டினார்கள்.

எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு
இந்த நிலையில் 10 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த விசாரணை முடிவடைந்தவுடன் எஸ்.பி.வேலுமணி முன்னாள் முதல்வரும், தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். லஞ்ச ஒழிப்பு துறை சோதனை விவரங்கள் குறித்து எடப்பாடி பழனிசாமியிடம், எஸ்.பி.வேலுமணி கூறியதாக தெரிகிறது. அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து இருவரும் ஆலோசனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications