ஆஹா..ஏசி பஸ்சில் சிறப்பு தரிசன சீட்டுடன் திருப்பதிக்கு ஆன்மிக சுற்றுலா! அமலாகும் தமிழக அரசு திட்டம்
சென்னை: தமிழ்நாட்டில் இருந்து திருப்பதிக்கு ஆன்மிக சுற்றுலா திட்டம் ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி முதல் மேலும் 4 நகரங்களில் இருந்து துவங்க உள்ளது. இதில் முன்பதிவு செய்யும் பயணிகள் ஏசி பஸ்சில் இருவேளை சைவ உணவுடன் திருப்பதி அழைத்து செல்லப்பட்டு சிறப்பு தரிசன சீட்டுடன் ஏழுமலையானை தரிசிக்க முடியும்.
தமிழக அரசு சார்பில் ஆன்மிக சுற்றுலா திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. சென்னையில் இருந்து திருப்பதிக்கு ஆன்மிக சுற்றுலா திட்டம் நடைமுறையில் உள்ளது.
இந்த திட்டமானது தொடர்ந்து விரிவுப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்காக சுற்றுலா திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:

திருப்பதி ஏழுமலையான் தரிசனம்
இந்தியாவில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஆந்திர மாநிலம் திருப்பதி கோவில் முதன்மையானது. இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து வருகின்றனர். இதற்கு தமிழ்நாடும் விதிவிலக்கல்ல. ஏனென்றால் தமிழ்நாட்டில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசித்து வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர்.

ஆக., 8ல் 4 நகரங்களில் இருந்து..
இந்நிலையில் தான் தமிழகத்தில் இருந்து திருப்பதிக்கு அரசின் ஆன்மிக சுற்றுலா திட்டம் விரிவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் திருச்சி, மதுரை, சேலம் மற்றும் கோவை ஆகிய இடங்களில் இருந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கான சுற்றுலா திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஏழுமலையான் பக்தர்கள் குறிப்பிட்ட நாள் மட்டுமின்றி தினசரி திருப்பதி சென்று வர முடியும். இந்த சுற்றுலா திட்டம் ஆகஸ்ட் 8 ஆம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வர உள்ளது.

டிக்கெட் கட்டணம் எவ்வளவு?
இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் 7 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய வேண்டும். டிக்கெட் கட்டணமாக திருச்சி மற்றும் சேலத்தில் இருந்து திருப்பதிக்கு பெரியவர்களுக்கு ரூ.3,330, 10 வயதுக்கு உட்பட்ட சிறியவர்களுக்கு ரூ.3000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மதுரை, கோவையில் இருந்து பெரியவர்களுக்கு ரூ.4,000, சிறியவர்களுக்கு ரூ.3,700ம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சிறப்பு தரிசன பயணச்சீட்டு
இவ்வாறு முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு இருவேளை சைவ உணவுடன் தமிழகத்தில் இருந்து திருப்பதி ஏழுமலையான கோவிலுக்கு ஏசி பஸ்சில் அழைத்து செல்லப்படுவார்கள். அங்கு சிறப்பு தரிசன பயணச்சீட்டு வசதியுடன் பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும். இதற்கு தனியே கட்டணம் செலுத்த தேவையில்லை. இதற்கும் சேர்த்து தான் டிக்கெட் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் டிக்கெட் கட்டணத்தை செலுத்தினால் மட்டுமே போதுமானது.

கூடுதல் விபரங்கள் அறிய
இதுதொடர்பான கூடுதல் விபரங்கள் பெற விரும்புபவர்கள் மாவட்டங்களில் உள்ள‛ஓட்டல் தமிழ்நாடு'வை தொடர்பு கொள்ள வேண்டும். மேலாளர், ஓட்டல் தமிழ்நாடு (திருச்சி) 0431-2414346, 9176995853, மேலாளர்-ஓட்டல் தமிழ்நாடு (சேலம்) 04281-22335, 223334, 9176995823, மேலாளர்-ஓட்டல் தமிழ்நாடு (மதுரை) 0452-2337471, 9176995822, மேலாளர்-ஓட்டல் தமிழ்நாடு (கோவை) 0422-2302176, 9176995852 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications