பெண்கள் முன்னேற்றத்திற்கு தேவியின் அருள்தான் காரணம்.. ஸ்ரீதர் வேம்பு பேச்சு.. எழும் விமர்சனங்கள்!
சென்னை: உலக அளவில் வணிக ரீதியாக விமானங்களை இயக்கும் பெண்களில் அதிகமானோர் இந்தியாவை சேர்ந்தவர்கள்தான் என்று டிவிட்டரில் புள்ளிவிவரம் ஒன்று வெளியாகியிருந்தது.
இதனை பகிர்ந்த 'ZOHO' நிறுவனத்தின் சிஇஓ ஸ்ரீதர் வேம்பு, இந்தியாவில் பெண் சாப்ட்வேர் இன்ஜினியர்களின் பங்கும் அதிகம் என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கான காரணத்தையும் கூறியிருந்தார்.
இவர் கூறியுள்ள கருத்து சமூக நீதி போராட்டங்களை இழிவுபடுத்துவதாக உள்ளதாக பலர் விமர்சித்துள்ளனர்.

மத நம்பிக்கை
உலக அளவில் வணிக ரீதியாக விமானங்களை இயக்கும் பெண்களில் அதிகமானோர் இந்தியாவை சேர்ந்தவர்கள்தான் என்று டிவிட்டரில் புள்ளிவிவரம் ஒன்று வெளியாகியிருந்தது. இந்த தகவரை பகிர்ந்திருந்த ஸ்ரீதர் வேம்பு, இந்தியாவில் பெண் சாப்ட்வேர் இன்ஜினியர்களின் பங்கும் அதிகம் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இதனை புரிந்து கொள்ள இந்து கலாச்சாரத்தை புரிந்துகொள்வது அவசியம் என்றும் கூறியுள்ளார். இவர் கூறியுள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் மேலும் கூறியுள்ளதாவது, "தேவி வழிபாட்டின் உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பெரும்பாலான கிராமக் கோயில்கள் பெண் தெய்வங்களுக்கானவை. இவைகள் அனைத்தும் சக்தியின் வடிவங்கள்" என்று கூறியுள்ளார்.

சமூக நீதி போராட்டங்கள்
இக்கருத்து சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வந்தாலும், இதற்கு பலரும் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். சமூக நீதிக்கான போராட்டங்கள் மூலம் பெறப்பட்ட உரிமைகளை இந்து மத நம்பிக்கைகளால் பெற்றதாக அவர் திரித்து கூறுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்தியாவில் கிராமங்களில் பெரும்பாலும் பெண் தெய்வங்களே வழிப்படப்பட்டு வந்திருந்தாலும், பெண்களுக்கான உரிமைகள் கடுமையாக மறுக்கப்பட்டிருந்துள்ளன. இன்னும் சரியாக சொல்வதெனில் உரிமைகள் மறுக்கப்பட்டு கொல்லப்பட்ட பெண்களே கிராம தெய்வங்களாக வணங்கப்பட்டனர் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

சதி ஒழிப்பு
இவ்வாறு இருக்க மத நம்பிக்கைகள் மூலம் பெண்களுக்கு எப்படி இவ்வளவு உரிமைகள் கிடைக்க முடியும் என்று பலர் கேள்வியெழுப்பியுள்ளனர். உதாரணமாக 'சதி' எனப்படும் உடன்கட்டை ஏறும் பழக்கம் மத நம்பிக்கைகளில் ஒன்றாக கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. அதாவது கணவர் உயிரிழந்த பின்னர் அந்த உடல் எரிக்கப்படும் தீயில் மனைவி விழுந்து உயிரிழப்பது 'சதி' என்று அழைக்கப்பட்டது. உண்மையில் தீயில் விழுந்து உயிரிழக்க யாரும் தயாராக இருக்க மாட்டார்கள் என்பதை கண்டறிந்த ஆங்கிலேயர்கள் இதற்கு எதிராக சட்டத்தை இயற்றினர். இவ்வாறு விழுந்து உயிரிழக்கும் பெண்கள் 'சதி மாதா' என்கிற புனித பட்டத்தோடு அழைக்கப்பட்டனர். இவற்றை குறிப்பிட்ட சமூக வலைத்தள பயனர்கள், இவ்வாறு இழிவுகளை கொண்டிருந்த மதங்கள் எப்படி பெண்களுக்கு உரிமையை கொடுத்திருக்கும்? என கேள்வியெழுப்பி வருகின்றனர்.

போராட்டம்
இந்த சதி முறை 1829ல் ஒழிக்கப்படுவதாக அப்போதைய வங்க ஆளுநர் பென்ட்டிங் பிரபு அறிவித்திருந்தாலும் ராஜஸ்தானில் 1987ல்தான் இந்த முறை ஒழிக்கப்பட்டது. அதேபோல ஆண்களுக்கு இணையான கல்வி, சொத்துரிமை, வாக்குரிமை என பல உரிமைகளுக்கும் பல்வேறு தலைவர்கள் சமரசமற்ற போராட்டங்களை நடத்தியுள்ளனர். இந்த போராட்டங்களால் கிடைத்த பலனில்தான் இன்று பெண்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும், இதனை மத நம்பிக்கைகள் மூலம் பெற்றதாக ஸ்ரீதரன் வேம்பு கூறுவது நகைப்புக்குரியது என்றும் பலர் விமர்சித்துள்ளனர். தற்போது ஸ்ரீதர் வேம்புவின் ட்வீட்டும், அதற்கான பதில்களும் அதிக அளவில் ரீ-ட்வீட் செய்யப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications