சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

விருதுநகர் நோக்கி வாருங்கள்! வெற்றி வரலாறு படைப்போம்! திமுகவினருக்கு ஸ்டாலின் அழைப்பு!

Google Oneindia Tamil News

சென்னை: செப்டம்பர் 15 அன்று விருதுநகர் நோக்கி வருமாறு திமுகவினருக்கு அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் அழைப்பு விடுத்திருக்கிறார்.

மேலும் செப்டம்பர் 15 அன்று இந்தியாவுக்கே முன்னோடித் திட்டமாக காலைச் சிற்றுண்டித் திட்டத்தை மதுரையில் தொடங்கி வைக்கவுள்ளதாகவும் கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் எழுதிய கடிதத்தின் விவரம் வருமாறு;

சிலிர்ப்பும் புத்துணர்வும் பெருகுகிறது! திராவிட இயக்கத்தின் சொந்த மாதம் செப்டம்பர்-ஸ்டாலின் பூரிப்புசிலிர்ப்பும் புத்துணர்வும் பெருகுகிறது! திராவிட இயக்கத்தின் சொந்த மாதம் செப்டம்பர்-ஸ்டாலின் பூரிப்பு

 முப்பெரும் விழா

முப்பெரும் விழா

செப்டம்பர் 15, நம் கழகத்தை உருவாக்கிய பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் பிறந்தநாள். அதனை மனதில் கொண்டு, அரசு தொடக்கப் பள்ளிகளில் காலைச் சிற்றுண்டி வழங்குகிற மகத்தான புதிய திட்டம் தொடங்கப்பட இருக்கிறது. 100 ஆண்டுகளுக்கு முன்பே பள்ளிகளில் இலவச உணவு வழங்கிய இயக்கம்தான் திராவிட இயக்கம். அன்று நீதிக்கட்சி இந்தியாவுக்கே வழிகாட்டும் வகையில் செயல்பட்டது. அந்த நீதிக்கட்சியின் நீட்சியாக, கழகத்தின் திராவிட மாடல் அரசு, இந்தியாவுக்கே முன்னோடித் திட்டமாக காலைச் சிற்றுண்டித் திட்டத்தைத் தொடங்குகிறது. சங்கத் தமிழ் வளர்த்த மாமதுரையில் அதனைத் தொடங்கிவைத்து, அதன்பின் மாலையில் விருதுநகரில் உங்களை சந்திக்கும் விருப்பம் மேலிட ஓடோடி வருவேன். உடன்பிறப்புகளான உங்களையும், உங்களில் ஒருவனான என்னையும் 'விருதை' அழைக்கிறது.

விருது பெறுபவர்கள்

விருது பெறுபவர்கள்

முப்பெரும் விழாவில் கழகத்தின் மூத்த முன்னோடிகளை மதித்துப் போற்றும் பண்பின் அடிப்படையில் விருதுகள் வழங்கப்பட இருக்கின்றன. இந்த ஆண்டு பெரியார் விருது பெறுபவர் மிசா காலத்தில் தன் கணவரை சிறையில் அடைத்தபோதும் கலங்கி நிற்காமல் கழகம் காக்கும் பணியில் ஈடுபட்ட திருமதி. சம்பூர்ணம் சாமிநாதன் அவர்கள். பதவிப் பொறுப்புகளைவிட கழகக் கொள்கை வழிப் பயணமே இலட்சிய வாழ்வின் அடையாளம் எனச் செயலாற்றும் கோவை திரு. இரா.மோகன் அவர்கள், அண்ணா விருது பெறவிருக்கிறார்.

யார் யாருக்கு?

யார் யாருக்கு?

உயிர்நிகர் தலைவர் கலைஞரின் கண்ணசைவுக்கேற்பக் களமிறங்கி அயராது கழகப் பணியாற்றி இன்று கழகத்தின் பொருளாளராக இருக்கின்ற திரு. டி.ஆர்.பாலு எம்.பி. அவர்கள், கலைஞர் விருது பெறவிருக்கிறார். அருகில் உள்ள புதுச்சேரி மாநிலத்தில் கழகத்தினை வளர்ப்பதில் பெரும்பங்காற்றிய புதுச்சேரி திரு. சி.பி.திருநாவுக்கரசு, பாவேந்தர் விருது பெறவிருக்கிறார். கழகமே உயிர்மூச்சென வாழும் உடன்பிறப்புகளில் ஒருவரும் தலைமையின் கட்டளையை நிறைவேற்றுவதில் துடிப்புடன் செயலாற்றியவருமான குன்னூர் திரு. சீனிவாசன் அவர்கள், பேராசிரியர் விருது பெறவிருக்கிறார்.

கலைஞர் கடிதங்கள்

கலைஞர் கடிதங்கள்

இந்த இனிய நிகழ்வில், இந்தியாவுக்கே வழிகாட்டும் வகையில், ஆட்சியியல் இலக்கணத்தைப் படைத்திருக்கும் கழகத்தின் திராவிட மாடல் அரசு பற்றிய எனது எண்ண ஓட்டங்கள் அடங்கிய புத்தகம் வெளியிடப்படவிருக்கிறது.முத்தாய்ப்பாக, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முரசொலியில் எழுதிக் குவித்த உடன்பிறப்புகளுக்குக் கடிதங்களின் 54 தொகுதிகள் வெளியிடப்பட இருக்கின்றன. அவருடைய அந்தக் கடிதங்களின் கண்ணசைவில்தானே, கடைக்கோடித் தொண்டனையும், தன் குடும்பத்துடன், முப்பெரும் விழாவுக்கு அழைத்து வந்தது.

வெற்றி வரலாறு

வெற்றி வரலாறு

'உடன்பிறப்பே..' என்று அவர் அழைத்தால், செவிமடுத்துச் செயலாற்றாத தொண்டர்கள் உண்டோ!எந்த நிலையிலும் அவர் அழைப்பினைத் தட்டாமல், எதையும் எதிர்பாராமல் ஓடோடி வந்த உடன்பிறப்புகளால்தானே, இன்று இந்த இயக்கம், இந்தியாவுக்கு வழிகாட்டும் வகையில் சிறந்தோங்கி விளங்குகிறது! நெருக்கடிகளிலும் சோதனைகளிலும் கழகத்தைக் கட்டிக் காத்த கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளை, உங்களில் ஒருவனாக நானும் அன்புடன் அழைக்கிறேன். செப்டம்பர் 15 அன்று விருதை நோக்கி விரைந்து வருக.. வெற்றி வரலாறு படைத்திடுவோம்!

English summary
Chief Minister Stalin has invited the DMK cadres to come to Virudhunagar on September 15.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X