பவள விழா கொண்டாடும் திமுக! மாவட்டச் செயலாளர்கள் -அணிச் செயலாளர்களுக்கு ஸ்டாலின் சொன்ன மெசேஜ்!
சென்னை: கருணாநிதி நூற்றாண்டு விழாவோடு திமுக பவள விழாவையும் கொண்டாட வேண்டும் என மாவட்டச் செயலாளர்களுக்கும், அணிச் செயலாளர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது;

நூற்றைம்பது ஆண்டு காலத்தில் செய்ய வேண்டிய பணிகளைத் தனது 80 ஆண்டு கால பொதுவாழ்வில் ஓய்வின்றி உழைத்து நிறைவேற்றிய கலைஞர் அவர்களின் நூற்றாண்டை தி.மு.கழகம் சார்பிலும், திராவிட மாடல் அரசின் சார்பிலும் கொண்டாடி மகிழ்ந்து வருகிறோம்.அவர் பார்த்துப் பார்த்துக் கட்டிய இந்த அண்ணா அறிவாலயத்தில் நாம் கூடியிருக்கிறோம்.
சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டம் முதல், குமரி முனையில் உள்ள அய்யன் திருவள்ளுவர் சிலை வரை தமிழ்நாடெங்கும் பண்பாட்டு அடையாளங்களை உருவாக்கியவர் கலைஞர். மினி பஸ், மெட்ரோ ரயில், டைடல் பார்க், உழவர் சந்தை, மகளிர் சுயஉதவிக் குழுக்கள், பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் - என நாம் பட்டியலிடத் துவங்கினால் இன்று முழுவதும் பட்டியலிட்டுக் கொண்டே இருக்கலாம்.
இந்தியாவுக்கே முன்னோடியாக அவர் கொண்டுவந்த பல்வேறு திட்டங்களைத்தான், ஒன்றிய அரசுகள் நடைமுறைப்படுத்தின. இப்போதும் நடைமுறைப்படுத்துகின்றன. இப்படிப்பட்ட தலைவரின் வரலாற்றை மறைக்க, திரித்து எழுதும் கூட்டத்திடமிருந்து, உண்மை வரலாற்றை நாம் காப்பாற்றிட வேண்டும் என்றால், திரும்பத் திரும்ப தலைவர் கலைஞரின் உழைப்பை, போராட்டத்தை, சாதனைகளைச் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். குறிப்பாக, இளைய தலைமுறையிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்.

அதனால்தான் தலைமைக் கழகம், மாவட்டக் கழக நிர்வாகங்கள் மட்டுமின்றி கழகத்தின் சார்பு அணிகளுக்கும் பொறுப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன. கலைஞர் அவர்களின் நூற்றாண்டைக் கொண்டாடும் இதே வேளையில்தான், வரும் ஆண்டு கழகத்தின் 75-ஆவது ஆண்டு விழாவையும் கொண்டாட இருக்கிறோம்.
எனவே, செப்டம்பர் 17-க்குப் பிறகு, இந்நிகழ்ச்சிகளில் பவள விழாவையும் சேர்த்தே கொண்டாடுங்கள். நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் முழுமையாக வென்று, 2024 ஜூன்-3 அன்று, நூற்றாண்டு நாயகர் கலைஞருக்கு அவர் பிறந்தநாளில் நாம் நன்றிக் காணிக்கை செலுத்துவோம்.












Click it and Unblock the Notifications