திமுக ஆட்சியமைத்து ஓராண்டு முடிந்தது.. ஒரு மதுபான கடையும் மூடப்படவில்லை.. அன்புமணி குற்றச்சாட்டு!
சென்னை: தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்து ஓராண்டை கடந்தும், இதுவரை ஒரு மதுபான கடை கூட மூடப்படவில்லை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் விற்பனையை முற்றிலுமாக ஒழிக்க வலியுறுத்தி, பாமக சார்பில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்டு போதைப்பொருள் விற்பனை ஒழிக்க வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

பாமக ஆர்ப்பாட்டம்
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறுகையில், தமிழ்நாட்டில் 50 லட்சத்திற்கும் அதிகமானோர் போதைப்பொருள் பயன்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது மாணவர்கள், இளைஞர்களுக்கு மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இதுவெறும் அடையாள ஆர்ப்பாட்டம் தான். தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மக்களுடன் இணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

அன்புமணி பேட்டி
போதைப்பொருளை ஒழிப்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து இருமுறை வலியுறுத்தியுள்ளேன். ஆனால் போதுமான நடவடிக்கை இல்லை. போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்புக்கு காரணம் சரளமாக கிடைப்பது தான். கஞ்சா, அபின், கொக்கைன், எல்எஸ்டி உள்ளிட்ட ஏராளமான போதைப்பொருட்கள் பள்ளி, கல்லூரி வாசலிலேயே கிடைக்கிறது. அதனை கட்டுப்படுத்துவதைக் கடந்து, ஒழிப்பதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

பாதிப்பு
போதைப்பொருள் விற்பனை செய்த 8 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கைது செய்ததாக கூறுகிறார்கள். ஆனால் அவர்களில் பலரும் இப்போது வெளிவந்துவிட்டனர். அவர்கள் மீது குண்டர் சட்டம் போட்டு கைது செய்ய வேண்டும். கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் இருக்கும் ஏராளமானோர் போதை பழக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். சட்டம் ஒழுங்கு சீர் கெடுவதற்கும், பெண் மீதான வன்முறைகள் அதிகரிப்பதற்கு போதைப்பொருள் விற்பனையே காரணம்.

மது விலக்கு
திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று கூறியது. ஆனால் இதுவரை ஒரு மதுபான கடையும் மூடப்படவில்லை. திமுக அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.












Click it and Unblock the Notifications