ஞாயிறு லாக்டவுன்: அம்மா உணவகம் வழக்கம் போல செயல்படும் - சென்னை மாநகராட்சி
சென்னை: சென்னையில் அம்மா உணவகங்கள் ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல செயல்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. கொரோனா வழிமுறைகளை பின்பற்றி உணவு வழங்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தினசரியும் 13ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சென்னையில் தினசரியும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தினசரியும் இரவு 10 மணிமுதல் அதிகாலை 4 மணி வரை முழு ஊரடங்கு அமலில் உள்ளது. ஏப்ரல் 25 முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலாகிறது.
அன்றைய தினம் பொது போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது. மளிகைக் கடைகள் , துணிக்கடைகள், இறைச்சிக்கடைகள், உணவகங்கள், மூடப்பட்டிருக்கும். மருந்துகடைகள், பால் பூத்துகள் திறக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை அனைத்து கடைகளும் மூடப்பட உள்ளதால் இன்றைய தினமே காய்கறி சந்தைகளிலும், இறைச்சிக்கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகரித்தது.
''சண்டே.. நான்வெஜ் இல்லாம முடியுமா''.. கொரோனா விதிகளை மறந்து.. மீன் மார்க்கெட்டில் குவிந்த மக்கள்!
இந்த நிலையில் நாளைய தினம் அம்மா உணவகங்கள் இயங்குமா என்ற சந்தேகம் எழுந்தது. மலிவு விலையில் உணவு விற்பனை செய்யப்படும் அம்மா உணவகம் மூடப்பட்டால் ஏழைகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாவார்கள் என்று கூறப்பட்டது.
சென்னையில் அம்மா உணவகங்கள் வழக்கம் போல செயல்படும் என்றும் கொரோனா வழிமுறைகளை பின்பற்றி உணவு வழங்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. மேலும், போதுமான உணவுப் பொருட்களை கையிருப்பில் வைத்துக் கொள்ள வேண்டுமென அம்மா உணவக பணியாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.