செந்தில் பாலாஜியின் தியாகம் பெரிது! உறுதி அதனினும் பெரிது.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி
சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் அளித்துள்ள நிலையில், முதல்வர் மு.க ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். எமர்ஜென்சி காலத்தில் கூட இவ்வளவு நாட்கள் சிறை வாழ்க்கை கிடையாது என்றும் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத்துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர். 3000 பக்கங்களுடன் கூடிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது. பல்வேறு நிபந்தனைகளுடன் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கியதை தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் திமுகவினர் பட்டாசுகள் வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினும் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். மேலும், எமர்ஜென்சி காலத்தில் கூட இவ்வளவு நாட்கள் சிறை வாழ்க்கை கிடையாது என்றும் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஸ்டாலின் கூறியதாவது:-
ஆருயிர் சகோதரர் செந்தில் பாலாஜிக்கு 471 நாட்களுக்குப் பிறகு, உச்ச நீதிமன்றத்தால் பிணை கிடைத்திருக்கிறது. அமலாக்கத் துறையானது, அரசியல் எதிரிகளை ஒடுக்கும் துறையாக மாற்றப்பட்ட தற்போதைய சூழலில், அதற்கு உச்சநீதிமன்றம் ஒன்றே விடியலாக இருக்கிறது. எமர்ஜென்சி காலத்தில் கூட இவ்வளவு நாட்கள் சிறை வாழ்க்கை கிடையாது. அரசியல் சதிச் செயல்கள் 15 மாதங்கள் தொடர்ந்தன.
கைது செய்து சிறையிலேயே வைத்துவிடுவதால் சகோதரர் செந்தில் பாலாஜியின் உறுதியைக் குலைக்க நினைத்தார்கள். முன்னிலும் உரம் பெற்றவராய்ச் சிறையில் இருந்து வெளியில் வரும் சகோதரர் செந்தில் பாலாஜியை வருக வருக என வரவேற்கிறேன். உன் தியாகம் பெரிது! உறுதி அதனினும் பெரிது!.. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications