ஆவேசமாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சொன்ன வார்த்தை.. அவை குறிப்பில் இருந்து நீக்கிய சபாநாயகர் பிரபாகர்
சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் இப்போது பட்ஜெட் மீதான விவாதம் நடந்து வரும் சூழலில், அப்போது பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தவெக அரசு இதுவரை ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்கவில்லை என குறிப்பிட்டார். மேலும், தொகுதி மறுசீரமைப்பு மசோதாவில் திமுகவின் நிலைப்பாடு குறித்தும் அவர் சில கருத்துகளை கூறிய நிலையில், அதை அவை குறிப்பில் இருந்து நீக்க சபாநாயகர் உத்தரவிட்டார்.
தமிழ்நாட்டில் இப்போது சட்டசபை நடந்து வருகிறது. பொது பட்ஜெட் மற்றும் வேளான் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதைத் தொடர்ந்து அவையில் விவாதம் நடந்து வருகிறது. இன்றைய தினம் முதலில் மேகதாது அணை கட்டும் விவகாரம் மற்றும் காவிரி நீர் பங்கீடு குறித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கொண்டு வந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் தொடர்பாக விவாதம் நடந்தது.

நிதி பகிர்வு
அதைத் தொடர்ந்து நிதி பகிர்வு மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது நிதி பகிர்வு மீதான விவாதத்தில் திமுக எம்எல்ஏ ரகுபதி பேசினார். அப்போது நீர்வளத்துறை, பொதுப்பணித்துறை தொடர்பாக சில கருத்துகளை அவர் குறிப்பிட்டார். இருப்பினும், அவர் ஆதாரமில்லாத கருத்துகளை பேசியதாகச் சொல்லி, சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அதை அவை குறிப்பில் இருந்து நீக்க உத்தரவிட்டார்.
தொடர்ந்து ரகுபதி பேச்சுக்கு பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "அவர் பேசும்போது நீர்வளத்துறை, பொது பணித்துறை குறித்து எல்லாம் பேசினார். ஏதோ கமிஷன் வாங்கப்படுவதாக எல்லாம் சொன்னார். இந்த ஆட்சியில் உறுதியாக சொல்கிறோம்.
ஒரு ரூபாய் கூட லஞ்சம் இல்லை
லஞ்சம் என்பது மிக பெரிய குற்றம் என்பதையே அனைத்து அமைச்சரவை கூட்டங்களிலும் முதல்வர் திரும்ப திரும்ப சொல்லி வருகிறார். அப்படி யாராவது லஞ்சம் வாங்கினால் அவர்கள் அமைச்சராக தொடர முடியாது என்பதையும் திட்டவட்டமாக சொல்லி வருகிறார். எந்தவொரு அமைச்சரும் எம்எல்ஏவும் ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்கவில்லை. பார்ட்டி பண்ட் எல்லாம் நாங்கள் வசூலிக்கவில்லை. எம்எல்ஏ பண்ட் அல்லது அமைச்சர் பண்ட் எதுவும் வாங்கவில்லை. 60 ஆண்டு மோசமான நடைமுறையை தூக்கி எறிந்துள்ளார்.
நீக்கிய சபாநாயகர்
தொகுதி மறுசீரமைப்பு என்பது ஒட்டுமொத்த தென் மாநிலங்களுக்கும் மிக பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இது குறித்து விவாதிக்க நாளை நமது முதல்வர் அனைத்து கட்சி எம்பிக்கள் கூட்டத்தை கூடியுள்ளார். இந்த கூட்டத்தில் திமுக எம்பிக்கள் கலந்து கொள்வார்களா இல்லையா என்பதே எங்கள் கேள்வி!" என்றார்.
மேலும், தொகுதி மறுசீரமைப்பு மசோதா குறித்தும் அதில் திமுக நிலைப்பாடு குறித்தும் சில கருத்துகளை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறினார். இருப்பினும், ஆதாரமில்லாமல் ஆதவ் அர்ஜுனா அந்த கருத்துகளை பேசியதாக சொல்லி, அதையும் நீக்க சபாநாயகர் உத்தரவிட்டார்.
உதயநிதி ஸ்டாலின் பதில்
தொடர்ந்து அமைச்சருக்கு பதிலளித்த எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், "தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக நாட்டிற்கே வழிகாட்டும் விதமாக முதல்முதலில் விளக்கமாகப் பேசியவர் திமுக தான். தொகுதி மறுசீரமைப்பை எதிர்த்து குரல் கொடுத்த முதல் தலைவர் ஸ்டாலின் தான். நாளை முதல்வர் விஜய் நடக்கும் அனைத்து கட்சி கூட்டத்தில் திமுக எம்பிக்கள் கலந்து கொள்வார்களா என்பதை கட்சி தலைவர் முடிவு செய்வார்" என்றார்.


Click it and Unblock the Notifications
