விரைவில் உள்ளாட்சி தேர்தல்.. அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் பாஜக? எல் முருகன் பரபரப்பு பேட்டி
சென்னை: உள்ளாட்சித் தேர்தல் வரும் சமயத்தில் அப்போதுள்ள சூழலைப் பொறுத்தே அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக முடிவெடுக்கப்படும் எனத் தமிழ்நாடு பாஜக தலைவர் எல் முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் களமிறங்கிய பாஜக, 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் அப்போதுள்ள நிலைமை குறித்து கூட்டணி தொடர்பாக முடிவெடுக்கப்படும் என பாஜக தலைவர் எல் முருகன் கூறியுள்ளது கூட்டணி தொடர்பாகப் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

பாஜக
நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்த பாஜகவிற்கு 20 இடங்கள் ஒதுக்கப்பட்டன.. அதில் பாஜக, கோவை தெற்கு, நாகர்கோவில், திருநெல்வேலி, மொடக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகளைக் கைப்பற்றியது. தமிழ்நாடு சட்டசபைக்கு சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக மீண்டும் நுழைந்துள்ளது.

அதிமுகவுடன் கூட்டணி
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் எல் முருகன், "உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்க பாஜக தயாராகவே உள்ளது. உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் சமயத்தில், அப்போதுள்ள சூழலைக் கருத்தில் கொண்டு கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். பாஜகவைப் பொறுத்தவரைக் கூட்டணி போன்ற கொள்கை முடிவுகள் தேசிய அளவிலேயே எடுக்கப்படும். அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக அப்போதுள்ள சூழலுக்கு ஏற்ப முடிவெடுக்கப்படும்" என்றார்

எல் முருகன் பேச்சு
முன்னதாக வெள்ளிக்கிழமை மாநில செயற்குழு கூட்டம் இன்று காணொலி காட்சி வழியில் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் விரைவில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலை எப்படி எதிர்கொள்ளலாம் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. அதில் தமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்றும் அதனைச் சந்திக்க நிர்வாகிகள் தயாராக இருக்க வேண்டும் என்றும் எல் முருகன் ஆலோசனை வழங்கினார்.

உள்ளாட்சித் தேர்தல்
தமிழ்நாட்டில் கடந்த 2016ஆம் ஆண்டு நடத்தவேண்டிய உள்ளாட்சித் தேர்தல் உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து 3 ஆண்டுகள் தாமதத்திற்குப் பிறகு 2019இல் நடத்தப்பட்டது அதிலும்கூட பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி மற்றும் 9 மாவட்ட ஊரகப் பகுதிகளுக்குத் தேர்தல் நடத்தப்படவில்லை. இதுதொடர்பான வழக்கில் வரும் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications