கப்பல்ல வேலைனு சொன்னதை நம்பி.. நடுத் தெருவுக்கு வந்த அதிமுக மாஜிகள்! இப்போதைக்கு இல்லை இடைத் தேர்தல்
சென்னை: தமிழக வெற்றிக்கழக அரசு பொறுப்பேற்று 100 நாட்களைக் கடந்திருக்கும் நிலையில் இடைத்தேர்தல் எப்போது நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. 7 தொகுதிகள் காலியாக இருக்கும் நிலையில், இடைத் தேர்தலை நடத்த தமிழக தேர்தல் ஆணையம் தீவிரமாக வேலை செய்து வந்தது. இதற்கிடையே தற்போது அந்த பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பான வழக்குகள் முடிவடையும் வரை இடைத்தேர்தலுக்கு வாய்ப்பே இல்லை என தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
2026 தமிழக சட்டசபை தேர்தல் முடிவடைந்து தமிழக வெற்றிக் கழக அரசு முதல்வர் விஜய் தலைமையில் பொறுப்பேற்று 100 நாட்கள் கடந்து இருக்கிறது. ஆட்சி மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், மிக முக்கியமாக குதிரை பேர குற்றச்சாட்டு விஜய்க்கு சிக்கலை ஏற்படுத்தியது.

தேர்தல் முடிவடைந்த உடன் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் விஜய் அரசுக்கு ஆதரவளித்தன. இதனால் நீண்ட இழுபறிக்குப் பிறகு முதல்வராக விஜய் பொறுப்பேற்றார்.
அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள்
தொடர்ந்து நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக எம்எல்ஏக்கள்20க்கும் மேற்பட்டோர் விஜய் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் அவர்கள் மீது கட்சி காவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் திடீரென அதிமுக எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர்.
காலியான தொகுதிகள்
முன்னதாக திருச்சி கிழக்கு, பெரம்பூர் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஜய், திருச்சி கிழக்கு எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதை அடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அதற்குப் பிறகு பெருந்துறை ஜெயக்குமார், மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம் சத்யபாமா, அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா, கரூர் எம் ஆர் விஜயபாஸ்கர், விராலிமலை சி விஜயபாஸ்கர் ஆகியோரும் தங்களது எம்எல்ஏ பதவி ராஜினாமா செய்தனர்.
இடைத்தேர்தல்
இதன் காரணமாக திருச்சி கிழக்கு, மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர் ஆகிய தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது. தற்போதைய சூழலில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 7 சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளது. ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டால் 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்பது விதி. அந்த அடிப்படையில் 7 தொகுதிகளிலும் தேர்தல் நடத்துவதற்கான நடவடிக்கைகள் வேகம் எடுத்தன.
தேர்தல் ஆணையம்
தமிழக தேர்தல் அதிகாரியான அர்ச்சனா பட்நாயக் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு சுச்சரிக்கை ஒன்றினை அனுப்பி இருந்தார். அதில், தேர்தல் ஆணையம் எந்த நேரத்திலும் இடைத்தேர்தல் அட்டவணை அறிவிப்பை வெளியிடலாம் என்பதால், தேர்தல் தொடர்பான முன்னேற்பாடுகளை முடிக்க வேண்டும் எனவும் ஜூன் மாதத்துக்குள் அனைத்து விவரங்களையும் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
திருச்சி கிழக்கு
இதை அடுத்து அந்தந்த மாவட்டங்களில் ஏற்பாடுகள் வேகம் எடுத்த நிலையில் திடீரென இடைத்தேர்தலுக்கு சிக்கல் எழுந்தது. அதாவது திருச்சி கிழக்கு தவிர்த்து மற்ற தொகுதிகளில் அவர்கள் வெற்றியை எதிர்த்த தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருக்கும் போது அந்த தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் என வெங்கடாசலபதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினை தாக்கல் செய்தார்.
சென்னை உயர்நீதிமன்றம்
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இந்த தொகுதிகளில் தேர்தல் நடத்த இடைக்கால தடையை விதித்து. இந்த தடையை நீக்க வேண்டும் என எம்.ஆர். விஜயபாஸ்கர், சி விஜயபாஸ்கர் தரப்பு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் தர்மாதிகாரி, அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்டிருந்தது.
தேர்தல் இல்லை
அப்போது நீதிமன்ற உத்தரவுப்படி தேர்தல் வழக்குகள் முடியும் வரை 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கும் திட்டம் இல்லை என கூறப்பட்டுள்ளது. இதை டுத்து செப்டம்பர் 8ம் தேதிக்கு இந்த வழக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கும் நிலையில் அதுவரையிலும் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வர வாய்ப்பு இல்லை. அடுத்த ஆண்டு பிப்ரவரியில் சில மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடக்க இருக்கும் நிலையில் அதனுடன் சேர்ந்தே இந்த இடைத்தேர்தல்களும் நடத்தப்படலாம் என்கின்றனர். அதுவரையில் விஜய் அரசுக்கு எந்தவித நெருக்கடியும் இல்லை என்கின்றனர்.


Click it and Unblock the Notifications
