தொழிலாளர்களை வாழ்த்தும் அரசு அல்ல! வாழ வைக்கும் அரசு திமுக அரசு! சிகப்பு சட்டையில் முதல்வர் ஸ்டாலின்
சென்னை : தொழிலாளர்களை வாழ்த்தும் அரசாக இல்லாமல் தொழிலாளர்களை வாழ வைக்கும் அரசாகத் திமுக அரசு விளங்கும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது மே தின உரையில் கூறியுள்ளார்.
Recommended Video
மே 1ஆம் தேதி தொழிலாளர் தினம் இன்று உலகம் முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளையொட்டி தொழிலாளர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பிரபலங்களும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தினப் பூங்காவில் அமைந்துள்ள நினைவுச் சின்னத்துக்கு மலரஞ்சலி செலுத்தி, மே நாள் வாழ்த்துரை ஆற்றினார்.

முதல்வர் ஸ்டாலின்
நிகழ்ச்சியில் பேசிய அவர், "ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளர் தினமாக இருக்கும் மே நாளில் தலைவர் கலைஞர் அவர்களால் உருவாக்கித் தரப்பட்டிருக்கும் மே தின நினைவுச் சின்னத்திற்கு மரியாதை செய்யும் வகையில் மலரஞ்சலி செலுத்தி - இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள தொழிலாளர் தோழர்கள் அனைவருக்கும் மே தின வாழ்த்துகளைத் சொல்லும் ஒரு வாய்ப்பை நான் தொடர்ந்து பெற்று வருகிறேன்.

தொழிலாளர் தினம்
தொழிலாளர்களை வாழ்த்தும் அரசாக மட்டுமல்ல - தொழிலாளர்களை வாழவைக்கும் அரசாகவும் இன்றைக்கு தி.மு.க. அரசு இருந்து கொண்டிருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியே ஏழை, எளிய, பாட்டாளி பெருமக்களுக்காக நடைபெறும் ஆட்சிதான்! திராவிட முன்னேற்றக் கழகம் முதல்முறையாக பேரறிஞர் அண்ணா தலைமையில் ஆட்சிப்பொறுப்பேற்ற நேரத்தில் நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் தன்னுடைய 'முரசொலி' இதழில் ஒரு கவிதையை வடித்துத் தந்தார்கள்.

தலைவர் கலைஞர்
''ஏழைக் குலத்தில் உதித்த ஒரு தமிழன் ஏறுகிறான் அரசு கட்டில்! இனி ஏழைக்கு வாழ்வு வந்தது" - என்று பெருமையோடு எழுதிக்காட்டினார்கள்! பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் இருந்த ஆட்சியாக இருந்தாலும் சரி - அதைத் தொடர்ந்து தலைவர் கலைஞர் அவர்கள் பொறுப்பேற்று நடத்திய ஆட்சியாக இருந்தாலும் சரி, ஏழைகள் - தொழிலாளர் தோழர்கள் மனமகிழ்ச்சியோடு சிரிக்கும் ஆட்சியாகத்தான் இருந்தது. இப்போதும் அப்படித்தான் இருந்து கொண்டிருக்கிறது.

பல்வேறு திட்டங்கள்
ஏழைகளுக்காக, தொழிலாளர் தோழர்களுக்காக, பாட்டாளிப் பெருமக்களுக்காக, வறுமையில் வாடிக் கொண்டிருப்பவர்களுக்காக, அறிஞர் அண்ணா தலைமையில் இருந்த ஆட்சியாக இருந்தாலும், அதைத் தொடர்ந்து தலைவர் கலைஞர் நடத்திய ஆட்சியாக இருந்தாலும் எவ்வளவோ திட்டங்கள் எல்லாம் உருவாக்கப்பட்டிருக்கிறது. உதாரணத்திற்கு சிலவற்றை மாத்திரம் நான் இங்கு நினைவுப்படுத்த வேண்டியதை என் கடமையாக நான் கருதுகிறேன்.

தொழிலாளர்களுக்கான ஆட்சி
குடிசை மாற்று வாரியம் அமைத்து தந்தது தி.மு.க.! நாட்டில் பிச்சைக்காரர்களே இருக்கக்கூடாது என்பதற்காக அவர்கள் தங்கி வாழ்வதற்கு இல்லங்கள் அமைத்து தந்தது. அதேபோல் தொழுநோயாளிகளுக்கு இல்லம் அமைத்து தந்தது தி.மு.க.! ஏழைகளுக்கு கண்ணொளி திட்டம் தொடங்கியதும் தி.மு.க.! ஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட, ஏழை - எளிய, தொழிலாளத் தோழர்களுக்கான ஆட்சியாக தமிழக ஆட்சியை வடிவமைத்துக் கொடுத்தவர் நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்! அந்தப் பாதையில்தான் அவருடைய மகனாக இருக்கும் இந்த ஸ்டாலின் வழிநடத்திக் கொண்டிருக்கிறான் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.

மே தினப் பூங்கா நினைவு சின்னம்
இந்த ஓராண்டு காலத்தில் தொழிலாளர் நலனுக்காக எத்தனையோ சிறப்பான திட்டங்களைத் தீட்டி இருக்கிறோம் - தீட்டிக் கொண்டிருக்கிறோம் - இன்னும் தீட்டப்போகிறோம். எனது தலைமையிலான நமது அரசு, இது தோழர்களின் அரசாகத்தான் இருக்கும் - தொழிலாளர்களின் அரசாகத்தான் இருக்கும் - தொழிலாளர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் அரசாகத்தான் இருக்கும் என்று இந்த நேரத்தில் எடுத்துச் சொல்லி, இந்த மே தினப் பூங்காவில் தொழிலாளர்களின் சின்னமாக இருக்கும் இந்த மே தின நினைவுத் சின்னத்தை இங்கு அமைந்திருக்கிறோம் என்றால், இதனை அமைத்துத் தந்தவரும் தலைவர் கலைஞர் அவர்கள்தான் என்பது உங்களுக்கு தெரியும்.

மே தின வாழ்த்துகள்
அவர் வழிநின்று இன்றைக்கு இந்த இயக்கத்தை நடத்திக் கொண்டிருக்கும் - இந்த ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கும் நானும் அவர் வழிநின்று தொழிலாளர்களைப் போற்றுவோம்! தொழிலாளர்களின் ஒற்றுமையை ஓங்கச் செய்ய உறுதி ஏற்போம்! உறுதி ஏற்போம்! என்று சொல்லி இங்கு வந்திருக்கும் தொழிலாளர் தோழர்கள் அத்தனைப் பேருக்கும் என்னுடைய மே தின வாழ்த்துகளைச் சொல்லி என் உரையை நிறைவு செய்கிறேன். நன்றி! வணக்கம்!" என பேசினார்.












Click it and Unblock the Notifications