பேரறிவாளன் விடுதலை! காட்டு மிராண்டித்தனம்.. ரத்தக் கண்ணீர் வருது சார்..! கொந்தளித்த கே.எஸ்.அழகிரி.!
சென்னை : முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலையை கொண்டாடுவது ரத்தக் கண்ணீரை வரவழைக்கிறது எனவும், அதே நேரத்தில் கூட்டணி வேறு கொள்கை வேறு என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே. எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
Recommended Video
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளனை கடந்த சில நாட்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது.
திமுக அதிமுக நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இதனை வரவேற்றுள்ள நிலையில் இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி கடும் அதிருப்தியில் உள்ளது.

பேரறிவாளன் விடுதலை
குறிப்பாக காங்கிரஸ் கட்சி கூட்டணிக்கு தமிழகத்தில் அங்கம் வகிக்கும் திமுக இதனை வரவேற்றுள்ள நிலையில், ராஜீவ் கொலையாளிகள் விடுதலைக்காக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி தீவிர முயற்சி எடுத்ததில் திமுகவுக்கு பெரும் பங்கு உண்டு. மேலும் எஞ்சி உள்ள 6 பேர் விடுதலைக்காகவும் சட்ட நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்படும் என்றும் திமுக தலைவரும் தமிழகம் முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

காங்கிரஸ் தொண்டர்கள் ஆத்திரம்
முன்னதாக உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளன் தனது தாயார் அற்புதம்மாள் உடன் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தார். முதல்வரும் பேரறிவாளனை கட்டிப்பிடித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். திமுக மட்டுமின்றி அதிமுக, மதிமுக, நாம் தமிழகர், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சி தலைவர்களையும் பேரறிவாளன் சந்தித்தார். இந்நிலையில் கூட்டணி கட்சியாக இருந்தாலும் ராஜீவ் கொலையை திமுக நியாயப்படுத்துவது போல் இந்த நிகழ்வுகள் இருப்பதாக காங்கிரஸ் தொண்டர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கே.எஸ்.அழகிரி வேதனை
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலர் பதவிக்காக அலையும் தலைவர்களே கூட்டணியை உதறிவிட்டு வெளியே வாருங்கள் என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். இந்நிலையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை கொண்டாடுவது ரத்தக் கண்ணீரை வரவழைக்கிறது என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே. எஸ்.அழகிரி கூறியுள்ளார். ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி உயிரிழந்த 31ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள்,பிரமுகர்கள்,தொண்டர்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.பின்னர் பயங்கர வாத எதிர்ப்பு தின உறுதி மொழியை அனைவரும் ஏற்றனர்.

ரத்த கண்ணீர்
அதன்பின் செய்தியாளர்களிடம் தமிழக காங்கிரஸ் கட்சி கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பேசுகையில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி இறந்த பொழுது கண்ணீர் ஆறாக போனது போல, தற்பொழுது கொலையாளிகள் விடுதலை செய்ததை திருவிழாவாக கொண்டாடுவது பார்க்கும் பொழுது இதயத்தில் இருந்து இரத்தக் கண்ணீர் வருகிறது, எங்களால் அதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை,எனவே இறப்புக்கு நீதி வழங்க வேண்டும் என கேட்கிறோம், குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என கேட்கிறோம், குற்றவாளி குற்றவாளி தான் கடவுள் ஆக முடியாது: என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications