தமிழ்நாட்டில் பாஜக வலுவாகிறது.. தேர்தல் முடிவுகள் ஆச்சரியத்தை ஏற்படுத்த போகிறது.. பிரதமர் மோடி
சென்னை: தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தப் போகிறது. எங்கள் கட்சி மாநிலம் முழுவதும் வலுவான சக்தியாக உருவாகி வருகிறது. இனி திமுகவை ஆதரிக்கும் மனநிலையில் மக்கள் இல்லை என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பிரதமர் மோடி நேற்று கோவையில் பிரம்மாண்ட வாகன அணிவகுப்பில் பங்கேற்றார். சுமார் 2.5 கி.மீட்டர் தூரம் நடைபெற்ற மோடியின் வாகன பேரணியில் அண்ணாமலை, வானதி சீனிவாசன் உள்ளிட்டோரும் உடன் வந்தனர். மோடியை பார்த்து தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர். தனது பேரணியின் போது கோவை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு மோடி அஞ்சலி செலுத்தினார்.

இதுதொடர்பாக மோடி தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:- 1998-ல் நிகழ்ந்த கோவை தீவிரவாத குண்டுவெடிப்புகளை மறக்க முடியாது. அந்த நகரத்திற்கு வந்திருகும் போது குண்டு வெடிப்புகளில் நம்மை விட்டு பிரிந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினேன். தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்த போகிறது.
எங்கள் கட்சி மாநிலம் முழுவதும் வலுவான சக்தியாக உருவாகி வருகிறது. இனி திமுகவை ஆதரிக்கும் மனநிலையில் மக்கள் இல்லை" என்று பதிவிட்டுள்ளார். தேர்தலுக்கு இன்னும் சரியாக ஒரு மாதமே இருப்பதால் அரசியல் கட்சிகள் முழு வீச்சில் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளன. குறிப்பாக மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக இம்முறை தமிழகத்தில் கணிசமான தொகுதிகளில் வெல்ல வேண்டும் என்று முனைப்பு காட்டி வருகிறது.
இன்று பிரதமர் மோடி சேலம் கூட்டத்தில் பங்கேற்கிறார். சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டிக்கு மோடி வருகிறார். அங்கு பிற்பகல் 1 மணியளவில், பாஜக தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். இந்த கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.
பொதுக்கூட்டம் நடைபெறும் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் 44 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட பந்தல் மற்றும் மேடை அமைக்கப்பட்டு உள்ளது. மோடி வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுமார் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதிமுக கூட்டணியில் இருந்து பாஜகவை கழற்றி விட்டதால், பாஜக தலைமையில் தனியாக ஒரு கூட்டணி அமைகிறது. பாஜக கூட்டணியில் பாமக, ஓபன்னீர் செல்வம் , டிடிவி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பாக மோடி அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வருகை தந்தார். அந்த வகையில் நேற்று கோவையில் பிரமாண்ட வாகன பேரணியில் பங்கேற்றார்.
இருபுறமும் திரண்டு நின்ற ரசிகர்கள் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். சாய்பாபா காலனி போலீஸ் நிலையம், வடகோவை மேம்பாலம், சென்டிரல் தியேட்டர், சிந்தாமணி ரவுண்டானா, காமராஜபுரம் சிக்னல் வழியாக ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் அலுவலகத்தை வந்து சேர்ந்தது. இந்த பிரம்மாண்ட பேரணி சுமார் 2.5 கி.மீ. தொலைவு வரை நடைபெற்றது. சாலையின் இருபக்கமும் நின்ற தொண்டர்கள் மோடி மீது பூக்களை வீசி மோடி மோடி என கோஷம் எழுப்பினர்.
ரோட்ஷோவின் போது 1998- கோவை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் படத்திற்கு மோடி அஞ்சலி செலுத்தினார். ஆர்எஸ்புரம் தலைமை தபால் நிலையம் முன்பு உயிரிழந்தோர் புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்த படங்களுக்கு அஞ்சலி செலுத்த, பிரசார வாகனத்திலிருந்து இறங்கிய பிரதமர், காலணிகளை கழற்றிவிட்டு வெறும் காலுடன் சென்று, உருவப்படங்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். இதனையடுத்து ரோட் ஷோ நிறைவடைந்தது.












Click it and Unblock the Notifications