தமிழகத்தில் தளர்வுகள் அற்ற முழு லாக்டவுன் நீடிக்குமா - முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று அறிவிப்பு
தமிழகத்தில் தளர்வுகள் அற்ற லாக்டவுன் நீட்டிக்கப்படுமா என்று முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று அறிவிக்கிறார். தலைமைச் செயலகத்தில் இது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் இன்று நடைபெறுகிறது.
சென்னை: தமிழகத்தில் தளர்வுகள் அற்ற லாக்டவுனை நீட்டிக்கலாமா வேண்டாமா என்பது குறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக்கூட்டத்தில்
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவது, கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த போதிலும், தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வந்தது. இந்திய அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்தபோதிலும், தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்துவந்தது

கொரோனா பாதிப்பு உயர்ந்து கொண்டே உள்ளதால் ஒரு வார காலத்திற்கு கடும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. திங்கட்கிழமை காலை 6 மணி முதல் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ளது.
மளிகைக்கடைகள், காய்கறிக்கடைகள் மூடப்பட்டுள்ளன. பொது மக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், தோட்டக்கலைத் துறை மூலமாக சென்னை நகரத்திலும், அனைத்து மாவட்டங்களிலும் சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து வாகனங்கள் மூலமாக விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
மருந்தகங்கள், நாட்டு மருந்து கடைகள், கால்நடை மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன. பால் விநியோகம், குடிநீர் மற்றும் தினசரி பத்திரிக்கை விநியோகம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.
உணவகங்களில் காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரையிலும், நண்பகல் 12.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரையிலும், மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது. உரிய மருத்துவக் காரணங்கள் மற்றும் இறப்புகளுக்காக மட்டும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பதிவுடன் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
கோவில்கள் மூடப்பட்டுள்ளதால் திருமணங்கள் அனைத்தும் கோவில் வாசலில் நடைபெற்று வருகின்றன. கடந்த சனி, ஞாயிறுக் கிழமைகளில் இரண்டு நாட்கள் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் சிறப்பு பேருந்துகள் மூலம் பல லட்சம் பேர் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர்.
இந்த நிலையில் நேற்றைய தினம் 34,285 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த பாதிப்பு 19,11,496 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 28,745 பேர் வீடு திரும்பியுள்ளனர். தேவைப்பட்டால் லாக்டவுன் நீட்டிக்கப்படும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முழு ஊரடங்கை தளர்வுகளுடன் நீடிக்கலாமா? அல்லது தளர்வுகளுடன் கூடிய லாக்டவுனை அமல்படுத்தலாமா என்று முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11.00 மணிக்கு முதல்வர் தலைமையில் நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், காவல்துறையைச் சேர்ந்த உயரதிகாரிகள், பல்வேறு துறையைச் சேர்ந்த அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவது, தளர்வுகளற்ற முழு ஊரடங்கை நீட்டிப்பது, கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications