மகளிர் உரிமை தொகை + கல்விக்கடன் தள்ளுபடி.. தங்கம் மாதிரி.. தமிழக அரசு சொன்ன 2 குட் நியூஸ்
சென்னை: கடந்த 48 மணி நேரத்தில் மகளிர் உரிமை தொகை மற்றும் கல்விக்கடன் கடன் தள்ளுபடி தொடர்பாக இரண்டு முக்கியமான அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது. அந்த அறிவிப்புகளை இங்கே பார்க்கலாம்.
அறிவிப்பு 1:
ஆதிதிராவிடர் மாணாக்கர்களின் கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது.
தமிழகத்தில் நீண்ட நாட்களாக மக்களின் கோரிக்கையாக கல்விக் கடன் தள்ளுபடி இருந்து வந்தது. பல்வேறு கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று ஆளும் திமுகவும் தேர்தல் அறிக்கையில் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் மாணவர்கள் பலரும் கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்று கடந்த சில வாரங்களாக தீவிரமாக கோரிக்கை வைத்து வந்தனர்.

முக்கியமாக ஆதிதிராவிடர், பழங்குடியினர், கிறிஸ்தவ ஆதிதிராவிடர் மாணாக்கர்கள் தங்கள் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். அவர்களின் கோரிக்கையை தற்போது தமிழ்நாடு அரசு ஏற்று ஆதிதிராவிடர் மாணாக்கர்களின் கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணாக்கர்களுக்கு 1972-1973 முதல் 2002-2003 வரையிலான காலங்களில் மருத்துவம் / மருத்துவம் சார்ந்த படிப்புகள் உட்பட அனைத்து படிப்புகளுக்கும் மற்றும் 2003-2004 முதல் 2009-2010 வரையிலான காலங்களில் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு வழங்கப்பட்ட கல்விக் கடன்களில் ரூ.48.95 கோடி நிலுவைத் தொகையினை மாணாக்கர்களிடமிருந்து வசூலிக்க இயலாததன் காரணமாகவும், வசூலிக்க சரியான பதிவேடுகள் மற்றும் விவரங்கள் ஏதும் அலுவலக ஆவணங்களில் இல்லாததாலும் மற்றும் வசூலிக்க வேண்டிய நபர்களை அடையாளம் காண இயலாததாலும், ரூ.48,95,00,000/-ஐ (ரூபாய் நாற்பத்தெட்டு கோடியே தொண்ணூற்று ஐந்து லட்சம் மட்டும்) சிறப்பினமாக கருதி முழுவதும் தள்ளுபடி (Write off proposal) செய்து அரசு ஆணையிடுகிறது, என்று அறிவித்துள்ளனர்.
அறிவிப்பு 2:
அடுத்த 3 மாதங்களில் தமிழ்நாட்டில் அனைத்து தகுதி உள்ள மகளிருக்கும் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ராமநாதபுரத்தில் நடந்த திருமணம் ஒன்றில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இனி புதிதாக மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பம் செய்தால்.. அந்த விண்ணப்பங்கள் ஏற்க முடியுமா என்ற கேள்விக்கு தமிழ்நாடு சட்டசபையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்பே பதில் அளித்திருந்தார். யாருக்கும் விடுபடாமல் எப்படி மகளிர் உரிமைத் தொகை வழங்க முடியுமோ அப்படி வழங்கி வருகிறோம்.
எவ்வளவு பேருக்கு கூடுதலாக வழங்க முடியுமோ விதிகளுக்கு உட்பட்டு அவர்களுக்கு உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் புதிதாக விண்ணப்பித்துள்ள தகுதியான அனைவருக்கும் 3 மாதத்தில் ₹1,000 உரிமைத்தொகை தரப்படும் என்று சட்டசபையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
மகளிர் உரிமை தொகை: தமிழ்நாட்டில் புதிய ரேஷன் கார்டு பெற்றவர்களுக்கு வரும் நாட்களில் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே முன்னாள் அரசு ஊழியர்களின் மனைவிகள், கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகள் ஆகியோர்களுக்கு எல்லாம் இந்த திட்டத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் ஏற்கனவே பென்ஷன் பெறக்கூடிய பெண்கள், அரசின் வேறு நிதிகளை வங்கியில் பெற கூடிய பெண்களுக்கு பணம் வழங்கப்படவில்லை. இவர்களுக்கு திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் போது அதற்கான அறிவிப்புகள் வரலாம் என்றுகூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications