உக்ரைனில் உள்ள தமிழக மாணவர்களை மீட்க சிறப்புக் குழு... முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு
உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்க சிறப்புக் குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை: உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்க சிறப்புக் குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்திய தூதர்களுடன் ஒருங்கிணைந்து மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள தமிழக எம்.பி.க்கள் திருச்சி சிவா, கலாநிதி வீராசாமி, எம்.எம்.அப்துல்லா மற்றும் சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்டோர் அடங்கிய குழுவை அமைத்து முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்க சிறப்புக் குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. உக்ரைன் மீது கடந்த 24 ஆம் தேதி ரஷ்யா போர் தொடுத்தது. உக்ரைன் தலைநகரான கீவ் நகரை சுற்றிவளைத்து ரஷ்ய வீரர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
7 நாட்களை கடந்து போர் நீடித்து வரும் நிலையில், தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் காணப்படுகிறது. உக்ரைன் நகரம் எலும்புக்கூடாக காட்சி அளிக்கிறது. போரை முடிக்கு கொண்டுவரும் வகையில் உக்ரைன் - ரஷ்யா இடையே பெலாரஸ் நாட்டின் கோமல் நகரில் பேச்சுவார்த்தை நடந்தது. இரு நாடுகளை சேர்ந்த உயர்நிலை தூதுக்குழு அதிகாரிகள் மட்டத்தில் நடந்த இந்த பேச்சுவார்த்தையின்போது, போரை உடனடியாக நிறுத்திவிட்டு ராணுவத்தை வெளியேற்றும்படி ரஷ்யாவுக்கு உக்ரைன் கோரிக்கை விடுத்தது. முதல் சுற்று பேச்சுவார்த்தை எந்த உடன்பாடும் எட்டப்படாமல் நிறைவடைந்தது. தொடர்ந்து அங்கு தாக்குதல்கள் நடந்து வருகின்றன.

2 ஆம் கட்ட பேச்சுவார்த்தை
2 ஆம் கட்ட பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ரஷ்யா அறிவித்துள்ளது. ரஷ்யாவுடன் 2 ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருவதாக உக்ரைன் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டில் ரஷ்ய ராணுவம் தொடர்ந்து 8வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனிடையே உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முதல்வர் ஆலோசனை
இந்த நிலையில், உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழக மாணவர்களை மீட்க சிறப்பு குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. உக்ரைனில் உள்ள தமிழக மாணவர்கள் மீட்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே அறிவுறுத்தியதன் அடிப்படையில், உக்ரைனில் உள்ள தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர்கள் மற்றும் புலம் பெயர்ந்தோரை மீட்டு, பாதுகாப்பாகத் தமிழகத்திற்குக் கொண்டுவர மாநில, மாவட்ட அளவில் மற்றும் டெல்லியில் தொடர்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் இப்பணிகளை மேற்கொள்ள ஏதுவாக அவசரக் கட்டுப்பாட்டு மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

அவசர கட்டுப்பாட்டு மையம்
இந்த அவசரக் கட்டுப்பாட்டு மையங்களில் இதுவரை 3,025 தொலைபேசி அழைப்புகளும், 4,390 மின்னஞ்சல்களும் பெறப்பட்டுள்ளன. அதனடிப்படையில், தமிழ்நாட்டைச் சார்ந்த 2,223 மாணவர்கள் தொடர்பான விவரங்கள் தொகுக்கப்பட்டு, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, அவர்களை மீட்டு, தாயகம் அழைத்துவர விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மாணவர்கள் பாதுகாப்பு
மேலும், தமிழ்நாடு அரசின் சார்பில் அந்த மாணவர்களோடு உக்ரைன் நாட்டிலுள்ள மாகாணங்கள் வாரியாகத் தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டு, மாணவர்களின் பாதுகாப்பைத் தொடர்ந்து உறுதி செய்து வருவதோடு, அவர்களை விரைந்து மீட்டுக் கொண்டு வருவதற்கான தேவையான தொடர் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஒருங்கிணைப்பு அலுவலர்
மேலும், மீட்பு தொடர்பான ஒருங்கிணைப்புப் பணிகளை தமிழ்நாடு அரசுடன் ஒன்றிணைந்து விரைந்து மேற்கொள்ள ஏதுவாக, மத்திய அரசின் சார்பாக ஒருங்கிணைப்பு அலுவலர் ஒருவரை நியமனம் செய்திடுமாறு முதல்வர் மு.க ஸ்டாலின் மத்திய அரசைக் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், மத்திய அரசின் தொலைத்தொடர்பு அமைச்சக செயலாளர் கே. ராஜாராமன் ஒருங்கிணைப்பு அலுவலராக நியமனம் செய்யப்பட்டு, மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

மாணவர்களை மீட்க நடவடிக்கை
இன்று காலை 6 மணி வரை தமிழ்நாட்டைச் சார்ந்த 193 மாணவர்கள் தாய்நாடு திரும்பியுள்ள நிலையில், தமிழ்நாடு அரசின் செலவில் அவர்கள் தங்களது சொந்த மாவட்டங்களுக்கு சென்றடைய உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முதல்வர் மு.க.ஸ்டாலின், உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சார்ந்த எஞ்சியுள்ள மாணவர்களை உடனடியாக மீட்பதற்குத் தேவையான கீழ்க்காணும் நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

ரஷ்ய எல்லை வழியாக மீட்ட வேண்டும்
அதன்படி உக்ரைன் நாட்டின் கிழக்குப் பகுதியில் அதிகமாக தமிழ்நாட்டு மாணவர்கள் தங்கியிருப்பதால், அவர்களை ரஷ்ய நாட்டின் எல்லை வழியாக அழைத்து வருவதற்கு மத்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் மூலம் தொடர்ந்து தொடர்புகொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். தமிழ்நாட்டு மாணவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து, அவர்களை மீட்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அவர்களுக்குத் தெரிவித்து, வழிநடத்தி அழைத்து வரவேண்டும்.

சிறப்புக்குழு நியமனம்
உக்ரைன் நாட்டின் அண்டை நாடுகளான ஹங்கேரி, ருமேனியா, போலந்து மற்றும் சுலோவாகியா ஆகிய நாடுகளில் தற்காலிகமாக அடைக்கலம் புகுந்துள்ள தமிழ்நாட்டு மாணவர்களை உடனடியாக சிறப்பு விமானங்கள் மூலமாக தமிழ்நாட்டிற்கு அழைத்து வருவதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். தமிழக மாணவர்களை விரைந்து அழைத்து வருவதற்கு ஏதுவாக, மேற்படி நாடுகளுக்குச் சென்று, அங்குள்ள இந்தியத் தூதரகங்களுடன் ஒருங்கிணைந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழ்நாட்டைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி சிவா, கலாநிதி வீராசாமி, எம்.எம். அப்துல்லா மற்றும் சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி. இராஜா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் 4 இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களும் இணைந்து சென்று ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications