இனி வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3 ஆண்டு ஜெயில்.. தமிழக அரசின் மசோதாவுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல்!
சென்னை: நமது நாட்டில் சில கடன் கொடுக்கும் நிறுவனங்கள் அதைக் கட்ட முடியாமல் சிரமப்படுவோரிடம் இருந்து கடனை வசூலிக்க மோசமான வழிகளைக் கையாள்கின்றன. இதனால் த*கொலை சம்பவங்கள் கூட நடக்கிறது. இதைத் தடுக்கும் வகையில் வலுக்கட்டாயமாகக் கடன் வசூல் செய்வதைத் தடை விதிக்கும் மசோதாவைத் தமிழ்நாடு அரசு நிறைவேற்றியது. இந்த மசோதாவுக்கு ஆளுநர் ரவி இப்போது ஒப்புதல் அளித்துள்ளார்.
நமது நாட்டில் கடனே வேண்டாம் எனச் சொல்வரை கூட வங்கிகளும் கடன் வழங்கும் நிறுவனங்களும் தேடித் தேடி கடன் கொடுக்கும். எல்லா தவணைகளையும் சரியாகச் செலுத்தும் வரை பிரச்சினை இல்லை. ஒரே ஒரு தவணையைச் செலுத்த முடியாமல் போனால் கூட சிக்கல் ஆரம்பித்துவிடும். கடனை கொடுக்கும்போது இருந்த டோனும் கடனை வசூலிக்கும் போது இருக்கும் டோனும் மொத்தமாக மாறி இருக்கும்.

கட்டாய கடன் வசூல்
சில கடன் நிறுவனங்கள் மிக மோசமான முறையைக் கூட இதற்காகக் கையாள்கிறார்கள். இதனால் ஏற்கனவே கஷ்டத்தில் இருப்போர் சில விபரீதமான முடிவுகளையும் கூட எடுக்கும் நிலை ஏற்படுகிறது. இதைத் தடுக்கும் வகையில் தமிழ்நாடு அரசு கட்டாய கடன் வசூலைத் தடுக்கும் மசோதாவைக் கொண்டு வந்தது. கடந்த ஏப்ரல் மாதம் இந்த மசோதாவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சட்டசபையில் கொண்டு வந்தார்.
ஆளுநர் ஒப்புதல்
அந்த மசோதாவின் கீழ் வலுக்கட்டாயமாகக் கடன் வசூல் செய்தால் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது ரூ.5 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். கடந்த ஏப்ரல் மாதம் இந்த மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், அது ஆளுநரின் ஒப்புதலுக்காக ராஜ்பவனுக்கு அனுப்பப்பட்டது. இந்தச் சூழலில் தான் இந்த மசோதாவுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த சட்டம் கடன் வழங்கும் நிறுவனங்கள், செயலிகளுக்குக் கட்டுப்பாடுகளை விதிக்கும். கடன் வழங்கும் நிறுவனங்கள் வலுக்கட்டாயமாகக் கடன்களை வசூலிக்கும் நடவடிக்கைகளைத் தடுக்கும் வகையில் இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்படி கடன் வசூலில் ஈடுபடும் நிறுவன ஊழியர்களின் துன்புறுத்தலால் கடன் பெற்றவர்கள் தற்கொலை செய்தால்.. சம்பந்தப்பட்ட நிறுவனமே தற்கொலைக்குத் தூண்டியதாகக் கருதப்படும்.
சிறை, அபராதம்
கடன் வழங்கும் நிறுவன ஊழியர்கள் கடன் பெற்றவர்களையோ அல்லது அவர்களது குடும்பத்தினரையோ மிரட்டினால், பின் தொடர்ந்தாலோ அந்த ஊழியருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.. அல்லது ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். அப்படி இல்லை என்றால் இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். மேலும், ஜாமீனில் வெளி வரமுடியாத ஜெயில் தண்டனை விதிக்கப்படும் என்று கூறப்பட்டு இருந்தது.
புதிய விதிகள்
மேலும், கடனை வசூல் செய்யும் நிறுவனங்கள், வெளியாட்களைப் பயன்படுத்தவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது., கடன் பெற்றவர்களையோ அல்லது அவர்களது குடும்பத்தினரின் பொருட்களைப் பறிமுதல் செய்தல், ஆவணங்களை அனுமதியின்றி எடுத்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டால் அவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை அல்லது ரூ.5 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.
கடன் வசூல் என்ற பெயரில் சில நிறுவனங்களும் ஊழியர்களும் கஷ்டத்தில் இருக்கும் குடும்பங்களை மேலும் மேலும் கஷ்டத்திற்குள்ளாகும் சம்பவம் நடக்கும் நிலையில், அதைத் தடுக்கும் வகையிலேயே தமிழ்நாடு அரசு இந்த மசோதாவைக் கொண்டு வந்தது. அதற்கு இப்போது ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications