பட்டையை கிளப்பும் வெயில்..3 நாட்களுக்கு மிதமான மழை..இதமான தகவல் சொன்ன வானிலை மையம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்களில் அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
சென்னை: தமிழ்நாட்டில் இரண்டு நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வெயில் பட்டையை கிளப்பி வரும் நிலையில் மார்ச் 8 முதல் 10 வரை 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெயில் காலம் ஆரம்பிக்கவே இல்லை அதற்குள் பல ஊர்களில் சுள்ளென்று அடிக்கிறது. இதுக்கே இப்படியா இனிதான் இருக்கு ஆட்டம் என்று அச்சுறுத்துகிறது சூரியன். மழை இதோ அதோ என்று போக்கு காட்டுகிறது. சில நேரங்களில் மழை பெய்வது போல வந்து ஏமாற்றி விடுகிறது. இரவு நேரங்களில் குளிர்ந்த காற்று வீசி புழுக்கத்தை தனிக்கிறது.

கோடை காலத்தை சமாளிக்க என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்று மத்திய, மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் இன்றும் நாளையும் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 08.03.2023 முதல் 10.03.2022 வரை தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசான, மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications