பிளஸ் 1 தேர்வு: சயின்ஸ் குரூப் மாஸ்.. கம்ப்யூட்டர் சயின்ஸில் இத்தனை பேர் பாஸா? ரிசல்ட் சொல்லும் சேதி!
சென்னை : பதினொன்றாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கும் நிலையில் அதிகபட்சமாக கணினி அறிவியல் பாடப் பிரிவில் 99.39 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பாடப்பிரிவு வாரியாக பார்க்கும் போது அறிவியல் பாடப் பிரிவு மாணவர்கள் 94.31% தேர்ச்சி பெற்றுள்ளனர்.
2023- 2024 கல்வி ஆண்டுக்கான மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் மார்ச் 4ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை நடைபெற்றன. இந்த நிலையில் இன்று தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கிறது மொத்தம் 8 லட்சத்து 1172 மாணவர்கள் தேர்வு எழுதினர்.

4,26,821 மாணவிகளும், 3 லட்சத்து 84 ஆயிரத்து 351 மாணவர்களும் தேர்வு எழுதி நிலையில், 7,39,539 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் 91.17 சதவீதம் தேர்ச்சி கிடைத்துள்ளது. மாணவர்களை விட மாணவியர்கள் 7.43 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் பாடப்பிரிவு வாரியான தேர்ச்சி சதவீதத்தில் அறிவியல் பாடப் பிரிவு மாணவர்கள் முன்னிலையில் இருக்கின்றனர். அந்த வகையில் 94.31% மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். வணிகவியல் பாடப்பிரிவில் 86.93% மாணவர்களும், கலை பிரிவுகளில் 72.89% மாணவர்களும், தொழில்பாட பிரிவுகளில் 78.72 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்.
முக்கிய பாடப்பிரிவுகளில் தேர்ச்சி சதவீதத்தை பார்க்கும்போது இயற்பியலில் 97.23% மாணவர்களும், வேதியியலில் 96.20% மாணவர்களும், உயிரியல் பாடப்பிரிவில் 98.25% மாணவர்களும், கணிதத்தில் 97.21% மாணவர்களும்,தாவரவியலில் 91.88 சதவீதம் மாணவர்களும், விலங்கியலில் 96.40% மாணவர்களும், கணினி அறிவியலில் 99.39 சதவீதம் மாணவர்களும், வணிகவியலில் 92.45 சதவீதம் மாணவர்களும், கணக்கு பதிவியலில் 95.22 சதவீதம் மாணவர்களும் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்.
தேர்வு எழுதிய மாற்றுத்திறன் மாணாக்கர்களின் எண்ணிக்கை 8221ஆக உள்ள நிலையில் தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 7504 அதாவது 91.27 சதவீதமாக உள்ளது. இதேபோல 187 சிறைவாசிகள் தேர்வு எழுதிய நிலையில் அவர்களில் 170 பேர் வெற்றி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 90.90 ஆக உள்ளது.












Click it and Unblock the Notifications