நடிகை கஸ்தூரி மீது போலீசில் குவியும் புகார்கள்.. களமிறங்கிய தமிழர் முன்னேற்றப் படை வீரலட்சுமி!
சென்னை: தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கு மொழி பேசும் மக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய நடிகை கஸ்தூரி மீது பல்வேறு காவல்நிலையங்களில் புகார் கொடுக்கப்பட்டு வருகிறது. சென்னையில் நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழர் முன்னேற்றப் படையின் தலைவர் வீரலட்சுமி, போலீசில் புகார் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னையில் பிராமணர்கள் பாதுகாப்பு கோரி ஞாயிற்றுக்கிழமையன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்துக்கு பதிலடியாக திராவிடர் கழகத்தினர் 'வருணாசிரம எதிர்ப்பு (வர்ணாசிரம) போராட்டத்தை அதே நாளில் அதே இடத்தில் நடத்தினர்.

அந்தப்புர சேவைக்கு வந்த தெலுங்கர்கள்: பிராமணர்கள் பாதுகாப்பு மாநாட்டில் பேசிய நடிகை கஸ்தூரி, தெலுங்கு பேசுகிறவர்கள் எல்லாம் இன்னைக்கு வந்து தமிழர்கள் இனம் அப்படின்னு சொல்லும்போது எப்பவோ வந்த பிராமணர்களை நீங்கள் தமிழர்கள் இல்லை என்று சொல்ல நீங்கள் யார்? நீங்கள் யார் தமிழர்கள்?. அதனால்தானே தமிழர் முன்னேற்றக் கழகம்னு பெயர் வைக்க முடியலை.. திராவிடர்கள் பெயர் கண்டுபிடிச்சீங்க.. ஜம்மு காஷ்மீர் போல தமிழ்நாட்டில் பிராமணர்கள் இனப்படுகொலை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது என்று பேசினார்.
இடைவிடாத சர்ச்சையில் கஸ்தூரி: நடிகை கஸ்தூரியின் இந்த பேச்சு தமிழ்நாட்டில் மட்டுமல்ல ஆந்திரா, தெலுங்கானாவில் கடும் சர்ச்சையாக வெடித்தது. இதனைத் தொடர்ந்து தமது பேச்சு குறித்து விளக்கம் அளிக்க செய்தியாளர்களை சந்தித்த நடிகை கஸ்தூரி, தாம் அந்தப்புரம் குறித்து பேசவே இல்லை என திட்டவட்டமாக மறுத்தார். மேலும் ஆந்திரா அரசியலில் ஈடுபடுவே; தமிழ்நாட்டில் தெலுங்கு மொழி பேசும் மக்கள் அதிகமாக உள்ள தொகுதியில் போட்டியிடுவேன் என்றும் பிராமணர் அல்லாதவர்கள் தகுதி அடிப்படையில் அரசு பதவிக்கு வந்ததால் லஞ்சம் வாங்குகின்றனர் என்றும் புதிய தலைமுறை டிவி விவாதத்தில் நடிகை கஸ்தூரி தெரிவித்ததும் சர்ச்சையானது.
கஸ்தூரி மீது குவியும் புகார்கள்: இந்த நிலையில் தேனி அல்லிநகரம் காவல் நிலையத்தில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்று திரண்டு, தெலுங்கு மொழி பேசும் மக்களை இழிவாகப் பேசிய நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் கொடுத்தனர். மேலும் தமிழ்நாட்டின் பல இடங்களில் நடிகை கஸ்தூரியை கைது செய்ய வலியுறுத்தி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இதேபோல சென்னையிலும் நடிகை கஸ்தூரி மீது தமிழர் முன்னேற்றப் படை தலைவர் வீரலட்சுமி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
இடஒதுக்கீடு விவகாரம்- வீரலட்சுமி vs கஸ்தூரி: இடஒதுக்கீடு "இட ஒதுக்கீடு பெறுபவர்கள் கொலைக்கார பசங்களா.. : என சில மாதங்களுக்கு முன்னர் நடிகை கஸ்தூரி பேசியது பெரும் சர்ச்சையானது. அப்போதும் தமிழர் முன்னேற்றப் படை வீரலட்சுமி நடிகை கஸ்தூரிக்கு எதிராக காட்டமான வீடியோக்களை வெளியிட்டு கடுமையாக எச்சரித்திருந்தார். இதற்கு பதிலளித்திருந்த கஸ்தூரி, வீரத்தை பேருல மட்டும் வச்சிக்கிட்டு ஏற்கனவே சில ஓசி சோறு பேர்வழிகள் திரியுறாங்க..அடுத்து இன்னுமொரு அரமெண்டல்..3 நாள் கெடு..படையோட வந்து போராட்டம் பண்ணுவேன்னு எல்லாம் சொல்லிச்சா ? நான் கூட என்னவோன்னு நினைச்சேன்..சொந்த சொரி சிரங்கு படையச் சொல்லியிருக்கு போல அந்த அம்மா என கிண்டலடித்திருந்தார். இதற்கும் பதிலடி கொடுத்த வீரலட்சுமி, ,"தேவதாசி முறை இருப்பதாகவே நினைத்துக் கொண்டு தன்னையும் தேவதாசியாகவே நினைத்துக் கொண்டு சிலர் கருத்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்..அவர்கள் வேறு யாரும் அல்ல நடிகை கஸ்தூரி தான்.. நீங்கள் சொல்லும் கருத்துக்கள் எல்லாம் புரட்சிகரமான கருத்துக்கள் என நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? சொல்லும் கருத்துக்களை மக்கள் மிகவும் அருவருப்புடன் பார்க்கிறார்கள்.. தமிழ்நாடே உங்கள் கருத்தை விமர்சிக்கும் நிலையில் நாம் தமிழர் கட்சியினர் மட்டும் உங்களுக்கு வாழ்த்துக்கள் சொல்கிறார்கள். மன்னிப்பு கேட்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என நான் கூறியிருந்தேன்.. போராட்டம் அறிவித்துள்ளேன்.. வருவேன் வெயிட் அண்ட் சீ" என எச்சரித்திருந்தார். தற்போதும் நடிகை கஸ்தூரிக்கு எதிராக வீரலட்சுமி களமிறங்கி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications