மருத்துவர், அரசியல்வாதி, ஆளுநர்.. ஆனால் சொந்த கார் கூட இல்லையாமே.. தமிழிசையின் சொத்து மதிப்பு என்ன?
சென்னை: இரு மாநிலங்களின் ஆளுநராக இருந்த தமிழிசை சவுந்திரராஜனுக்கு சொந்தமாக கார் கூட இல்லையாமே! அவருடைய சொத்து மதிப்பு என்ன தெரியுமா?
நாடாளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் முதல் கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில் வேட்புமனு தாக்கல் கடந்த புதன்கிழமை தொடங்கப்பட்ட நிலையில் நாளையுடன் முடிவடைகிறது.

நேற்று ஒரே நாளில் 400-க்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்ததாக சொல்லப்படுகிறது. பவுர்ணமி, பங்குனி உத்திரம், முகூர்த்த நாள் என்பதால் நேற்றைய தினம் நிறைய வேட்புமனுக்கள் தாக்கலானது.
இந்த நிலையில் தென் சென்னை தொகுதியில் களமிறங்கும் பாஜக வேட்பாளர் தமிழிசையும் நேற்றைய தினம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதில் தமிழிசையின் சொத்து பட்டியலையும் குறிப்பிட்டுள்ளார். தமிழிசை பெயரில் அசையும் சொத்துகள் ரூ 1.57 கோடி என்றும் சொந்தமாக கார் கூட இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தலா ரூ 10 லட்சம் மதிப்புள்ள பரிசோதனை இயந்திரம், ஸ்கேன் இயந்திரம் உள்ளதாகவும் தமிழிசை குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழிசை சவுந்திரராஜன் கணவர் பெயரில் மொத்தம் ரூ 3.92 கோடி அசையும் சொத்துகள் உள்ளதாகவும் மகள் பெயரில் ஒரு கோடி ரூபாயில் அசையும் சொத்து உள்ளதாகவும் 4 கார்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்
தமிழிசை சவுந்திரராஜன் பெயரில் 60 லட்சம் மதிப்பிலான அசையா சொத்துகளும் அவரது கணவர் பெயரில் 13.70 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துகளும் மகள் பெயரில் 70 லட்சம் மதிப்பிலான அசையா சொத்துகளும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தமிழிசை பெயரில் 58 லட்சமும், அவரது கணவர் பெயரில் 3.35 கோடி ரூபாயும் மகள் பெயரில் 3.41 கோடி ரூபாயும் கடன் உள்ளதாக தமிழிசை தெரிவித்துள்ளார்.
தமிழிசை சவுந்திரராஜன் தனது தந்தையின் பெயரை எந்த இடத்திலும் சொல்லாமல் பாஜகவில் நிறைய பதவிகளை வகித்துள்ளார். அவர் கடைசியாக தமிழக பாஜக தலைவராக இருந்துள்ளார். தீவிர உழைப்பாளி என்பதை விட இவர் நேர்மையானவர். இவரது உழைப்புக்கும் நேர்மைக்கும் தெலுங்கானா, புதுவை ஆளுநர் பதவி கொடுக்கப்பட்டது.
தற்போது தமிழிசையை தேசிய அரசியலில் கால் பதிக்க அவருக்கு தென் சென்னை தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில்தான் அவர் வேட்புமனு தாக்கல் செய்தார். அதில்தான் அவருக்கு சொந்தமாக கார் கூட இல்லை என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications