மாணிக்கம் தாகூரையே அடக்க முடிவதில்லை.. பக்கத்து இலைக்கு பாயாசம் கேட்கும் திருமா.. வெளுத்த தமிழிசை
சென்னை: காங்கிரஸால் தமிழகத்தில் உள்ள கூட்டணிக்கே தலைமை தாங்க முடியவில்லை. மாணிக்கம் தாகூரையே அவர்களால் அடக்க முடியவில்லை. தமிழ்நாடு கூட்டணியைத் தலைமை தாங்குவதற்கே பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அகில இந்திய கூட்டணி தலைமை தாங்கப் போகிறார்களா என்றும், அதிகாரத்தில் பங்கு கோருவதில் தவறில்லை என்று கூறி பக்கத்து இலைக்குப் பாயாசம் கேட்கிறார் திருமாவளவன் என்றும் தமிழிசை செளந்தரராஜன் விமர்சித்துள்ளார் (Tamilisai soundararajan).
பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பட்ஜெட் தாக்கல் செய்தார்கள். விவசாயிகளுக்குப் பட்ஜெட்டில் எதுவுமே இல்லை. இன்றைய காலகட்டத்தில் தேஜ கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும் என்பது மக்களின் விருப்பம். அந்த விருப்பம் கட்டாயம் நிறைவேறும். ஏஐ-இல் உலக நாடுகளில் முதல் நாடாகப் போய்க் கொண்டிருக்கிறது. நாங்கள் ட்ரம்போடு ஐரோப்பாவோடு ஒப்பந்தம் போட்டுக் கொண்டு இருக்கிறோம். திமுகவால் கூட்டணியுடன் கூட ஒப்பந்தம் போட முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது.

ஆனால், தினம் தினம் மத்திய அரசை குறை கூறுகின்றனர். நிதி, நிர்வாகம், நிதிக் கொள்கை என்பது எல்லா மாநிலத்துக்கும் ஒன்று தான். முதலமைச்சர் வெற்றி பெற முடியாது என்பதற்காக மாநில சுயாட்சியை கையில் எடுத்திருக்கின்றனர். மாநில சுயாட்சி இவர்கள் மத்தியில் ஆட்சி செய்யும்போது தெரியவில்லை. 27 மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை. பாமர மக்களுக்கான பிரதிநிதிகள் இல்லாமல் அதிகாரிகளை வைத்து அதிகாரம் செய்து கொண்டிருக்கிறார் ஸ்டாலின்.
அதிகாரப் பகிர்வு
உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு அதிகாரப் பகிர்வை கொடுக்காதவர், மாநிலத்துக்கான சுயாட்சியை வாங்கப் போகிறேன் என்று சொல்கிறார். காங்கிரஸ் உடன் இருந்து கொண்டு அதிகாரத்தைப் பற்றி பேசுகின்றனர். பிரதமர் அதிகாரத்தை எல்லா மாநிலங்களுக்கும் சமமாகப் பகிர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கிறார். உங்களுடைய நிதி நிர்வாகம் சரியில்லை.
பத்தரை லட்சம் கடன் வாங்கியுள்ளது மாநில அரசு. ஒவ்வொருவர் தலைமேலும் ஒன்றரை லட்சம் கடன் உள்ளது. டிஆர்பி ராஜா அதிமுக அரசாங்கம் நாலரை கடன் என்று கூறியதும், ஒவ்வொருவரின் தலைமேலும் 57 ஆயிரம் ரூபாய் கடன் இருக்கிறது என்று கூறினார். ஆனால், இன்று 1 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் கடனை ஒவ்வொருவரின் தலையின் மேலும் சுமத்தியுள்ளனர். காங்கிரஸை கூட வைத்துக் கொண்டு உரிமையைப் பற்றி திமுகவினர் பேசுகின்றனர்.
மாணிக்கம் தாகூரையே..
தமிழ்நாடு பெஸ்ட் தான். தமிழகத்தில் நடக்கும் ஆட்சி வொர்ஸ்ட். தமிழ்நாடு, தமிழ் மக்கள் எப்போதுமே உழைப்பாளிகள். அவர்கள் நன்றாகத்தான் வேலை செய்வார்கள். காங்கிரஸில் உள்ள தலைவர்கள் பலருக்கு சூரியனை கும்பிடுவதை விட விசில் அடிப்பது தான் பிடித்திருக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுவாக உள்ளது.
இண்டியா கூட்டணியில் சிறந்த முடிவுகளை எடுப்பதற்கு மம்தாவும், ஸ்டாலினும் தான் சரியான தலைவர்கள் என்று சஞ்சய் ராவத் கூறியுள்ளது குறித்த கேள்விக்கு, காங்கிரஸை சார்ந்தவர்கள் தங்களுக்கு தலைவரே இல்லை என்பதை ஒப்புக் கொள்கிறார்களா, அங்குள்ள இண்டி கூட்டணி ஒப்புக் கொள்கிறார்களா என்பது தெரியவில்லை. இங்குள்ள கூட்டணிக்கே அவர்களால் தலைமை தாங்க முடியவில்லை. மாணிக் தாக்கூரையே அவர்களால் அடக்க முடியவில்லையே.
தேமுதிக பாஜக கூட்டணி
தமிழ்நாடு கூட்டணியைத் தலைமை தாங்குவதற்கே பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அகில இந்திய கூட்டணி தலைமை தாங்கப் போகிறார்களா. தேசிய ஜனநாயகக் கூட்டணியாகிய நாங்கள் வலிமையாக இருக்கிறோம். தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறதா என்பது குறித்த கேள்விக்கு, அகில பாரத தலைவர்கள் இதைப் பற்றி கூறுவார்கள்.
அரியலூர் மாணவி மரணம் தொடர்பான சிபிஐ விசாரணையில் மதமாற்றம் இல்லை என்று கூறியுள்ளது மதவாதிகளுக்குப் பேரிடி என்று திருமா கூறியுள்ளது குறித்த கேள்விக்கு, மதவாதிகளுக்கு எல்லாம் பேரடி இல்லை. நாங்கள் சட்டத்தை மதிப்பவர்கள். முதலில் வேங்கை வயல் விவகாரத்தை அவர் சென்று பார்க்க வேண்டும். வேங்கைவயல் சம்பவம் நடந்து மூன்று வருடமாகிவிட்டது. நலமாக தண்ணீர் குடிக்க வேண்டிய மக்கள், மலமாக தண்ணீரை குடித்துக் கொண்டிருக்கின்றனர்.
பாஜக வெற்றி பெறும்
நாங்கள் சட்டத்தை மதிப்பவர்கள். சட்டத்தில் ஒரு கருந்து வந்தால் அதனை மதிப்போம். காங்கிரஸ் கட்சியில் சண்டை போடுவது அவர்களுடைய தொழில். அதனைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. ஆனால், தமிழ்நாட்டில் எங்கள் கூட்டணியை அடிமைக் கூட்டணி என்கின்றனர். நீங்கள் தான் இன்று அடிமைக் கூட்டணியாக இருக்கிறீர்கள் என்று காங்கிரஸை நான் சொல்கின்றேன்.
எங்களுக்கு எதைப் பற்றியும் கவலை இல்லை. நாங்கள் தான் வெற்றி பெறப் போகிறோம். அதிகாரத்தில் பங்கு கோருவதில் தவறில்லை என்று கூறி பக்கத்து இலைக்குப் பாயாசம் கேட்கிறார் திருமாவளவன். அதனைப் பற்றி கவலை இல்லை. நாங்கள் மிகவும் பலமாக இருக்கிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications