சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

2006-ல் 8.38%-ல் தொடங்கி 2009-ல் 10.1% உச்சம் தொட்டு 2019-ல் 2.19% ... பாதாளத்தில் வீழ்ந்த தேமுதிக

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபை தேர்தல்களில் தவிர்க்க முடியாத சக்தியாக சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்த தேமுதிக இப்போது சீந்துவார் யாருமில்லாத நிலையில் இருக்கிறது.

தற்போதைய சட்டசபை தேர்தலில் அதிமுக பக்கம் போக விரும்பியது தேமுதிக. ஆனால் சொற்ப எண்ணிக்கையில்தான் சீட்டுகள் என்பதால் ரொம்பவே அதிர்ச்சியில் உள்ளது.

தனித்துப் போட்டியிடலாம் என்கிற பேட்டிகளும் தேமுதிக தரப்பில் இருந்து வருகிறது. ஆனால் தனித்து போட்டியிட்டால் கொஞ்ச நஞ்ச வாக்குகளும் காணாமல் போய் கட்சியின் எதிர்காலமே இல்லை என்பதை வலிய அறிவித்ததாகிவிடுமே என்கிற தயக்கமும் அக்கட்சிக்கு இருக்கிறது.

வென்ற விஜயகாந்த்

வென்ற விஜயகாந்த்

2006 சட்டசபை தேர்தலில் முதன் முதலாக தேர்தலை எதிர்கொண்டது தேமுதிக. மொத்தம் 232 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு 8.38% வாக்குகளை அள்ளி மிரட்டல் விடுத்தது அந்த கட்சி. மொத்தமாக 27.64 லட்சம் வாக்குகள் தேமுதிகவுக்கு கிடைத்தன. இருப்பினும் விஜயகாந்த் மட்டுமே அந்த தேர்தலில் வென்றார்.

மாஸ் காட்டிய தேமுதிக

மாஸ் காட்டிய தேமுதிக

2009 லோக்சபா தேர்தலிலும் தனித்தே போட்டியிட்டது தேமுதிக. அதில் 31.26 லட்சம் வாக்குகளுடன் 10.3% என விஸ்வரூபத்தை காட்டியது தேமுதிக. இதனைத் தொடர்ந்து 2011 சட்டசபை தேர்தலில் தேமுதிகவின் டிமாண்ட் அதிகரித்தது.

சட்டசபை எதிர்க்கட்சி

சட்டசபை எதிர்க்கட்சி

2011 சட்டசபை தேர்தலில் தேமுதிகவை அதிமுக கூட்டணியில் இணைத்து கொண்டு 41 தொகுதிகளை கொடுத்தார் ஜெயலலிதா. இதுவரை இல்லாத வகையில் 29 இடங்களில் தேமுதிக வெற்றி வாகை சூடியது. இருப்பினும் வாக்கு சதவீதம் 7.9% என குறைந்தது. அதேநேரத்தில் சட்டசபையில் பிரதான எதிர்க்கட்சி என்கிற அந்தஸ்தை தேமுதிக பெற்றது. இருப்பினும் தேமுதிக- அதிமுக கூட்டணி நீடிக்கவில்லை.

பாஜக அணியில் தேமுதிக

பாஜக அணியில் தேமுதிக

2014 லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் லேடியா? மோடியா? என ஜெயலலிதா பிரசாரம் செய்த களம்.. அப்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு போனது தேமுதிக. 14 லோக்சபா தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிகவால் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியாமல் போனது. வாக்கு சதவீதம் 5.1% என்கிற நிலைக்கு போனது.

மநகூ முதல்வர் வேட்பாளர்

மநகூ முதல்வர் வேட்பாளர்

2016 சட்டசபை தேர்தலில் தேமுதிகவை மிகவும் எதிர்பார்த்தது திமுக. திமுக அணியில் 55 தொகுதிகள் வரை தேமுதிகவுக்கு கிடைக்கும் நிலை இருந்தது. ஆனால் பாஜக, மதிமுக, இடதுசாரிகள் இணைந்த மக்கள் நலக் கூட்டணிக்கு தலைமை வகித்தது தேமுதிக. விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக பிரகடனம் செய்தது மநகூ. 104 இடங்களில் தேமுதிக இம்முறையும் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியாமல் போனது. வாக்கு சதவீதமும் 2.39% என வீழ்ச்சியை கொடுத்தது. இங்கிருந்துதான் தேமுதிகவின் அத்தியாயமே ஆட்டம் கண்டது. தேமுதிகவின் 2-ம் கட்ட தலைவர்கள் பலரும் திமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு போகினர்.

கட்சி அங்கீகாரமே கேள்விக்குறி

கட்சி அங்கீகாரமே கேள்விக்குறி

2019 லோக்சபா தேர்தலில் திமுக- அதிமுக என இரண்டு கட்சிகளுடனும் பேரம் பேசியது. ஒருகட்டத்தில் திமுக அசிங்கப்படுத்தி துரத்திவிட்டது தேமுதிகவை. அதனால் வேறுவழியே இல்லாமல் அதிமுக கூட்டணிக்குத்தான் போயாக வேண்டிய பரிதாப நிலையில் இருந்தது. அதனால் அதிமுக கொடுத்த 4 லோக்சபா தொகுதிகளில் போட்டியிட்டது தேமுதிக. இந்த 4 தொகுதிகளிலுமே படுதோல்வியை சந்தித்த தேமுதிகவின் வாக்கு சதவீதம் 2.19% ஆகவும் படுபாதாளத்துக்குப் போனது. இதனால் பிரதான எதிர்க்கட்சியாக கோலோச்சிய தேமுதிகவின் அங்கீகாரமே கேள்விக்குறியாகிப் போனது.

திசைவழி தெரியாமல்

திசைவழி தெரியாமல்

தற்போதைய சட்டசபை தேர்தலில் தேமுதிகவை திமுகவும் அதிமுகவும் கண்டுகொள்ளவில்லை. இதனால் போகும் திசைவழி தெரியாது நடுவழியில் நிற்கிறது. தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நலக் குறைவு, 2-ம் கட்ட தலைவர்கள் எவருமே இல்லாத சூழல், குடும்ப ஆதிக்கம், மிதமிஞ்சிய நம்பிக்கை, களயதார்த்தத்தை புரிந்து கொள்ளாத எகத்தாள அணுகுமுறை என தேமுதிக தலைமை கடைபிடிக்கும் அத்தனை போக்கும் அந்த கட்சியை 15 ஆண்டுகளிலேயே படுகுழிக்குள் புதைத்துக் கொண்டிருக்கிறது. அந்தோ பரிதாபம் என்பதைத்தவிர வேறு என்ன சொல்ல முடியும்?

English summary
According to the ground situation the ADMK and DMK parties both ignored the Vijayakanth's DMDK Party.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X