அகதிகள் என கூற அநாதைகள் அல்ல; சட்டசபையில் இலங்கை தமிழர்களுக்காக முதல்வர் ஸ்டாலின் சூப்பர் உத்தரவு
சென்னை : இலங்கை அகதிகள் முகாம் இனி மறுவாழ்வு மையம் என அழைக்கப்படும்; அகதிகள் எனக் கூற அவர்கள் அநாதைகள் அல்ல என முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு இலங்கை தமிழர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
இலங்கையில் இனப்போர் மூண்டதையடுத்து அகதிகளாக தமிழர்கள் 1980களில் மற்றும் 1990களில் தமிழகத்திற்கு வந்தனர். அவர்களை ஆட்சியில் இருந்த அனைத்து அரசுகளுமே அரவணைத்து முகாம்களை அமைத்து தங்க வைத்தன.
இலங்கை தமிழர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அமைக்கப்பட்டன. அவர்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டன. கல்வி உரிமை அளிக்கப்பட்டது. பல்வேறு வேலைவாய்ப்புகளும் ஏற்படுத்தி தரப்பட்டன.

தாய் மண் இலங்கை
போர்முடிந்து பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், தொடர்ந்து தமிழகத்திலேயே பிறந்து தமிழகத்திலேயே வளர்ந்த இலங்கை தமிழர்கள் ஏரளாமானோர் உள்ளனர். அவர்களில் பலர் தாய் மண்ணான இலங்கைக்கு செல்ல விருப்பம் இன்றி தொடர்ந்து தமிழகத்திலேயே இருக்கிறார்கள்.

சிறப்பு அறிவிப்புகள்
அப்படி தமிழகம் முழுவதும் முகாம்களில் தங்கியிருக்கும் இலங்கை தமிழர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு இந்த முறை ஏராளமான புதிய திட்டங்களை அறிவித்துள்ளது. ஸ்டாலின் இது தொடர்பாக நேற்று சட்டசபையில் விதி எண்110 ன் கீழ் பேசும் போது, இலங்கை தமிழர்களுக்கு இவ்வாண்டில் 108 கோடி மதிப்பில் 3510 வீடுகள் கட்டித்தரப்படும், தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தமிழர்களின் அகதிகள் முகாமில் வீடுகள், சாலைகள் சீரமைக்கப்படும். இலங்கை தமிழர்கள் முகாம்களில் உள்ள 7,469 பழுதடைந்த வீடுகளும் 231 கோடி ரூபாய் செலவில் புதிதாகக் கட்டித் தரப்படும். அவர்களது குழந்தைகள் கல்விக்காக 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

குழு அமைப்போம்
இலங்கை தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவது, சொந்த நாட்டிற்கு செல்வதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் என உள்ளடக்கிய குழு அமைக்கப்படும். இலங்கை தமிழ் அகதிகளின் குடும்பத்தினருக்கு விலையில்லா எரிவாயு அடுப்பு மற்றும் இணைப்பு வழங்கப்படும் என்றார்.

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்
இந்ந்நிலையில் இன்று சட்டசபையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், இலங்கை தமிழர்கள் அனாதைகள் அல்ல, நாம் இருக்கிறோம் அவர்களுக்கு துணையாக. எனவே அந்த உணர்வோடு இனி இலங்கை தமிழ் அகதிகள் முகாம், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் என்று அழைக்கப்படும் என்று சட்டசபையில் ஆணை பிறப்பித்துள்ளார். முதல்வரின் இந்த வார்த்தை இலங்கை தமிழர்களுக்கு பால் வார்த்துள்ளது.












Click it and Unblock the Notifications