பள்ளிகளுக்கு விடுமுறையா? வேகமாக பரவும் இன்புளுயன்ஸா.. தமிழகத்தில் 965 பேருக்கு பாதிப்பு! மா.சு பரபர
சென்னை: தமிழகத்தில் இன்புளுயன்ஸா காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், இது தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் பல இடங்களில் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதாகப் புகார் எழுந்துள்ள நிலையில், சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சு, மருந்து தட்டுப்பாடு குறித்தும் இன்புளுயன்ஸா குறித்தும் சில முக்கிய கருத்துகளை தெரிவித்தார்.

அமைச்சர் மா.சு
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "கடந்த சில நாட்களாகத் தமிழக மருத்துவமனையில் மருந்துகள் தட்டுப்பாடு உள்ளதாகச் செய்திகள் வெளியாகி வருகிறது. இது பொய்யான செய்தி என ஏற்கனவே பல முறை தெளிவுபடுத்திவிட்டோம். ஆனாலும், மீண்டும் மீண்டும் இப்படி செய்தி வெளியாகி வருகிறது. ஒவ்வொரு வாரமும் 5 அல்லது 6 மருத்துவமனையில் ஆய்வு செய்து வருகிறோம். மருத்துவமனைகளில் இருக்கும் மருந்து கிடங்கைத்தான் தான் முதலில் ஆய்வு செய்கிறோம். தமிழ்நாட்டில் எந்தவொரு மருத்துவமனையிலும் தட்டுப்பாடு இல்லை.

தட்டுப்பாடு இல்லை
இது போன்ற பொய்யான புகாரைத் திட்டமிட்டு ஒரு சிலர் பரப்பி வருகின்றனர். நிர்வாக வசதிக்காக ஒரு சிலரை பணியிடை மாற்றம் செய்தோம். அவர்கள் தான் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்திற்குத் தேவையான 327 அத்தியாவசிய மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. அடுத்த 3 மாதங்களுக்குத் தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளன. இதுவரை மாநிலத்தில் 32 மருந்து கிடங்குகள் தான் இருந்து வந்தன. ஆனால், இப்போது புதிதாக நான்கு மருத்துவ கிடங்குகளை அமைத்து உள்ளோம். இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கிடங்கு என்ற ரீதியில் தமிழகத்தில் மருத்துவ கிடங்குகளை ஏற்படுத்தி உள்ளோம்.

மாற்று ஏற்பாடுகள்
அதேநேரம் Iv fluids போன்ற சில குறிப்பிட்ட மருந்துகள் மட்டும் கிடைப்பதில் சிரமம் உள்ளது உண்மை தான். உக்ரைன் போர் காரணமாகவே இந்த மருந்துகளை இறக்குமதி செய்வதில் காலதாமதமானது. மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்குத் தேவையான அனைத்து மருந்துகளும் போதிய அளவு உள்ளன. அத்திட்டத்திற்குத் தேவையான 32 வகை மருந்துகள் அந்தந்த மாவட்ட மருந்து கிடங்கில் 3 மாத காலத்திற்கான இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. தட்டுப்பாடு ஏற்பட்ட மருந்துகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. எனவே, மாநிலத்தில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வெளியாகும் செய்து முற்றிலும் பொய்ய

புகார் அளிக்கலாம்
யாராவது மாநிலத்தில் மருந்து தட்டுப்பாடு நிலவுவதாகச் செய்தி வெளியிட விரும்பினால், அதற்கு முன்னதாக மருந்து கிடங்கை வந்து நேரடியாக ஆய்வு செய்யுங்கள். இதற்கான அனுமதியை நாங்கள் தருகிறோம். பொதுமக்கள் மருந்து பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டால் 104 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். தமிழக மருத்துவமனைகள் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மருத்துவமனைக்கு அரிதான நோய்களுக்கான சிறந்த மையம் என்ற சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இன்புளுயன்ஸா காய்ச்சல்
பருவ மழைக்கு முன்னால் வரும் காய்ச்சல் பாதிப்பு குழந்தைகளுக்கு வரக்கூடியது தான்.. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக நாம் கடைப்பிடித்து வந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் காய்ச்சல் பாதிப்பு பெரிதாகத் தெரியவில்லை இப்போது கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளதால் மீண்டும் பாதிப்பு ஏற்படுகிறது இன்று ஒரே நாளில் மாநிலத்தில் 47 பேர் இன்புளுயன்ஸா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

பள்ளி அனுப்ப வேண்டாம்
இதுவரை மாநிலத்தில் 965 பேருக்கு இன்புளுயன்ஸா காய்ச்சல் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரையிலும் 10 பேர் உயிரிழந்து உள்ளனர். குழந்தைகளுக்குக் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் பெற்றோர்கள் பள்ளிகளுக்கு அனுப்பக்கூடாது. அதேபோல பள்ளிகளில் ஆசிரியர்கள் குழந்தைகளுக்குக் காய்ச்சல் இருப்பது தெரியவந்தால் வீடுகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

விடுமுறையா
தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு பெரிய அளவில் இல்லை. இதனால் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழகத்தில் 4740 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். மருந்து சீட்டு இல்லாமல் எந்த மருந்தும் கொடுக்கக் கூடாது என்று மருந்துக் கடைகளுக்கு ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளோம். பொதுமக்களும் மருத்துவர்கள் ஆலோசனை இல்லாமல் மருந்துகளை வாங்கக் கூடாது" என்றார்.












Click it and Unblock the Notifications