எச்சரிக்கை தேவை! சென்னை, மட்டுமல்ல இந்த பகுதிகளில்.. இன்றும் அதிதீவிர கனமழை.. தமிழ்நாடு வெதர்மேன்
சென்னை: சென்னையில் இன்று அதிகாலை மிகக் குறுகிய நேரத்தில் அதிக மழை பெய்த நிலையில், அதேபோல மீண்டும் இன்றிரவு ஏற்படலாம் எனத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அனைத்து நிலைமைகளும் சாதகமாக உள்ளதால் சென்னை, கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உட்பட வடக்கு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த அக்டோபர் 26ஆம் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அப்போது முதலே மாநிலத்தில் பரவலாக நல்ல மழை பெய்தது.
தீபாவளி தினத்தன்று கூட மாநிலத்தில் பல்வேறு பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது. அதேபோல சென்னையில் ஓரிரு இடங்களில் மழை பெய்தது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி
இந்தச் சூழலில், வங்கக்கடல் அருகே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உட்பட வடமாவட்டங்களில் அதிதீவிர கனமழை பெய்யும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. அதன்படி நேற்று மாலை தொடங்கி சென்னை மற்றும் சுற்று வட்ட பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. தாம்பரம், கிண்டி, வேளச்சேரி, கோயம்பேடு, அண்ணாசாலை, சேப்பாக்கம் என நகரின் அனைத்து பகுதிகளிலும் கனமழை பெய்தது.

வேண்டுகோள்
இன்று காலை மழையின் அளவு சற்று குறைந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் வடசென்னை பகுதிகளில் ஆய்வு செய்தார். மேலும், அடுத்த சில நாட்களுக்குக் கனமழை தொடரும் என்பதால், அடுத்த 2 நாட்களுக்குப் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த அவர், தீபாவளிக்காக வெளியூர் சென்றவர்கள் சில நாட்கள் கழித்து சென்னை திரும்புமாறு அவர் கேட்டுக்கொண்டார். மேலும், மீட்புப் பணிகள் குறித்தும் அவர் பார்வையிட்டார்.

தாழ்வான பகுதி
இந்தச் சூழலில் சில மணி நேரம் இடைவெளி விட்டிருந்த மழை, மதியத்திற்குப் பிறகு மீண்டும் பெய்யத் தொடங்கியுள்ளது. இதனால் பாண்டிபஜார், சென்னை விமான நிலையம் உள்ளிட்ட இடங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழை அடுத்து வரும் நாட்களிலும் தொடரும் என்பதால் சென்னை மாநகராட்சி தாழ்வான பகுதிகளில் வசிப்போரை மீட்டு பள்ளிகளில் தங்க வைக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளது.

தமிழ்நாடு வெதர்மேன்
இந்நிலையில், இன்று இரவும் சென்னை முதல் கடலூர் வரையிலான பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர், "இன்று இரவு சென்னையில் இருந்து கடலூர் பெல்ட் வரை ஒரே மாதிரியான சூழல் நிலவுகிறது. இதனால் சென்னை முதல் கடலூர் வரையிலான பகுதிகளில் இரவு முதல் திங்கள்கிழமை காலை வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது

மீண்டும் கனமழை
சென்னை முதல் டெல்டா பெல்ட் வரையிலான பகுதிகளில் ஒரே போன்ற சூழல் நிலவுவதால் மீண்டும் இன்று இரவு தொடங்கி காலை வரை கனமழை பெய்யக் கூடும். இன்று காலை திடீரென குறுகிய நேரத்தில் மழை பெய்தது என்பது மிக மிக அரிதான நிகழ்வு. கடந்த 200 ஆண்டுகளில் இரண்டு முறை (1985, 1996) மட்டுமே இதுபோல நடந்துள்ளது. இன்னும் கூட இதே நிலைமைகள் தான் தொடர்வதால் சென்னையில் மீண்டும் 100மிமீ மேல் பதிவாகலாம், அதேபோல கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரம், பாண்டிச்சேரி ஆகிய நகரங்களிலும் பல்வேறு பகுதிகளில் 100 மிமீ மேல் மழைப் பதிவாக வாய்ப்புள்ளது.

வரும் நாட்கள்
வரும் வாரத்தில் இரண்டு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதிகளும், அடுத்த வாரம் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதியும் உருவாக வாய்ப்புள்ளதால் ஏரி தொடர்பாக அரசு அறிவிப்புகளுக்கும் உத்தரவுகளுக்கும் பொதுமக்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஏற்கனவே, அதிக மழை பெய்துள்ள நிலையில், வரும் காலங்களும் சற்று கடினமானதாகவே இருக்கும்" எனப் பதிவிட்டுள்ளார். அதாவது இன்று இரவும் சென்னை, கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உட்பட வடக்கு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

மின்சார பாதிப்பு
ஏற்கனவே முதல்வர் குறிப்பிட்டது போலச் சென்னை செல்வதைப் பொதுமக்கள் சில நாட்கள் தவிர்த்தால் சிறப்பு. செம்பரம்காக்கம் ஏரியில் தற்போது 2,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில்,நீர் சூழும் இடத்தில் உள்ளவர்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு உடனடியாக செல்ல வேண்டும். மேலும், இரவு நேரத்தில் மழை மிக அதிகமாகப் பெய்யும் போது மின்சாரம் தடைப்படலாம் என்பதால், அதற்கேற்ப தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

முதல்வர் ஆலோசனை
டார்ச், மெழுகுவர்த்தி போன்ற்றை மின்சாரம் தடைப்பட வாய்ப்புள்ள பகுதிகளில் வசிப்போர் தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். முக்கியமான சான்றிதழ்களை, ஆவணங்களை பிளாஸ்டிக் பையில் போட்டு பரண் போன்ற உயரமான இடங்களில் தனியாக வைப்பது மூலம் அவை தண்ணீர் நனைவதில் இருந்து பாதுகாக்கலாம். இந்தச் சூழலில் சென்னை ரிப்பன் மாளிகையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் அமைச்சர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications