கே.பி.முனுசாமிக்கு குறி? - குமுறிய கிருஷ்ணகிரி மாவட்ட தலைகள்.. மீட்டிங்கில் ஓபிஎஸ் சொன்ன விஷயம்!
சென்னை : சென்னையில் சமீபத்தில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி பற்றி புலம்பித் தள்ளியுள்ளனர்.
ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவுக்குப் பிறகு ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையேயான பிளவு பெரிதானது. இரு தரப்பினரும் மாறி மாறி கடுமையாக குற்றம்சாட்டி வருகின்றனர்.
முன்னர், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக இருந்த கே.பி.முனுசாமி, ஓபிஎஸ்ஸை கடுமையாக விமர்சித்துப் பேசி வருகிறார். அவருக்கு ஓபிஎஸ் தரப்பினரும் பதிலடி கொடுத்து வந்தனர்.
இந்நிலையில், ஓபிஎஸ் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தின்போது, கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள் பலர் முனுசாமி துரோகம் செய்துவிட்டதாகக் குமுறியுள்ளனர்.

அதிமுக நிலை
எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வான நிலையில், ஓபிஎஸ் - ஈபிஎஸ் இரு தரப்பினரும் மாறி மாறி கட்சியை விட்டு நீக்கி, தங்களது ஆதரவாளர்களை நிர்வாகிகளாக பதவியில் அமர்த்தி வருகின்றனர். அதிமுகவில் பொதுக்குழு தொடர்பான வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது. இதற்கிடையே எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் மேற்கு மற்றும் வடக்கு மாவட்டங்களில் பயணம் செய்து பொதுக்கூட்டங்களில் பேசி வரும் நிலையில், சமீபத்தில் 40 மாவட்டங்களுக்கு புதிதாக மாவட்டச் செயலாளர்களை நியமித்தார் ஓ.பன்னீர்செல்வம். மற்ற மாவட்டங்களிலும் பொறுப்பாளர்களை நியமிப்பதற்கான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது ஓபிஎஸ் தரப்பு.

ஓபிஎஸ் ஆலோசனை
இந்நிலையில், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் மற்றும் தலைமைக் கழகப் பொறுப்பாளர்களுடன் சமீபத்தில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் சுமார் மூன்றரை மணி நேரம் ஆலோசனை நடத்தினார் ஓ.பன்னீர்செல்வம். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரகாகர் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளும், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்களும் பங்கேற்றனர். இந்த மீட்டிங்கில் அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பாகவும், தமிழகம் முழுவதும் மேற்கொள்ள இருக்கும் சுற்றுப்பயண திட்டம் தொடர்பாகவும் ஓபிஎஸ் ஆலோசித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மாவட்டந்தோறும்
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளுடனும் தனியாகச் சந்தித்துப் பேசினார் ஓபிஎஸ். எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகளிடம் 1 மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தினார் ஓபிஎஸ். தென் மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பலரும் தனது வீட்டிலேயே ஓபிஎஸ் ஆலோசித்த நிலையில், சென்னையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் வட மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஆதரவாளர்கள் குமுறல்
இந்தக் கூட்டத்தின்போது, ஈபிஎஸ் ஆதரவாளராக மாறியுள்ள கே.பி.முனுசாமி குறித்து நிர்வாகிகள் பலரும் விமர்சித்துள்ளனர். கே.பி.முனுசாமி ஜெயலலிதாவால் ஓரங்கட்டப்பட்டிருந்தார். நம்மோடு இணைந்த பிறகு தான் அவரது அரசியல் வாழ்க்கைக்கே ரீ-எண்ட்ரி கிடைத்தது. அவருக்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுத்திருந்தோம். அவருக்கு துணை ஒருங்கிணைப்பாளர் பதவி கிடைத்ததே நம்மிடம் வந்ததால் தான். கூடவே இருந்து எல்லாப் பதவியையும் அனுபவித்துவிட்டு, ஈபிஎஸ் பக்கம் தாவிவிட்டார். காரியவாதியாக செயல்படுகிறார் என கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள் பலரும் குமுறியுள்ளனர்.

கடும் அட்டாக்
மேலும், கே.பி.முனுசாமி இருக்கும் இடம் விளங்காது, நம்மை விட்டுப் போனது நல்லதுதான் என்றும் இந்தக் கூட்டத்தில் சிலர் கமெண்ட் அடித்ததாகக் கூறப்படுகிறது. புகழேந்தி உள்ளிட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கடுமையாக முனுசாமியை அட்டாக் செய்து பேசி வருகின்றனர். கே.பி.முனுசாமியை ஓபிஎஸ் பக்க நிர்வாகிகள் சிலர் கிண்டலாக விமர்சிப்பது குறித்தும் ஓபிஎஸ் எந்தவித மறுப்பும் சொல்லவில்லை என்று கூறப்படுகிறது.

முனுசாமிக்கு குறி
கே.பி.முனுசாமி பற்றி ஓபிஎஸ் எதுவும் பேசவில்லை என்று கூறப்படுகிறது. சில மூத்த நிர்வாகிகள் மட்டுமே அவரைத் தாக்கிப் பேசியுள்ளனர். பின்னர், கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகளை தனியாகச் சந்தித்தபோது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முனுசாமி ஆதரவாளர்களாக இருப்பவர்களிடம் தொடர்ந்து பேசி நட்பை மெயிண்டெய்ன் செய்யுங்கள் என ஓபிஎஸ் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதன் மூலம், முனுசாமியின் ஆதரவாளர்களை தம் பக்கம் இழுக்க ஓபிஎஸ் தரப்பு காய்நகர்த்தி வருவதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications