தமிழ்நாடு முழுவதும் கொத்துக் கொத்தாக டாஸ்மாக் பணியாளர்கள் சஸ்பெண்ட்.. வெளியான லிஸ்ட்
சென்னை: தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் வெளியிட்ட அறிவிப்பில் அனுமதியின்றி டாஸ்மாக் கடைகளை மூடிய காரணத்திற்காக சில்லறை விற்பனை மேற்பார்வையாளர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் மெமோ பற்றிய விவரங்கள் வழங்கப்பட்டிருக்கிறது. 2026 நவம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளின் கணக்கீட்டின்படி, சென்னை, கோவை, மதுரை, சேலம் மற்றும் திருச்சி ஆகிய ஐந்து மண்டலங்களில் மொத்தம் 1,729 மேற்பார்வையாளர்களுக்கு மெமோ கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.
அதிகபட்சமாக சேலம் மண்டலத்தில் 459 பேருக்கும், மதுரை மண்டலத்தில் 475 பேருக்கும், திருச்சி மண்டலத்தில் 418 பேருக்கும், சென்னை மண்டலத்தில் 341 பேருக்கும், கோவை மண்டலத்தில் 36 பேருக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 245 டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதில் சென்னை மண்டலத்தில் அதிகபட்சமாக 169 பேரும், சேலம் மண்டலத்தில் 75 பேரும், மதுரை மண்டலத்தில் ஒருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள். எனினும் கோவை மற்றும் திருச்சி ஆகிய மண்டலங்களில் எந்தவொரு மேற்பார்வையாளரும் சஸ்பெண்ட் செய்யப்படவில்லை. ஒட்டுமொத்தமாக திருநெல்வேலி, திருச்சி, திருவள்ளூர் (கிழக்கு), சேலம், நாமக்கல், புதுக்கோட்டை மற்றும் மதுரை (வடக்கு) ஆகிய மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான பணியாளர்களுக்கு மெமோ மற்றும் சஸ்பெண்ட் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கிறது.
என்ன காரணம்
தமிழகத்தில் மொத்தம் 4 ஆயிரத்து 51 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களுக்கு ரூ.10 திரும்ப கொடுக்கும் திட்டத்தை டாஸ்மாக் நிர்வாகம் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த திட்டத்திற்கு டாஸ்மாக் ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். போதிய இடவசதி, அதிகம் விற்பனையாகும் கடைகளுக்கு கூடுதல் சிரமம், ஸ்கேனர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என ஊழியர்கள் குற்றம் சாட்டி வந்தார்கள்.
அத்துடன் காலிபாட்டில்களை சேகரிக்கும் பணியை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க வேண்டும், தானியங்கி பாட்டில் சேகரிப்பு எந்திரங்களை நிறுவ வேண்டும், கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை ஊழியர்கள் முன்வைத்தார்கள். ஆனால் அரசு இந்தகோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்ற முடியும் என்று கூறியது.
போராட்டம்
இந்த சூழலில் நவம்பர் 1ம் தேதியான 3 நாட்கள் முதல் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெற்று ரூ.10 வழங்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் தமிழகம் முழுவதும் பல இடங்களில் டாஸ்மாக் ஊழியர்கள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்த போராட்டத்தை கைவிட வைக்க, டாஸ்மாக் போராட்டக்குழுவினருடன் நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. முதல் நாள் கடைகளை அடைத்ததால் ரூ.150 கோடி வரையில் வருவாய் இழப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. அதுவும் நவம்பர் 1ம் தேதி ஞாயிறு என்பதால் அரசுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது.

நவம்பர் 1ம் தேதி கடைகளை மூடி போராட்டத்தில் ஈடுபட்ட 960 பேருக்கு டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் கேட்டு 'மெமோ' அனுப்பியது இதில் 360 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தார்கள் தமிழகம் முழுவதும் நேற்று 2-வது நாளாக டாஸ்மாக் கடைகளை மூடி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையின் உள்புற பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன
சேலம் மாவட்டத்தில் 165 மதுக்கடைகளும், நாமக்கல் மாவட்டத்தில் 155 கடைகளும், தர்மபுரியில் 57 கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 110 மதுக்கடைகளில் சுமார் 50 கடைகள் மட்டுமே திறந்திருந்தன. சென்னை புறநகர் பகுதியான பள்ளிக்கரணை, வேளச்சேரி, ஒக்கியம் துரைப்பாக்கம், பெருங்குடி, சோழிங்கநல்லூர், புழல், பூந்தமல்லி, ரெட்டேரி ஆகிய புறநகர் பகுதிகளில் மட்டுமே கடைகள் திறக்கப்பட்டிருந்தது.




Click it and Unblock the Notifications
