டாடா குழுமத்தில் வெடித்த மோதல்.. சந்திரசேகரன் vs நோயல் டாடா சண்டைக்கு உண்மையான காரணம் என்ன?
சென்னை: இந்தியாவின் முன்னணி மற்றும் மிகப்பெரிய வர்த்தகக் குழுமமான டாடா சன்ஸில் மீண்டும் ஒரு மிகப்பெரிய தலைமை மோதல் வெடித்துள்ளது. டாடா சன்ஸ் நிறுவனத்தின் தற்போதைய தலைவராக இருக்கும் 63 வயதான என். சந்திரசேகரனுக்கு மேலும் 5 ஆண்டுகள் பதவி நீட்டிப்பு வழங்கி டாடா சன்ஸ் நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
ஆனால், இந்த முடிவை டாடா குழுமத்தின் பெரும்பான்மை பங்குகளை வைத்துள்ள டாடா டிரஸ்ட்ஸின் தலைவர் நோயல் டாடா மிகக் கடுமையாக எதிர்த்துள்ளார். சந்திரசேகரனை மீண்டும் தலைவராக்கியது முற்றிலும் சட்டவிரோதம் என்றும், அவரை மீண்டும் அதே பதவியில் அமர்த்துவது செல்லாது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ரத்தன் டாடா காலமான பிறகு அமைதியாகச் சென்று கொண்டிருந்த டாடா குழுமத்தின் ஆட்சி அதிகாரத்தில், இந்த திடீர் திருப்பம் இந்திய வணிக உலகையே பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நடந்தது என்ன? தொடக்கம் முதல் தற்போதைய சர்ச்சை வரை
டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக 2017 பிப்ரவரி மாதம் முதல் என். சந்திரசேகரன் செயல்பட்டு வருகிறார். இவரது பதவிக்காலம் 2027 பிப்ரவரி 20 அன்று முடிவுக்கு வரவுள்ளது.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 12 அன்று சந்திரசேகரன் டாடா சன்ஸ் இயக்குநர்கள் குழுவிற்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், தனது பதவிக்காலம் முடியும் போது தான் மீண்டும் தலைவர் பதவிக்கு வர விரும்பவில்லை என்றும், பதவியில் இருந்து முழுமையாக விலக முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
ஆனால், நேற்று நடைபெற்ற டாடா சன்ஸ் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் இந்த விவகாரத்தில் ஒரு பெரும் திருப்பம் ஏற்பட்டது. டாடா சன்ஸ் போர்டில் உள்ள பெரும்பாலான இயக்குநர்கள், சந்திரசேகரனைத் தனது முடிவை மாற்றிக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டனர். சந்திரசேகரனும் அதனை ஏற்றுக்கொண்டார். உடனே நிர்வாகக் குழுவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, சந்திரசேகரனுக்கு மேலும் ஐந்து ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்க 4-1 என்ற கணக்கில் ஆதரவாக வாக்களிக்கப்பட்டது. வேணு சீனிவாசன், ஹரிஷ் மன்வானி, சவுரப் அகர்வால், அனிதா ஜார்ஜ் ஆகிய நான்கு இயக்குநர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்தனர். ஆனால், கூட்டத்தில் பங்கேற்ற நோயல் டாடா இதற்கு எதிராக வாக்களித்து போர்க்கொடி தூக்கினார்.
நோயல் டாடா முன்வைக்கும் காரசாரமான வாதங்கள்
சந்திரசேகரனை மீண்டும் தலைவராக்கிய இந்த முடிவை எதிர்த்து நோயல் டாடா கடுமையான அறிக்கையையும் வாதங்களையும் முன்வைத்துள்ளார்.
அது அவரது சொந்த முடிவு
பதவியில் இருந்து விலகுவது என்பது சந்திரசேகரன் சுயமாக, சுதந்திரமாக எடுத்த முடிவு. நிர்வாகக் குழுவோ அல்லது பங்குதாரர்களோ அவரை விலகும்படி கேட்கவில்லை. அவர் எடுத்த முடிவை பொதுவெளியிலும் அறிவித்துவிட்டார். ஊழியர்கள், கடன் கொடுத்த வங்கிகள், சந்தை முதலீட்டாளர்கள் மற்றும் 66 சதவீத பங்குகளை வைத்துள்ள டாடா டிரஸ்ட் வரை அனைவரும் அவர் விலகுவதை ஏற்றுக்கொண்டு அடுத்தகட்ட வேலைகளைத் தொடங்கிவிட்டனர். அத்தியாயம் முடிந்துவிட்டது (The page has turned). இப்போது திடீரென மீண்டும் அவரைத் தலைவராக்குவது எப்படி சரியாக இருக்கும்?" என்று நோயல் டாடா கேள்வி எழுப்பியுள்ளார்.
குதிரைக்கு முன் வண்டியைப் பூட்டுவதா?
டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஆவதற்கு ஒருவர் முதலில் அந்த நிறுவனத்தின் இயக்குநராக (Director) இருக்க வேண்டும். சந்திரசேகரன் இயக்குநர் பதவியில் நீடிப்பதே தற்போது நிச்சயமற்ற நிலையில் உள்ளது. பொதுக்குழு கூட்டம் இன்னும் முழுமையாக முடிவடையாமல், அவர் இயக்குநராக நீடிப்பாரா என்ற தெளிவே இல்லாதபோது, அவரை நிறுவனத்தின் தலைவராக மீண்டும் நியமிப்பது முறையற்றது. இது குதிரைக்கு முன்னால் வண்டியைப் பூட்டுவது போன்றது என்று அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.
சட்ட சிக்கல்கள் வரும் என்ற எச்சரிக்கை
இயக்குநர் பதவியே முழுமையாக உறுதி செய்யப்படாத ஒருவரை தலைவராக நியமிப்பது நிறுவனத்திற்கு பெரும் சட்ட சிக்கல்களைக் கொண்டுவரும். எந்த ஒரு பங்குதாரரும் இதை நீதிமன்றத்தில் எதிர்த்து வழக்குத் தொடர முடியும். ரிசர்வ் வங்கி சார்ந்த முக்கிய முடிவுகள் இருக்கும் இந்த நேரத்தில், நிறுவனம் இதுபோன்ற சட்டப் போராட்டங்களில் சிக்குவது பேராபத்து என்றும் நோயல் டாடா எச்சரித்துள்ளார்.
டாடா டிரஸ்ட்டின் பலம் என்ன? சட்டம் சொல்வது என்ன?
உப்பு முதல் மென்பொருள் வரை பரந்து விரிந்த 180 பில்லியன் டாலர் மதிப்புள்ள மாபெரும் டாடா குழுமத்தின் தாய் நிறுவனம் டாடா சன்ஸ் ஆகும். இந்த டாடா சன்ஸ் நிறுவனத்தில் 66 சதவீத பங்குகளை டாடா டிரஸ்ட்ஸ் அமைப்பே தன் கைவசம் வைத்துள்ளது.
டாடா சன்ஸ் நிறுவன விதிகளின்படி, தலைவர் நியமனம் அல்லது மறுநியமனம் தொடர்பாக எடுக்கப்படும் எந்தவொரு முக்கிய முடிவுக்கும் டாடா டிரஸ்ட் நியமித்த இயக்குநர்களின் பெரும்பான்மை ஒப்புதல் கண்டிப்பாகத் தேவை. ஆனால், டிரஸ்ட் சார்பில் இயக்குநராக உள்ள நோயல் டாடா இதற்கு எதிராக வாக்களித்துள்ளதால், இந்த வாக்கெடுப்பு செல்லாது என்றும், இது சட்டப்படி பூஜ்யம் (Legal Nullity) என்றும் டாடா டிரஸ்ட் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. மேலும், நாட்டின் முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டின் சட்ட ஆலோசனையையும் நோயல் டாடா நிர்வாகக் குழுவிடம் சமர்ப்பித்துள்ளார்.
அடுத்தது என்ன நடக்கும்?
ஆகஸ்ட் மாதம் சந்திரசேகரன் விலகுவதாக அறிவித்தபோது, டாடா டிரஸ்ட் அவருக்குப் பதிலாக புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க சிறப்புக் குழுவை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தது. ஆனால், இப்போது டாடா சன்ஸ் நிர்வாகக் குழு சந்திரசேகரனைத் தொடர வைத்துள்ளதால் விவகாரம் உச்சக்கட்ட மோதலாக மாறியுள்ளது.
டாடா சன்ஸ் நிறுவனத்தின் பொதுக்குழுக் கூட்டம் டிசம்பர் 31-க்குள் நடைபெற வேண்டும். 66 சதவீத பங்குகளை வைத்துள்ள டாடா டிரஸ்ட், பொதுக்குழுவில் சந்திரசேகரனின் இயக்குநர் பதவி நீட்டிப்புக்கு எதிராக வாக்களித்து அவரை முழுமையாக நீக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒருபுறம் டாடா சன்ஸ் நிறுவனத்தை பங்குச்சந்தையில் பட்டியலிட வேண்டும் என்ற ரிசர்வ் வங்கியின் கட்டாயம்; மறுபுறம் டாடா குழுமத்தின் பாரம்பரியத்தை காக்க வேண்டும் என்ற டிரஸ்ட்டின் நிலைப்பாடு; இதன் நடுவே தலைவர் பதவிக்காக வெடித்துள்ள அதிகாரப் போர். கடந்த காலத்தில் சைரஸ் மிஸ்திரி விவகாரத்தில் நடந்த அதிகார மோதலைப் போலவே, டாடா குழுமத்தில் மீண்டும் ஒரு நீண்ட சட்டப் போராட்டம் தொடங்குமா என்ற பதற்றம் தற்போது இந்திய வர்த்தக வட்டாரத்தில் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications
