"அம்பானி கையில் டெலிகாம்.. பாஜக கையில் ராமர் கோயில்.. மக்கள் கையில் திருவோடு" நாஞ்சில் சம்பத் பரபர!
சென்னை: அம்பானியின் கையில் டெலிகாம், அதானியின் கையில் துறைமுகம், டாடாவின் கையில் ஏர்போர்ட் அரசின் கையில் ராமர் கோயில் இதனால் மக்களின் கையில் திருவோடு என்று நாஞ்சில் சம்பத் விமர்சித்துள்ளார்.
திமுகவின் 15வது பொதுக்குழு கூட்டம் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து இரண்டாவது முறையாக திமுக தலைவராக பொறுப்பேற்றார்.
இதன்பின்னர் மு.க.ஸ்டாலின் இரண்டாம் முறையாக தலைவராக பொறுப்பேற்றதை கொண்டாடும் வகையில் மாவட்ட வாரியாக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

திமுக பொதுக்கூட்டம்
அதன் ஒரு பகுதியாக திமுக கிழக்கு மாவட்டம் சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. கொரட்டூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளரும் அமைச்சருமான சேகர் பாபு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, திராவிட இயக்கப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நாஞ்சில் சம்பத் பேச்சு
இந்த பொதுக்கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேசுகையில், உலகெங்கும் கச்சா எண்ணை விலை குறைந்தாலும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல் டீசல் விலை குறையாமல் இருப்பதாக கூறினார். இதில் அடித்த கொள்ளை மட்டும் 29 லட்சம் கோடியை தாண்டிவிட்டதாக குற்றம்சாட்டினார். அதானி, அம்பானி கும்பலுக்கு மட்டும் 12 லட்சம் கோடி கடன் தள்ளுபடி. இதற்காகவா நாம் நரேந்திர மோடிக்கு மீண்டும் வாக்களிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.

மக்கள் கையில் திருவோடு
தொடர்ந்து, அம்பானியின் கையில் டெலிகாம், அதானியின் கையில் துறைமுகம், டாடாவின் கையில் ஏர்போர்ட் அரசின் கையில் ராமர் கோயில் இதனால் மக்களின் கையில் திருவோடு என விமர்சித்தார். அதிமுக ஆட்சி காலத்தில் கொடுத்த பல்வேறு வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை. அம்பேத்கர் பெயரில் அறக்கட்டளை தொடங்குவேன் என்று தெரிவித்தனர்.

இபிஎஸ் சிறை செல்வது உறுதி
அம்மா வங்கி அட்டை தருவேன், குடும்ப அட்டை அனைத்திற்கும் இலவச செல்போன், இரண்டு துணைக்கோள் நகரங்கள், மோனோ ரயில் என அதிமுக அறிவித்த 100க்கும் மேற்பட்ட திட்டங்களை நிறைவேற்றவே இல்லை. தற்போது இடைக்கால பொதுச்செயலாளர் பதவியில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி பின்னாளில் முதலமைச்சர் என கனவு காணும் கண்டுகொண்டிருக்கிறார். ஆனால் எடப்பாடி பழனிசாமி சிறைக்குச் செல்வது உறுதி என்று ஆவேசமாக தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications