தம்பி ஸ்டாலின் என் ஆயுளையும் எடுத்துக்கொள்ளட்டும்... சட்டசபையில் உருகிய துரைமுருகன்
நான் இன்னும் எத்தனை ஆண்டுகள் உயிரோடு இருப்பேன் என தெரியாது. ஆனால் என்னுடைய வாழ்நாளையும் எடுத்துக்கொண்டு என் தம்பி ஸ்டாலின் இன்னும் பல ஆண்டுகள் வாழ வேண்டும் என்று துரைமுருகன் கூறியுள்ளார்.
சென்னை: நான் இன்னும் எத்தனை ஆண்டுகள் உயிரோடு இருப்பேன் என்று எனக்கு தெரியாது என்றும், ஆனால் என்னுடைய வாழ்நாளையும் எடுத்துக்கொண்டு என் தம்பி ஸ்டாலின் இன்னும் பல ஆண்டுகள் வாழ வேண்டும் என்றும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சட்டசபையில் உருக்கமாக பேசினார்.
Recommended Video
திமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

இலவச பேருந்து பஸ் பயணம் தொடங்கி மக்களைத் தேடி மருத்துவம் வரைக்கும் தனது ஆட்சியின் ஓராண்டு கால சாதனைகளைப் பட்டியலிட்டார். ஆவின்பால் ரூ. 3 குறைக்கப்பட்டது, கொரோனா கால நிவாரண நிதி ரூ. 4000 தரப்பட்டதை தெரிவித்தார். நம்மைக்காக்கும் 48 திட்டம்,இல்லம் தேடி கல்வித்திட்டம் குறித்தும் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
இது திராவிட மாடல் அரசு என்று கூறிய அவர் ஓராண்டு ஆட்சி காலத்தில் கடல் போல சாதனைகள் செய்திருப்பதாக பெருமிதத்துடன் கூறினார். உக்ரைன் நாட்டு மாணவர்களை மீட்டு வந்ததையும் தெரிவித்தார். மகளிருக்கு இலவச பேருந்து பயணம் திட்டம் மூலம் ஆயிரம் ரூபாய் வரை மிச்சப்படுத்தியதாகவும் கூறினார்.
சமச்சீரான வளர்ச்சியை அடையும் வகையில் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 29C பேருந்தில் பயணித்து தான் நான் பள்ளிக்குச் சென்றேன். அந்த வழித்தட பேருந்தில் இன்று நான் ஆய்வு செய்தது மகிழ்ச்சி. மகளிருக்கு பேருந்தில் இலவசம் என்ற திட்டம் குறித்து 3 வழித்தடங்களில் 465 பயணிகளிடம் கருத்து கேட்கப்பட்டது. மகளிருக்கு பேருந்தில் இலவசம் என்ற திட்டம் மூலம் பெண்களின் மாத வருமானத்தில் 11% மிச்சமாகியுள்ளது. மகளிருக்கு பேருந்தில் இலவசம் என்ற திட்டம் மூலம் பெண்களுக்கு ரூ.600 முதல் ரூ.1,200 வரை மாதந்தோறும் மிச்சமாகியுள்ளது என்று கூறினார்.
அதன் பின்னர் அதிமுக தவிர்த்து பிற எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் திமுக அரசின் ஓராண்டு சாதனைகளை விளக்கி பாராட்டி பேசினர். அப்போது பேசிய துரைமுருகன் கடந்த ஓராண்டு காலத்தில் முதலமைச்சர் செய்த பல்வேறு விஷயங்களைப் பட்டியலிட்டு பேசினார்.
தன் பேச்சின் இறுதியில் "நான் இன்னும் எத்தனை ஆண்டுகள் உயிரோடு இருப்பேன் என தெரியாது. ஆனால் என்னுடைய வாழ்நாளையும் எடுத்துக்கொண்டு என் தம்பி ஸ்டாலின் இன்னும் பல ஆண்டுகள் வாழ வேண்டும்" என பேரவையில் உருக்கமாக பேசினார்.
அப்போது இடையில் பேசிய சபாநாயகர் அப்பாவு, எல்லோருடைய வாழ்த்துகளுடன் நோய் நொடி இல்லாமல் நீங்கள் 100 ஆண்டுகள் வரை இருப்பீர்கள் என அமைச்சர் துரைமுருகனை பார்த்து கூறினார். சட்டசபையில் இன்றைய தினம் வாழ்த்தும்... நன்றியும்... அறிவிப்புகளும்...உருக்கமான நிகழ்வுகளும் அரங்கேறின.












Click it and Unblock the Notifications