போட்டோ ஜர்னலிசத்தில் சாதிக்கும் தமிழ் பெண்.. அகிலா ஈஸ்வரனுக்கு 2021 NWMI Fellowship.. யார் இவர்??
சென்னை: தனது புகைப்படங்கள் மூலம் தொடர்ந்து வலிமையான கருத்துகளை மக்களிடம் எடுத்துச் சென்று வரும் அகிலா ஈஸ்வரனுக்கு The Network of Women in Media, Indiaஇன் பெல்லோஷிப் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் அகிலா ஈஸ்வரன். சிறுவயதில் இருந்தே இவருக்குப் புகைப்படங்களில் ஆர்வம் அதிகம். ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் படித்த இவர், அதன் பின்னர் தனக்குப் பிடித்த ஃபோட்டோகிராபி பணியைச் செய்யத் தொடங்கினார்.
முறையாகப் போட்டோ ஜர்னலிசம் படிப்பையும் படித்த அவர், அதன் பின்னர் பல முக்கிய செய்தி நிறுவனங்களிலும் பணியாற்றியுள்ளார். கொரோனா காலகட்டத்தில் அவரது ஆர்வம் டாக்குமென்டரி போட்டோ ஜர்னலிசம் மீது திரும்பியது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் மும்பை பாலங்களின் கீழ் வசிக்கும் பெண்கள், குழந்தைகள், திருநங்கை மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்க்கையை ஆவணப்படுத்தும் அகிலாவின் படங்கள் அவர்களின் உணர்ச்சிகளைத் தெளிவாகப் பதிவு செய்துள்ளது.
அதேபோல சிஏஏ எதிர்ப்புப் போராட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பங்கு குறித்து அகிலா எடுத்துள்ள புகைப்படங்கள் முக்கியமானது. இதற்காக அவருக்கு "Women Photojournalist Homai Vyarwalla Award 2020" என்ற விருதும் வழங்கப்பட்டது.
அரசின் கொள்கைகள் மற்றும் இயற்கை சீற்றங்களால் இருப்பிடங்களை விட்டு வெளியேற்றப்படும் தமிழக மீனவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளைத் தத்ரூபமாகப் படம்பிடிக்கும் பணிகளில் இப்போது அகிலா முழு வீச்சில் இறங்கியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், "பெண்ணாக இருப்பதும், போட்டோ ஜர்னலிஸ்ட் ஆக இருப்பதும் எனக்குப் பெருமை. ஃபோட்டோ ஜர்னலிசம் மீதான ஆர்வம் பல செயல்களைச் செய்ய எனக்கு உத்வேகமாக அமைந்தது" என்று கூறுகிறார்.
தொடர்ந்து ஃபோட்டோ ஜர்னலிசம் பிரிவில் சிறப்பான பணியை அளித்து வரும் அகிலா ஈஸ்வரனுக்கு The Network of Women in Media, Indiaஇன் 5ஆவது பெல்லோஷிப் வழங்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications