பருப்பில் உசந்தது மந்திரி, விஜய் அண்ணா முதல் மந்திரி.. தவெக நிர்வாகிக்கு தனுஷ் பாணியில் திமுக பதில்
சென்னை: இன்று செங்கல்பட்டு மாவட்டம் தொழுப்பேடு பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், தவெக வேட்பாளரை ஆதரித்துப் தவெக தலைவர் விஜய் பேசிக் கொண்டிருந்தார். அப்போது குறுக்கிட்ட தவெக நிர்வாகி ஒருவர், "எப்பா திமுக மூத்தவங்களே! பருப்பில் உசந்தது முந்திரி, பதவியில் உசந்தது மந்திரி, எங்கள் விஜய் அண்ணன் தமிழ்நாட்டினுடைய முதல் மந்திரி, நன்றி வணக்கம்" என்று கூறினார். இந்த வீடியோவை தவெகவினர் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
இதற்கு பதிலடியாக, திமுகவினர் நடிகர் தனுஷ் மற்றும் பிரகாஷ் ராஜ் நடித்துள்ள திரைப்படக் காட்சி ஒன்றை இணையத்தில் பரப்பி வருகின்றனர். அந்த வீடியோவில் தனுஷ் பேசும்போது: "பருப்பில் உசந்தது முந்திரி, பதவியில் உயர்ந்தது மந்திரி என்று சொன்னீங்களே... அது நல்லாத்தான் இருந்தது. ஆனால் உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? மளிகைக்கடை லிஸ்ட்டில் கூட துவரம்பருப்பு, உளுந்தம்பருப்பு, பாசிப்பருப்பு, பச்சைப்பருப்பு, கடலைப்பருப்பு என எல்லாவற்றையும் கிலோ கணக்கில் தான் எழுதுவார்கள்.

ஆனால் முந்திரிப்பருப்பை மட்டும் 50 கிராம், 100 கிராம் என கிராம் கணக்கில் தான் எழுதுவார்கள். பாயாசத்தில் கூட அள்ளிப்போட மாட்டார்கள்; கிள்ளித்தான் போடுவார்கள். அதை அதிகமாக வாங்கினால் காசு காலி; அதிகமாகச் சாப்பிட்டால் உடம்பு காலி! அதேபோலத்தான் மந்திரி பதவியும். சின்னத்தை மாற்றி அமுக்கினோம் என்றால், பதவி இல்லாமல் ரோட்டில் நிற்க வேண்டும்; இல்லையென்றால் கோர்ட்டில் நிற்க வேண்டும்" என்று தனுஷ் குறிப்பிட்டிருப்பார். இந்த இரண்டு வீடியோக்களும் தற்போது சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.
விஜய்யின் பிரச்சார உரை
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் தவெக சார்பில் மரகதம் குமரவேல் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து, தவெக தலைவர் விஜய் தொழுப்பேடு பகுதியில் இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
ஆணவத்துல வசனம் பேசிட்டு இருக்கானுக ஆட விட்டு அடிக்கிறோம் 🖤♥️🔥 pic.twitter.com/6wUnW3S4Xm
— MR. கொடி🖤❤️ (@Mr_kodi_2k) September 25, 2026
பிரச்சாரத்தில் விஜய் பேசியதாவது: "நான் இன்று முதலமைச்சராக வரவில்லை; இடைத்தேர்தலுக்காக வாக்கு கேட்க வந்திருக்கிறேன். உங்கள் வீட்டுப் பிள்ளையாக, உங்கள் வீட்டு மகனாக, உங்கள் வீட்டு அண்ணனாக, உங்கள் வீட்டுத் தம்பியாக வந்திருக்கிறேன். உங்களிடம் ஒரே ஒரு கேள்வியைத்தான் கேட்கிறேன்.
விஜய் ஏன் ஆட்சிக்கு வரக்கூடாதா? உங்கள் தவெக ஆட்சிக்கு வரக்கூடாதா? தனிக்கட்சியான சாமானியர்களின் கட்சி, பெண்களின் பேராதரவோடும் குடும்பங்களின் பேராதரவோடும், பெண்களின் பாதுகாப்பிற்காக, போதைப்பொருளை ஒழிக்க, ரொம்ப முக்கியமாக லஞ்சத்தையும் ஊழலையும் ஒழிக்க ஏன் உங்கள் விஜய் ஆட்சிக்கு வரக்கூடாதா?
தினமும் ஏன் இந்த திமுக... சாரி, தீயசக்தி... கொஞ்சம் 'டச்' விட்டுப்போச்சு. நம்மையும் நமது கட்சியையும் பார்த்து தினமும் அவதூறாகவும், அசிங்கமாகவும், ஆபாசமாகவும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்; நாட்டில் ஆபாசம் நதியாக ஓடிக் கொண்டிருக்கிறது. இவற்றை ஏன் பேசுகிறார்கள் என்றே தெரியவில்லை. இதையெல்லாம் நீங்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறீர்கள்.
நான் சினிமாவில் ஜெயித்ததற்கும், அரசியலில் ஜெயித்ததற்கும் தமிழ்நாட்டு மக்களாகிய என்னுடைய உறவுகள்தான் காரணம். அந்த உறவுகளால்தான் கட்சி ஆரம்பித்து கிட்டத்தட்ட 2.5 ஆண்டுகளிலேயே 35% வாக்குகள் பெற்று நம்மால் ஜெயிக்க முடிந்தது; ஒரு தனிப்பெரும் கட்சியாகத் தமிழ்நாட்டில் நம்மால் ஜெயிக்க முடிந்தது.
அன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை இதே ஸ்டாலின் சார் அவர்கள் அவதூறாகப் பேசிய வீடியோ இன்றைக்கும் பரவிக் கொண்டிருக்கிறது. அவர் மட்டுமல்ல, அவர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும், அந்தக் கட்சியில் பெரிய பொறுப்புகளில் இருப்பவர்களும் அப்படித்தான் பேசுகிறார்கள். இதையெல்லாம் மக்களாகிய நீங்கள் மிகவும் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.
இப்படி திமுக ஒருபக்கம் பேசிக் கொண்டிருக்கிறது என்றால், இதற்கு மறைமுகமாக ஆதரவு அளிப்பது யார் தெரியுமா? 'மற்றும் பலர்'. 'மற்றும் பலர்' என்றால் யார் தெரியுமா? அதிமுகதான்! ஜெயலலிதாவையே தவறாகப் பேசியவர்களுடன் ஒன்றாக இணைந்து ஆட்சியமைக்கத் திட்டம் தீட்டியபோதே, இந்த 'மற்றும் பலரின்' திட்டம் என்ன என்பது தெரியவந்துவிட்டது. அப்போதே அவர்களின் முகமூடியெல்லாம் கிழிய ஆரம்பித்துவிட்டது.
இதில் 'ஹைலைட்' என்னவென்றால், தங்கள் முகமூடி கிழிந்துவிட்டது என்பது தெரியாமலேயே அவர்கள் கூவிக் கொண்டிருக்கிறார்கள். யார் கூவினால் நமக்கு என்ன?
அதனால் மதுராந்தகம் தொகுதி மக்களே, இந்த இடைத்தேர்தலில் நமது தவெக சார்பில் போட்டியிடும் உங்கள் சகோதரி, நம் வீட்டுப் பெண், எனது தங்கச்சி மரகதம் குமரவேலுக்கு தயவுசெய்து விசில் சின்னத்தில் வாக்களியுங்கள். நீங்கள் 'விசில்' சின்னத்திற்கு அளிக்கும் வாக்கு, பெண்களை அவதூறாகவும் ஆபாசமாகவும் அசிங்கமாகவும் பேசுகின்ற ஒவ்வொருவருக்கும் நீங்கள் கொடுக்கும் மிகப்பெரிய தண்டனையாக இருக்கும்" இவ்வாறு விஜய் பிரச்சாரத்தில் பேசினார்.


Click it and Unblock the Notifications
