அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்த உயர்நீதிமன்றம், அவசரமாக வழக்கை வாபஸ் பெற்ற அதிமுக பின்னணி என்ன?
சென்னை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் காவல்துறை அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்ததாக அதிமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கில் அபராதம் விதிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்ததால் வழக்கு திரும்பப் பெறப்பட்டதால் தள்ளுபடி செய்யப்பட்டது.
அதிமுகவின் தேர்தல் பிரிவு துணை செயலாளர் ஐ.எஸ்.இன்பத்துரை சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றினை தாக்கல் செய்தார்.
அதில், தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகின்ற 19ம் தேதி நடத்தபடும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது எனவும், தேர்தல் அறிவிப்பாணை வெளியிடப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன என கூறப்பட்டிருந்தது.

அதிமுக மனு
அதன் பிறகு அரசு அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்ய மாநில தேர்தல் ஆணையத்திற்கு தான் அதிகாரம் உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு மாறாக கடந்த 29ம் தேதி தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் காவல்துறையில் 17 அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்த உத்தரவு தேர்தல் நடத்தை விதிகளுக்கு முரணாக உள்ளதால் 17 அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்த தமிழக அரசின் உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

சென்னை உயர்நீதிமன்றம்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளவரை தமிழக அரசும், டிஜிபியும் காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் அதிமுகவின் தேர்தல் பிரிவு துணை செயலாளர் ஐ.எஸ்.இன்பத்துரை மனுவில் தெரிவித்துள்ளார்.

அரசியல் உள்நோக்கம்
இந்த வழக்கு உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வரர்நாத் பண்டாரி தலைமையிலான முதல் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழிக அரசு சார்பில் அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் மற்றும் அரசு ப்ளீடர் பி.முத்துகுமார் ஆகியோர் ஆஜரானார்கள். வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும், அரசியல் உள்நோக்கத்தோடு தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து அபராதம் விதிக்க வேண்டும் என்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

நீதிபதிகள் எச்சரிக்கை
வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கை பொதுநல வழக்காக எடுத்துக்ககொள்ள முடியாது, அரசியல் உள்நோக்கத்தோடு தொடரப்பட்ட வழக்கு என்றும் உள்ளாட்சித் தேர்தலை தடை செய்ய வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கு என்பதனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்து அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்தனர் இதையடுத்து மனுதாரர் தரப்பில் மனுவைத் திரும்பப் பெறுவதாக தெரிவித்ததால் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications